Uratha sindanai | உரத்த சிந்தனை: பறி போகும் இந்திய வணிகம்| Dinamalar

உரத்த சிந்தனை: பறி போகும் இந்திய வணிகம்

Updated : ஆக 18, 2013 | Added : ஆக 18, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உரத்த சிந்தனை: பறி போகும் இந்திய வணிகம்

நமது நாடு, 120 கோடி மக்கள் தொகையையும், மிகப்பெரிய வாங்கும் சந்தையையும் கொண்ட நாடு. சேமிப்பு என்ற உணர்வு, இந்திய ரத்தத்தில் இரண்டறக் கலந்தது. உலகில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் போது, அமெரிக்க நாட்டில் நூற்றுக்கணக்கான வங்கிகள் திவால் நிலைக்கு ஆளாயின. அப்போது கூட, இந்தியாவில் அந்த நிலை, ஒரு வங்கிக்கு கூட ஏற்படவில்லை.

இத்தகைய நாட்டில், சந்தையை பரப்பினால் அபரிதமான கொள்ளை லாபம் அடையலாம் என்ற பேராவல் கொண்டு, இங்கு உள்ள சில்லரை வணிகத்துறை மீது குறி வைத்து, அதை அடைய பல்வேறு வழிகளிலும் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்கின.மத்திய அரசு, நாட்டை பற்றியோ, மக்களைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளவில்லை. பார்லிமென்டின், இரண்டு அவைகளிலும், ஒரு கூட்டத்தொடர் முழுமையுமே நடக்க விடாமல், அனைத்து கட்சியினரும் ஸ்தம்பிக்க வைத்த போதும், இந்திய நாடு முழுவதும் முழுமையான பந்த் நடத்தி, மக்கள் தங்களது பரிபூரண எதிர்ப்பை தெரிவித்த போதும், எதையுமே சட்டை செய்யாமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, இந்திய சில்லரை வணிகத்தில் அனுமதி வழங்குவதையே குறியாக கொண்டு, மத்திய அரசு செயல்படுகிறது. தன் செயலை நியாயப்படுத்தி, மத்திய அரசு முன் வைத்த வாதங்கள்: இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு செய்யும் நிறுவனங்கள், தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களில், 30 சதவீதத்தை இந்திய சிறு தொழிற்துறையினரிடம்தான் வாங்க வேண்டும். மேலும் தாங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரும் முதலீட்டில் பாதியை, (50 சதவீதம்) இந்தியத் தொழில்கள் பின்புல கட்டமைப்புகளுக்கு செலவிட வேண்டும் என்ற, மிக முக்கியமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.எனவே, இங்கு விளையும் பொருட்களுக்கு, இடைத்தரகர் எதுவுமின்றி மிக லாபகரமான விலை விவசாயிகளுக்கு கிடைத்து, அவர்களது வாழ்வில் பாலும், தேனும் ஓடும். இந்தியா விடுதலை அடைந்து, 67 ஆண்டுகள் ஆகியும், இந்திய மண்ணில் கஷ்டப்பட்டு விளைவிக்கப்படும் வேளாண் பொருட்களில், 3ல், 2 பங்கை சேமித்து வைக்க, பெரிய சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கூடங்கள் போன்ற வசதிகள் கிடையாது. எத்தனையோ ஐந்து ஆண்டுத் திட்டங்களை நிறைவேற்றியும், அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அரசு, இந்த கட்டமைப்புகள் எல்லாம், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதின் மூலம் ஏற்படுத்தப்படும் என்ற, மாய்மால வார்த்தைகளையும், மத்திய அரசு கூறியது.

மேலும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் மட்டுமே, அன்னிய கடைகள் திறக்கப்படும். எனவே, சிறு வணிகர்கள் அஞ்சத் தேவையில்லை எனவும், போலி ஆறுதல் சொன்னது. முதலில், இந்த நிபந்தனைகளை எல்லாம் ஏற்று, இங்கே உள்ளே நுழைந்த பிறகு, தற்போது ஆட்சியாளர்களின் கையை முறுக்கி, தங்களது சுயரூபத்தை காட்ட முற்பட்டிருக்கிறது, "வால்மார்ட்' நிறுவனம்."இந்திய சிறு தொழில் கூடங்களில், 30 விழுக்காடு பொருட்களை வாங்குவது எங்களுக்கு சாத்தியமில்லை' என்று, வால்மார்ட் வெளிப்படையாக அறிவித்தபோது, "அப்படி என்றால் இந்திய மண்ணில் உங்களுக்கு இடமில்லை, வெளியேறி விடுங்கள்' என்று, சொல்லும் துணிவு ஏன் நமது ஆட்சியாளர்களுக்கு இல்லை!வால்மார்ட் நிறுவனம், மனம் குளிரும் வகையில் இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், போலி நிறுவனங்களை அவர்களே இந்தியாவில் தோற்றுவித்து, அவற்றில் மட்டுமே அந்த கொள்முதலை மேற்கொள்வர். பன்னாட்டு நிறுவனங்கள் குளிர்பானத் துறையில் நுழைந்த பின், எப்படி இந்திய குளிர்பானத்துறைக்கு சமாதி கட்டப்பட்டதோ, அதே நிலை தான், இப்போதும் இந்திய சில்லரை வணிகத்திற்கு ஏற்பட இருக்கிறது.


கட்டமைப்பிற்கும் கைவிரிப்பு :

மேலும், மிக முக்கியமான நிபந்தனையான, அரசு மிகவும் தம்பட்டமடித்த, இந்திய பின்புல கட்டமைப்புக்காக, 50 சதவீதம் செலவிடப்பட்டு, இந்தியாவெங்கும் சேமிப்புக் கிடங்குகள், குளிர்ப்பதன கிடங்குகள் எல்லாம் கட்டப்பட்டு, இந்தியா எங்கோ சென்று விடும் என்ற நிபந்தனையும் தற்போது தளர்த்தப்பட்டு விட்டது. அவர்கள் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பரே தவிர, அதனால் இந்தியாவுக்கு பயன் ஒன்றும் இருக்க போவதில்லை என்பது இதன் பொருள். முந்தைய நிபந்தனைகள் படி, சில்லரை வணிகத்தில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் மட்டுமே கடை திறக்க வேண்டும் என, இருந்தது. தற்போது அந்த நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அனுமதித்தால், எந்த நகரிலும் கடை துவங்கலாம்.


அடிமாட்டு விலை :

ஆனால், மாறாக அமெரிக்க நாட்டில், வால்மார்ட்டின் சுயரூபம் வெளிப்பட துவங்கி, மக்கள் வால்மார்ட்டை புறக்கணித்து, வெளியேறு என்று, கோஷம் எழுப்ப துவங்கியுள்ளனர். விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களான காய்கறி, பழ வகைகளுக்கு உரிய விலை கொடுக்காமல், அடிமாட்டு விலைக்கு வாங்கி, பின் கொள்ளை லாபம் வைத்து விற்பதால், அங்குள்ள விவசாயிகள் தாங்களே சாலையோரக் கடைகளை, "யாக்கிமா' என்ற பெயரில், தற்போது நடத்த தொடங்கியுள்ளனர்.மக்களுக்கும், குளிரூட்டப்பட்ட பழைய காய்கறிகள், பழங்களுக்கு மாற்றாக புதிய காய்கறிகள், பழங்கள், யாக்கிமா மூலம் மலிவான விலைகளில் கிடைக்கின்றன. உரிய விதிமுறைகளை பின்பற்றி வணிகத்தில் ஈடுபடாத காரணத்திற்காக, அமெரிக்க நீதிமன்றத்தினால், வால்மார்ட்டுக்கு, 617 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள வால்மார்ட் நிறுவனங்களில் குறைந்த அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையும், மிகக் கூடுதல் நேரம் வேலை வாங்கியும், மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் அவல நிலையே உள்ளது. விவஸ்தையே இல்லை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, அன்னிய முதலீட்டை எந்தத் துறையில் அனுமதிக்கலாம், எதில் அனுமதிக்க கூடாது என்ற விவஸ்தை சிறிதும் இல்லாமல், இந்திய பாதுகாப்புத்துறையில், 25 சதவீதம், இந்திய தொலைத் தொடர்புத்துறையில், 100 சதவீதம் என, அனுமதிக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பது, நமது நாட்டின் பாதுகாப்புக்கே பேராபத்தை விளைவிக்கும்.மிச்சம் மீதி உள்ள உணவு பொருள் தயாரிப்பு துறையையும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுக்க கங்கணம் கட்டி, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் என்ற புதிய சட்டத்தை, புது அஸ்திரமாக, இந்திய உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது மத்திய அரசு ஏவியது. மிகக் கடுமையான எதிர்ப்புக்களை கண்டு, அச்சட்டத்தின் அமலாக்கம் சற்று பின்வாங்கியுள்ளது.


ரூபாய் மதிப்பு:

இந்திய ரூபாய் மதிப்பு, 1917ல், வெறும், 7 பைசாவுக்கு, ஒரு டாலர் ஆக இருந்தது. 1925ல், 10 பைசா ஆனது. நாம் விடுதலை அடைந்த போது, ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என, மதிப்பிடப்பட்டது. இன்றைய நிலவரம் ரூபாய், 62க்கு, 1 டாலர் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 20 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்க நாட்டில், 120 கோடி கிரடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. வாழ்க்கையை எவ்வாறாகினும் ஆடம்பரமாக அன்றே வாழ்ந்து அனுபவித்து விட வேண்டும் என்ற, அந்நாட்டு மக்களின் வழக்கத்திற்கு மாறாக, சிக்கனமாக சேமித்து வாழும் பழக்கமுடைய இந்திய மக்கள், முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றனர். இவ்வளவு சேமிப்புகளுக்கு இடையேயும், அரசின் செய்பாடு குறைவினாலும், இயலாமையினாலும் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருகிறது. எனவே, இந்திய மக்களே, வணிகப் பெருமக்களே விழித்து எழுங்கள். சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று "எழுமின்! விழிமின்!' என்ற, தாரக மந்திரத்தை கடைப்பிடித்து பொங்கி எழுந்து, இந்திய நாட்டின் பொருளாதாரம் அடிமைப்பட்டு போகாமல் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். நாம் அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு இந்திய மக்களிடத்தும், இளைஞர் சமுதாயத்திடமும் உள்ளது. அதற்கான பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு இந்தியாவை காப்போம்.
email: mdu_tnfood@sancharnet.in

- பி.சுபாஷ்சந்திரபோஸ் , துணைத்தலைவர், தமிழ்நாடுஉணவுப்பொருள் வியாபாரிகள்சங்கம், மதுரை.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manovijay - coimbatore,இந்தியா
25-ஆக-201311:21:20 IST Report Abuse
manovijay சேமிப்பு மிகவும் இன்றியமையாதது என்னும் ஆசிரியர் கருத்து உண்மையனது
Rate this:
Share this comment
Cancel
Guru - Edison,யூ.எஸ்.ஏ
21-ஆக-201302:03:48 IST Report Abuse
Guru மிக அருமையான கருத்து ..நன்றி . எழுமின் விழுமின்
Rate this:
Share this comment
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
18-ஆக-201315:18:19 IST Report Abuse
saraathi என்ன செய்வது ?இந்தியாவில் விளையும் ஒரு பழத்தை பாதுகாத்து இந்தியாவினுள் விற்பனை செய்வதற்கு தோதாக நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.இங்கு கிடைக்கும் பழத்தை எடுத்து இங்கேயே விற்பனைசெய்வதர்க்கு கூட அயல்நாட்டுகாரனால் மட்டுமே முடியும் என அரசு மக்களை நம்மபவைக்கிறது.பழம் விளைவதர்க்கான இயற்கைவளம்,பாடுபடுவதற்கான மனிதவளம் எல்லாம் நம் தாய் திருநாட்டில் நிறைந்திருந்தும் நம்மால் ஆகாதது என அரசே ஒதுங்கி நிற்கிறது.சரி ஒரு விளைபொருளை காத்து விற்பனை செய்ய முடியாத அரசா நம்மை எதிரி நாடுகளிடமிருந்து பாதுகாத்துவிடப்போகிறது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X