புதுடில்லி:""பெட்ரோல், டீசலை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க, கட்டுப்பாடு விதிப்பதை தவிர வேறு வழியில்லை,'' என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இறக்குமதியில் முதலிடம் பெறுவது, கச்சா எண்ணெய் தான். இதற்கான, தொகையை, அமெரிக்க டாலர் மதிப்பில் செலுத்தும்போது, அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு, குறைந்து வருகிறது. இதனால், அரசின் நடப்பு கணக்கில் பெரும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் முக்கியமாக, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் பயன்பாட்டை குறைத்தால், நிலைமையை சமாளிக்கலாம் என, கூறப்படுகிறது. உலகளவில், எரிபொருள் பயன்பாடு அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. விவசாயம், தொழில்துறை என, பலவிதமான சந்தை காரணிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், டீசல் விலையை மட்டும், சந்தை விலைக்கு உயர்த்தாமல், அரசு மானியம் அளித்து வருகிறது. இருப்பினும், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, டீசல் விலையை கணிசமாக உயர்த்தி வருகிறது. அதையும் தொடர்ந்து , உயர்த்த முடியாமல் அரசியல் காரணங்களால் தயக்கம் காட்டுகிறது.டீசலுக்காக அளிக்கும் மானியத்தால், அரசுக்கு பெரும் நிதிசுமை ஏற்பட்டுள்ளது. டீசல் விலையை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று, பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிவதால், அடுத்த வாரம் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது. இருப்பினும் நிலைமையை சமாளிக்க, பெட்ரோல், டீசலை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க, கட்டுப்பாடு விதிப்பது பற்றி, அரசு யோசித்து வருகிறது.
இது தொடர்பாக, வரும் 16ம் தேதி முதல், எரிபொருள் சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதில், மேற்கண்ட அறிவிப்பு வரலாம் என, தெரிகிறது. "பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் பங்க்குகளை, இரவு நேரத்தில் மூடி வைக்கலாம் என்ற யோசனை வந்திருப்பதாக' மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி சொன்னாலும் சொன்னார். அதற்கு பல தரப்பில் இருந்து கண்டனம் வந்ததால், அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், தனியார், "டிவி' க்கு பேட்டியளித்த, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும், எரிபொருள் இறக்குமதிக்காக அதிக பணம் செலவிடுவதை தவிர்க்கவும், பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருளை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும், கட்டுப்பாட்டு விதிப்பதை தவிர, வேறு வழியில்லை. பயன்பாட்டை குறைக்காமல், டீசலுக்கான மானியம் உயர்வதை சமாளிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இருப்பினும், கட்டுப்பாடு எப்படியிருக்கும் என்பது பற்றி, விரிவாக கூறவில்லை.
மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, அடுத்த வாரம், ஜப்பான், தென் கொரியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார். இந்த பயணத்தை முடித்துத் திரும்பியதும், வரும், 16ம் தேதி முதல், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைக்கிறார். அப்போது, டீசல் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், அறிவிப்புகள் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.