ஆ...ட்டோ கட்டணம் : காலதாமதமாகும் கட்டண நிர்ணயம்: அதிர்ச்சியளிக்கும் ஆட்டோ வாடகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆ...ட்டோ கட்டணம் : காலதாமதமாகும் கட்டண நிர்ணயம்: அதிர்ச்சியளிக்கும் ஆட்டோ வாடகை

Added : ஜூலை 31, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 ஆ...ட்டோ கட்டணம் : காலதாமதமாகும் கட்டண நிர்ணயம்: அதிர்ச்சியளிக்கும் ஆட்டோ வாடகை

மதுரையில் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டண நிர்ணயிப்பது கானல் நீராகவே உள்ளது. ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் அடாவடி கட்டண வசூலால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை 4 வாரத்திற்குள் நிர்ணயம் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் ஆட்டோக்களுக்கு 1.5 கி.மீ., க்கு ரூ. 20, அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் சிலர் வழக்கு தொடர்ந்து விட்டதால், கட்டண நிர்ணயம் அமலுக்கு வரவில்லை.

மதுரையில் 11 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டண நிர்ணயம் செய்வது, கானல் நீராகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மாட்டுத்தாவணியில் இருந்து "பிரீபெய்டு' முறையில் ஆட்டோக்களுக்கு கட்டணம் செலுத்தி, பயணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதையும் நீர்த்துப் போகச் செய்து விட்டனர். இதனால் ஆட்டோக்களில் இஷ்டத்திற்கு கட்டணம் கறாராக வசூலிக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஒரு கி.மீ., தூரத்திற்குள் செல்ல ரூ. 50 "கறக்கும்' ஆட்டோ டிரைவர்கள், ரயிலில் வந்திறங்கும் வெளியூர்வாசிகளிடம் விரும்பியபடி வசூலிக்கின்றனர். இரவில் இந்த கட்டணம் இரு மடங்காகும்.இக்கட்டணக் கொள்ளையால்தான், ஷேர் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 வாங்கிக் கொண்டு, விரும்பிய இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கும் ஷேர் ஆட்டோக்கள் விதிமீறி வீதிகளில் வலம் வருகின்றன. ஏதோ பயணிகள் கூட்டம் பஸ் ஸ்டாப்புகளில் குவிந்து "சட்டம் ஒழுங்கு' பிரச்னைக்கு வழிவகுக்காமல் உள்ளதே எனக்கருதி, போலீசாரும், போக்குவரத்துத் துறையினரும் இதை கண்டும் காணாமல் உள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் மீட்டர் கட்டணம் நிர்ணயம் குறித்து கண்டுகொள்வதே இல்லை. ஆட்டோ டிரைவர்கள், "அவ்வப்போது ஏற்றப்படும் பெட்ரோல், காஸ் விலைக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் இந்த ஏற்ற, இறக்கத்தை எப்படி சமாளிப்பது?,' என கேள்வி எழுப்புகின்றனர். அதற்காக அடாவடி வசூலில் ஈடுபடலாமா? என பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தினர், போக்குவரத்து அதிகாரிகள் இனியாவது ஆட்டோ தொழிற்சங்கங்கள், நுகர்வோர் அமைப்பினருடன் ஆலோசித்து, மீட்டர் கட்டண நிர்ணயத்தை அமல்படுத்த வேண்டும்.

போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆட்டோக்கள் கட்டணத்தை கண்டபடி வசூலிப்பதாலும், பஸ்கள் போதிய அளவில் இல்லாததாலும், விரும்பிய இடத்தில் ஏறி இறங்கும் வசதி இருப்பதாலும், ஷேர் ஆட்டோக்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு வரவேற்பு கிடைத்ததால், டாக்சி, கார்களை ஓட்டிய டிரைவர்கள் கூட இதற்கு மாறிவிட்டனர். இந்த ஆட்டோக்களில் தினமும் எல்லா செலவும் போக, நிகரலாபமாக ரூ. ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் வசதிஉள்ளவர்கள் நான்கைந்து ஷேர் ஆட்டோக்களை வாங்கி, வாடகைக்கு விட்டு, மாதம் ரூ. ஒரு லட்சம் வரை சம்பாதிக்கின்றனர், என்றார்.


ஆலோசித்து முடிவு: கலெக்டர் :

கலெக்டர் எல்.சுப்ரமணியன்: கலெக்டராக பொறுப்பு ஏற்றபின், துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து போக்குவரத்து அலுவலர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்.

போக்குவரத்துத் துறை துணைக்கமிஷனர் பி.முருகானந்தம்: ஆட்டோ கட்டணத்தை நான்கு வாரங்களுக்குள் நிர்ணயம் செய்யும்படி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. கட்டணத்தை அரசு முடிவு செய்து, கலெக்டர்களுக்கு தெரிவிக்கும். அதன்படி விரைவில் ஆட்டோ கட்டணம் மதுரையிலும் நிர்ணயிக்கப்பட்டு அமலுக்கு வரும். இதற்கான உத்தரவு விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்.


மனசு வைக்குமா மாநகராட்சி:

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்கள், ரோடுகளில் தான், பெரும்பாலான ஆட்டோ ஸ்டாண்ட்டுகள் செயல்படுகின்றன. அவற்றால், மாநகராட்சிக்கு எந்த வகையிலும் வருமானம் இல்லை. சைக்கிள், பைக், கார், வேன், லாரிகளுக்கு "பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர்ந்து, ஸ்டாண்ட்டுகளை பயன்படுத்தி வரும் ஆட்டோக்களிடம், இதுவரை "பார்க்கிங்' கட்டணத்தை மாநகராட்சி வசூலித்ததில்லை. இத்தனை வசதிகள் இருந்தும்கூட, ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் கட்டணம் "நியாயமாக' இல்லை. மாநகராட்சி மனம் வைத்தால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.


விரைவில் "ஆட்டோ பே':

மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால்: பெரியார் பஸ் ஸ்டாண்டில், இதற்கான நடவடிக்கையை துவங்கிய போது, சிலர் கோர்ட்டிற்கு சென்றனர். சட்டப்படி, அப்பிரச்னையை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதன் பின், மாநகராட்சி முழுவதிலும் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகள், ஒழுங்குபடுத்தப்படும். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், "ஆட்டோ பே' முறை செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள், முடியும் தருவாயில் உள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் செயல்படுவதை விட, சிறப்பான முறையில் திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஒரு வாரத்தில், "ஆட்டோ பே' முறை, மாட்டுத்தாவணியில் செயல்படும்.


கட்டுபடியாகுமா கட்டண நிர்ணயம்:

மீட்டர் கட்டணம் நிர்ணயிப்பது குறித்து, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்:

பால முருகன், சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிற்சங்க பொது செயலாளர்: மீட்டர் கட்டணம் நிர்ணயத்தை வரவேற்கிறோம். பெட்ரோல் விலை இன்று ரூ.74 ஆக உயர்ந்து விட்டது. இந்த விலையுர்வை யாரிடம் நாங்கள் வசூலிக்க முடியும்? மக்களிடம் தான் வாங்க இயலும். ஒரு கிலோ மீட்டருக்கு மேல் ரூ.30ம், குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 என நிர்ணயிக்கலாம். ஏற்கனவே அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கிறோம். கால் டாக்சி நிறுவனத்தினர் அவர்களாக கட்டணம் நிர்ணயித்து கொள்கின்றனர்.

ஆதி, அண்ணா ஆட்டோ தொழிற்சங்க பொருளாளர்: மானிய விலையில் மீட்டர் வாங்கினால் பொருத்த தயார். மூன்று பேரை ரூ.10க்கு ஷேர் ஆட்டோக்களில் ஏற்றி செல்வதால், எங்களுக்கு போதிய சவாரி கிடைப்பதுஇல்லை. பெட்ரோல், டீசல் விலை ஏறியும், நாங்கள் பழைய கட்டணத்தை தான், வசூலிக்கிறோம். "அபே' ஆட்டோக்களில் 3 பிளஸ் 1 மக்களை ஏற்றலாம். ஆனால் நாங்கள் ஏற்ற அனுமதியில்லை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, கட்டணத்தை நிர்ணயித்து, மீட்டர் பொருத்தினால், நாங்களும் அதிக பயணிகளை ஏற்ற மாட்டோம்.

தெய்வேந்திரகுமார், பைபாஸ் ரோடு ஆட்டோ சங்கப் பொருளாளர்: ஒரு ஆட்டோவில் மூவர் மட்டும் பயணிக்கலாம். ஷேர் ஆட்டோக்களில் இஷ்டத்திற்கு ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால், குறைந்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை.ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சம் ரூ.15 ஆக உள்ளது. பெட்ரோல் விலையை கணக்கிடும்போது இந்தக் கட்டணம் மிகக்குறைவு. குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.25 ஆக உயர்த்தலாம். பொன்மேனி - பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு ரூ.50 வசூலிக்கிறோம். ரிட்டர்ன் சவாரி கிடையாது. விலை ஏற்றத்தை கணக்கிட்டு, குறைந்தபட்சம் ரூ.30 என நிர்ணயிக்க வேண்டும். கால்டாக்சி, ஷேர்ஆட்டோ வருகைக்கு பின் ஆட்டோ தொழில் நலிவடைந்து விட்டது. மீட்டர் கட்டணத்தை முறைப்படுத்தினால் சந்தோஷம் தான்.

பூமி, ஆட்டோ டிரைவர் (எந்த தொழிற்சங்கத்திலும் சேராதவர்): கால் டாக்சிகள் வரவால் ஆட்டோ தொழில் நலிவடைந்து விட்டது. மக்கள், ஆட்டோவில் செல்வதை விட, டாக்சியில் செல்வதை கவுரவமாக நினைக்கின்றனர். குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். ஒரு இடத்திற்கு சவாரி சென்றால், திரும்ப வருதற்கு மீண்டும் சவாரி கிடைத்தால் தான் லாபம். அப்படி கிடைப்பதில்லை. பத்து ரூபாய் அதிகம் கேட்டாலும், மக்கள் வர மறுக்கின்றனர். 3 பேர் மட்டுமே ஏற்ற அனுமதியுள்ளது. ஆனால் குடும்பத்தினருடன் ஏறுவோர், சிக்கனம் கருதி அதிகமாக ஏறுகின்றனர். எங்களால் அவர்களை தடுக்கவும் முடியவில்லை.


ஆட்டோ கட்டணம் எப்படி மக்கள் குமுறல்:

சத்யா, மாட்டுத்தாவணி: எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை தாண்டி சிறிது தூரம் செல்ல வேண்டும் என்றாலும் கூட, ரூ.20 வரை கேட்கின்றனர். கொடுக்க மறுத்தால் வழியில் நிறுத்தி, இறங்க சொல்லி வாக்குவாதம் செய்கின்றனர். இரவு நேரங்களில் இரண்டு மடங்கு கட்டணத்தை அடாவடியாக வாங்குகின்றனர். எந்த பகுதிக்கு எவ்வளவு கட்டணம் என்று நிர்ணயித்து, கட்டண பட்டியலை மக்கள் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும். மீட்டர் கட்டணம் நிர்ணயித்தால் நல்லது. ஆட்டோவை தவிர்த்து, வேறு வழியில்லாமல் அதிக நெரிசலில், ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது.

ரமேஷ், அய்யர்பங்களா: அய்யர்பங்களாவிலிருந்து தல்லாகுளம் செல்ல ரூ.110 ஆட்டோக்களில் கேட்கின்றனர். ஷேர்ஆட்டோக்களில் பெரியார் பஸ் ஸ்டாண்ட், செல்ல ரூ.10 தான் வாங்குகின்றனர். இதனால் தான் ஆட்டோக்களை மக்கள் தவிர்க்கின்றனர். அவசர நேரத்தில் கூட பேரம் பேசி நேரத்தை வீணடிக்கின்றனர். கிலோ மீட்டருக்கு இவ்வளவு என கட்டணம், நிர்ணயிக்க வேண்டும். சிலர் வேகமாக செல்வதால் விபத்தும் ஏற்படுகிறது. கால் டாக்சிகளில் இந்த பிரச்னைகள் இல்லை. கொடுத்த கட்டணத்திற்கு ரசீது வழங்குகின்றனர். ஆட்டோவிலும் ரசீது வழங்க வேண்டும்.

கிருஷ்ணவேணி, குடும்பத்தலைவி, கரிமேடு: சொந்த அலுவல் காரணமாக கரிமேட்டில் இருந்து எஸ்.எஸ். காலனிக்கு ஆட்டோவில் சென்று, வருகிறேன். போக, வர கட்டணம் ரூ.80. மீட்டர் பொருத்தினால் கட்டணம் பாதியாக குறையும். கூடுதல் கட்டணம் கேட்கும் ஆட்டோ டிரைவர்களால், ஷேர் ஆட்டோ எவ்வளவோ மேல் என மக்கள் செல்கின்றனர். சில டிரைவர்கள் நியாயமான கட்டணம் கேட்கின்றனர். சென்னையில் மீட்டர் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு கூடுதல் கட்டணம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மதுரையிலும் மீட்டர் கட்டணம் அமல்படுத்தினால் நல்லது. மாவட்ட நிர்வாகம், ஆட்டோ சங்கங்கள் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும்.


ஆட்டோ சங்கம் பெயரில் ஆக்கிரமிப்புகள்:

மதுரையில், அனுமதி பெற்றதாக எந்த ஆட்டோ ஸ்டாண்டையும் கூற முடியாது. சங்க பதிவை, அனுமதியாக கருதி, ஆட்டோ டிரைவர்கள் செயல்படுகின்றனர். கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொண்டு, வேறு ஆட்டோ அப்பகுதியில் வந்தால், உள்ளே இருக்கும் பயணியை கூட பொருட்படுத்தாமல், தகராறு செய்வது, பல இடங்களில் நடக்கிறது.ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்து கொண்டு, அக்கட்சித் தலைவரின் படம் வரைந்த போர்டுகளை வைத்து, பட்டா இடத்தை பயன்படுத்துவதைப் போல, பொது இடங்களை உபயோகிக்கும் நிலை மதுரையில் உள்ளது. எங்கெங்கோ ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர்; ஆட்டோ ஸ்டாண்ட்டுகளின் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் விலை ஏறினால், கட்டணத்தில் ரூ.10யை உயர்த்துகின்றனர். அந்தந்த ஆட்டோ சங்கத் தலைவரின் முடிவின்படி கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் கட்டணத்தில் தான், பயணிக்க வேண்டியுள்ளது. "என்னங்க இவ்வளவு கட்டணமா...' என, வாடிக்கையாளர் கேட்டால், "இது தான் கட்டணம்,' என சில டிரைவர்கள் கறந்து விடுகின்றனர். ஆட்டோ ஸ்டாண்ட்டுகளை முறைப்படுத்தவும், மீட்டர் கட்டணம் மட்டும் வசூலிக்கும் ஆட்டோக்களை அங்கு நிறுத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
31-ஜூலை-201316:18:37 IST Report Abuse
பாமரன் அப்பாடா....ஒரு வழியா தினமலருக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு கண்ணுல பட்டுடிச்சு...ரொம்ப சந்தோசம்....ஆனா திமுக, காங்கிரச விமர்சனம் செய்யறதுல இருக்கிற காட்டம் இந்த பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயத்துல காணோமே????? ஒரு புண்ணியவான் மெட்ராசுல ஆட்டோ மீட்டர் போட்டு வசூலிக்கிறதா சொல்லியிருக்காரு.....அனேகமா 1980 க்கு பிறகு அவர் சென்னை வந்துருக்க மாட்டாருன்னு தோணுது....டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை மட்டும்தான் ஆட்டோ மீட்டர் போட சொல்லி காட்டு கத்தலா கத்திகிட்டு இருக்கு....ஆனா நம்ம (செவிட்டு) ஆபீசருங்க வழக்கம் போல மாமூல் வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்காங்க.....இப்பல்லாம் தினமலர்ல எதாவது ஏடாகூடமான செய்தி வந்தா ...(அதாவது குறைகளை சுட்டிக்காட்டி ) இந்த அரசு பாஞ்சு வந்து நடவடிக்கை எடுக்குது....இவங்க மனசு வச்சா நடக்கும்னு தோணுது....என்னால முடிஞ்சது, சென்னையில ஆட்டோல போகிறத நிறுத்திட்டேன்....ஆனா எல்லாராலயும் இத செய்ய முடியுமா???? ஆட்டோங்க இப்போ சென்னையின் அசிங்கம்னு சொன்னா சரியா இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை