புதுடில்லி:ஆந்திராவை இரண்டாக பிரித்தது போன்று உத்திரபிரதேசத்தையும் நான்காக பிரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் கிட்டத்தட்ட உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விதர்பா, போடோலாந்து, கூர்க்காலாந்து ஆகிய மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்து தனி மாநில கோஷம் ஒலிக்கத் துவங்கிவிட்டது.
60 ஆண்டுகால போராட்டத்தின் பலனாக ஆந்திராவை இரண்டாக உடைத்து தெலுங்கானா தனி மாநிலத்திற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவாக உள்ளது.
திருப்பி அனுப்பிய மத்திய அரசு
கடந்த ஆண்டு ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்தன. இதில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போதைய முதல்வராக இருந்த பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, தனது பதவி காலம் நிறைவடையும் முன்னர், உ.பி.யை நான்காக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைத்தார். சட்டசபை தீ்ர்மானத்தையும் அனுப்பி வைத்தார். ஆனால் எந்த காரணமின்றி அத்தீர்மானம் மத்திய அரசால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
நான்காக பிரிக்க வேண்டும்
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறித்து இன்று மாயாவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதை வரவேற்கிறேன். இதற்கு முன்னர் உத்திரபிரதேச மாநிலத்தை நிர்வாக வசதிக்காக நான்காக பிரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் மத்திய அரசு திருப்பி செவிசாய்க்கவில்லை. தற்போது ஆந்திராவை பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே போன்றே உ.பி.யையும் , பண்டல்கண்ட்,பூர்வாஞ்சல், ஹரீத் பிரதேசஷ், என பிரிக்க வேண்டும். இதன் மூலம் நிர்வாக வசதி எளிமையாகும். சிறிய மாநிலங்கள் பிரிக்கப்படுவதை நான் எப்போதும் வரவேற்பேன். இதற்கு தற்போதைய சமாஜ்வாதி கட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஆனால் தற்போது, முதல்வராக உள்ள அகிலேஷ் அதற்காக நடவடிக்கை எதும் எடுக்கவில்லை என்றார்.
பெண் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட்டிற்கு கண்டனம்
இதற்கிடையே, கிரேட்டர் நொய்டாவின் மாஜிஸ்திரேட்டான, பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா சக்தி நெக்பால், மணல் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்த காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இது குறித்து மாயாவாதி பேசுகையில், கவர்னர் தலையிட்டு இதற்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.