நாளைய இந்தியா ( இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒரு செயல்திட்டம்)| Dinamalar

நாளைய இந்தியா ( இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒரு செயல்திட்டம்)

Added : செப் 08, 2013 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நாளைய இந்தியா ( இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒரு செயல்திட்டம்)

அத்தானு தே
தமிழாக்கம்: செ.கிருஷ்ணமூர்த்தி


ஒரு முன்னேறிய, செல்வச் செழிப்பான நாடாகக்கூடிய ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. ஆனால், இந்தியாவோ 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு ஏழை நாடு. வெறும் ஏழைமை மட்டுமல்ல, ஏழைமைப்படுத்தப்பட்ட நாடு. நாட்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிபேர் சத்தான உணவுக்கு வழியற்றவர்கள். உலகிலேயே படிப்பறிவற்ற மக்களை அதிகபட்சமாகக் கொண்ட நாடு. மனிதவள மேம்பாடு சம்பந்தபட்ட பல அளவீடுகளில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது.


ஒரு முன்னேறிய நாடாகக்கூடிய ஆற்றலை எப்போதுமே தன்வசம் கொண்டிருந்தும்கூட, தனது ஆற்றலை நிர்ணயிக்கும் நிலையை எட்டும் தொலைவில் கூட இந்தியா இருந்ததில்லை. அந்த நிலையை அடைந்திட வேண்டிய தருணம் இது.எது முன்னேற்றம்:

முன்னேற்றம் என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. பொருளாதார வளர்ச்சி மட்டுமே முன்னேற்றம் ஆகிவிடாது. எனினும், முன்னேற்றத்தின் ஆரம்ப நிலைகளில் பொருளாதார வளர்ச்சி அத்தியாவசியமான தொடர்பைக் கொண்டது. முன்னேற்றம் இல்லாமல் வெறும் பொருளாதார வளர்ச்சி அடைவது சாத்தியம். அதேபோல் பொருளாதார வளர்ச்சி இல்லாமல் முன்னேற்றம் அடைவதும் சாத்தியமே. ஆனால், ஒரு குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகே முன்னேற்றம் என்பது சாத்தியம்.


நாட்டின் முன்னேற்றத்துக்கான பொறுப்பு நம்வசமே உள்ளது என்ற அளவில் நாம் பாக்கியம் செய்தவர்கள். மாற்றத்தை கொண்டு வருவதற்கான திறனும், சாமர்த்தியமும், முனைப்பும் நம்மிடம் உள்ளன. நாம் கல்வியறிவு பெற்றவர்கள். மாற்றத்தை உருவாக்குவதற்கான நேரத்தையும் உழைப்பையும் நம்மால் ஒதுக்க முடியும்.


ஒரு மாறுபட்ட எதிர்காலத்தைக் கற்பனைச் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு. அந்த மேன்மையுடைய எதிர்காலத்துக்காகத் திட்டம் தீட்டுவதற்கும், உழைப்பதற்குமான வசதியும் நமக்கு உண்டு. அத்துடன், இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டிய தனிப்பொறுப்பும் நமக்கு உண்டு.நமக்கு ஏன் இந்த அக்கறை:

நீங்ளோ, நானோ, பெரும்பாலான இந்தியர்களைப் போல் தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே போராடும் நிலையில் இல்லை. அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த அக்கறை? இந்தியா முன்னேறத் தவறியதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம் பற்றியும் நாம் ஆழமான அக்கறையைச் செலுத்தவேண்டும். ஏனென்றால் அது பலகோடி சக மனிதர்களின் துயரத்தை மீட்பதற்கான முதல் படி. நாம் பிறருக்கென உழைக்கும் கோட்பாடு இல்லாதவர்களாக இருக்கலாம். இருப்பினும், சுயநலத்துக்காகவும், நடைமுறைக் காரணங்களுக்காகவும் நாம் செயல்பட்டாக வேண்டும். பொருளாதார கோபுரத்தின் உச்சியில் இருக்கும் நம்முடைய நிலை உறுதியற்றது. ஏனெனில் அந்தக் கோபுரத்தின் அடித்தளம் பலவீனமானது. நம்முடைய விதியும், நம்பிக்கையிழந்த ஏழை மக்களின் தலைவிதியும் பிரிக்க இயலாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே, நாம் கட்டாயம் அக்கறை கொண்டாக வேண்டும்.


முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் அக்கறை கொள்ளாமல் போவது இந்தியா முழுமையாகச் சிதைந்து போகும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா இந்தப் பூமிப்பரப்பில் இருந்து மறைந்துவிடக்கூடிய நிலையை நாம் அனுமதிக்கக் கூடாது. பல உன்னதமான விஷயங்களை உலகுக்குக் கொடுத்த நாடு இந்தியா. அதன் பொருட்டாவது இந்தியா நீடித்திருக்க வேண்டும். நம்முடைய நாடு செழுமையும் முன்னேற்றமும் அடைவது நமக்கு மிக அவசியம்.


ஏன் இந்தியா சுதந்தரம் பெற்று 70 வருடங்கள் ஆகியும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இல்லை? அதற்கு எவையெல்லாம் தடைகளாக இருந்தன, இருக்கின்றன? தடைகள் தானாக அமைந்தனவா அல்லது அமைக்கப்பட்டனவா? இந்தத் தடைகளை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும்?தீர்வு காண்பது எப்படி?:

‘ஒரு பிரச்னையைத் தீர்க்க ஒருமணி நேரமே உள்ளது; அதன் தீர்வில்தான் நான் உயிர்வாழ்வது அடங்கி உள்ளது எனும்போதும், முதல் 55 நிமிடங்களை முறையான கேள்வியைத் தீர்மானிப்பதில்தான் செலவிடுவேன். ஏனெனில், முறையானக் கேள்வியைத் தெரிந்து கொண்ட பின்னால் அந்தப் பிரச்னைக்கு ஐந்து நிமிடங்களுக்குள் என்னால் தீர்வு கண்டுவிட முடியும்.’


இந்தியா ‘கூடிய விரைவில் ஒரு வல்லரசாகிவிடும்‘ அல்லது ‘இந்த தேசத்தையோ அல்லது அந்த தேசத்தையோ முந்தப்போகிறது‘, ‘தகவல் தொழில்நுட்ப வல்லரசு‘ போன்ற கோஷங்களை நாம் எப்போதும் கேட்டவண்ணம் இருக்கிறோம். கேட்பதற்குப் பெருமையாக இருந்தாலும் அவையாவும் நம்பமுடியாத வீண் பேச்சுகள்; சிறிய ஆய்வுகளை எதிர்கொள்வதற்குக்கூட இந்தக் கோஷங்கள் தகுதியற்றவை.


இந்தியா பற்றிய புத்தகங்களை எழுதுவது குடிசைத் தொழில் அளவுக்கு மலிந்துவிட்டது. சிலர் இந்தியா எப்படி ஒரு உயர்ந்த நிலையை அடையப்போகிறது என்பது பற்றியும், சிலர் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், சிலர் செய்வதற்கு என்ன மீதம் உள்ளது என்பது பற்றியும் எழுதுகிறார்கள். ஆனால் எந்தப் புத்தகமும் ‘ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு?’ என்ற கேள்வியை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு?:

ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு? என்ற கேள்விக்கான விடை முக்கியமானது. ஏனெனில், அது பல கோடி மக்களின் வாழ்வாசாவா பிரச்னை சம்பந்தப்பட்டது. அந்தக் கேள்வி பின்வரும் இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.


முதலில், இந்தியாவின் ஏழைமை என்பது தவிர்க்க இயலாமல் அமைந்தது அல்ல. இந்தியா செல்வச் செழிப்பான முன்னேறிய நாடாக ஆகியிருக்க முடியும். இரண்டு, இந்தியா ஏன் ஏழை நாடு என்பதற்குக் காரணங்கள் உண்டு. நாம் காரணங்களைப் புரிந்துகொள்ளும் பட்சத்தில் அவற்றைப் பற்றி ஏதேனும் செய்திட முடியும்.


ஏன் இந்தக் கேள்வியை எவருமே கேட்பதில்லை? அப்படி ஒரு கேள்வி நாகரிகம் அற்றதாக ஆகிவிட்டதுதான் அதற்கான காரணம் என்பது என்னுடைய ஊகம். குறிப்பாக, அந்தக் கேள்விக்கான நேர்மையான பதில் கேட்பதற்கு இனிமையானதாக இல்லை. அந்த நேர்மையான பதில், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்ட, கருதப்படும் பல தலைவர்களின் பெருமைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துவிடும். சுதந்திரத்துக்குப்பின் நாட்டை வழி நடத்தியவர்கள் மேதைகளோ, மிகச் சிறந்த அறிவாளிகளோ அல்ல என்பதை அம்பலப்படுத்திவிடும்; நாம் பெருமையாகக் கருதும் பல நம்பிக்கைகளைத் தவறு என்று அப்பட்டமாகச் சுட்டிக்காட்டிவிடும்.திணிக்கப்பட ஏழ்மை:

இந்தியா ஏழைமையைத் தேர்ந்தெடுத்த நாடு. ‘ஏழைகளாக வாழ்வோம்’ என்று மக்கள் விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்ததாக அதை அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. நாம் தேர்ந்தெடுத்த தேசத்தின் தலைவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மோசமான பொதுநலத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அதன் விளைவாக இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் ஏழைமையைத் திணித்துள்ளனர். தவறான தலைவர்களும் அவர்களின் திட்டங்களும் காலப்போக்கில் பரவலான, கடுமையான ஏழைமை நிலைக்கு நாட்டைத் தள்ளியுள்ளது. பொருளாதாரத் திட்டங்களே ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி அமைகிறது என்பதைத் தீர்மானிக்கின்றன. மோசமான, தவறான திட்டங்கள் பொலிவற்ற பொருளாதார நிலைமைக்கு வித்திடுகின்றன; நல்லத் திட்டங்கள் மட்டுமே வெற்றிக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வித்திடும். இந்த உண்மையை நாம் எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டும்.


ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு? என்ற கேள்விக்கான விடையைத் தேடும்போதுதான், நாம் வெகுவாகக் கொண்டாடும் தேசத் தலைவர்கள் என்ன மாதிரியான தவறுகளைத் திரும்பத் திரும்ப இழைத்துள்ளனர் என்பது வெளிப்படும். தவறுகளைச் சுட்டிக் காட்டுவது பதவியிலும் பலத்திலும் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. நாட்டின் சிற்பிகளாக நம்மால் கருதப்படும் தலைவர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக இருந்துள்ளனர் என்பதைக் கூறுவது பாதுகாப்பான செயலே அல்ல.யார் காரணம்?:

இந்தியா முன்னேறத் தவறியதற்கு இந்தியாவை இதுவரை ஆண்ட அரசுகளைக் குற்றஞ்சாட்டுவது தவிர்க்க இயலாதது.


நான் பொருளாதாரம் படித்தவன். ஆகவே, என்னுடைய பார்வை ஒரு வரலாற்றாசிரியர் போலவோ, அரசியல் விஞ்ஞானியைப் போலவோ இல்லாமல் வேறுபட்டே இருக்கப்போகிறது.


நமது பெற்றோர்களும் பாட்டன்மார்களும் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்காகப் போராடியவர்கள். நமக்குப் பின்வரும் தலைமுறை அவலநிலைகளைக் காண்பதை நாம் விரும்பமாட்டோம். நாம்தான் இந்தியாவின் மாறுபாட்டை உருவாக்கியவர்களாக இருக்க வேண்டும். அதை இப்போதே செய்யவும் வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் உங்கள் குழந்தையோ, இளைய சமுதாயமோ உங்களிடம் ‘நீங்கள் நாடு இருந்த மீள முடியாத நிலையைக் கண்டீர்கள். என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து இருந்தீர்கள். ஏதாவது செய்தீர்களா?’ என்று கேட்கும்போது அந்தக் குழந்தையின் கண்களைப் பார்த்து, ‘ஆம். என்னால் இயன்ற அளவு செய்தேன். அதை உனக்காகச் செய்தேன்.’ என்று உங்களால் பதில் அளிக்க முடியும்.


( இதன் அடுத்த பகுதி 16/09/2013 வெளியாகும்)


இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-702-2.html


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797


நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை
Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
20-நவ-201313:39:09 IST Report Abuse
Gopi விவசாயம் அது சார்ந்த முன்னேற்றம் இல்லையேல் ஒரு முன்னேற்றமும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
17-செப்-201309:49:03 IST Report Abuse
Hariganesan Sm அடிக்கடி பலரும் சொல்வது போல் வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரத்தை கொள்ளையரிடம் ஒப்படைத்து விட்டோமோ என்ற சந்தேகம் தான்.. அதைக் கண்டு பிடித்தால் இந்தியா ஏன் ஏழ்மையில் தவிக்குது என்பதன் பதில் கிடைத்து விடும்..
Rate this:
Share this comment
Cancel
Kperiyasamy Kalimuthu - Sivagangai(karaikudi),இந்தியா
14-செப்-201307:18:25 IST Report Abuse
Kperiyasamy Kalimuthu இந்த கருத்துக்கு நாளைய இந்தியா என்ற சிந்தனை அருமை வல்லரசாகும் அடுத்த இலக்கு தொடரட்டும் உங்கள் தொண்டு
Rate this:
Share this comment
Cancel
Mayil Samy - tamilnadu,இந்தியா
13-செப்-201312:12:29 IST Report Abuse
Mayil Samy திரு ஆசிரியர் அவர்களே, இந்த நிலைமை என்று மாறும் என்ற கேள்வி மட்டுமல்ல, ஏன்? என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை என்ற நிலைமை இன்று துளிர்விட ஆரம்பித்து விட்டது. இதற்கு திரு, அப்துல்கலாம் அய்யா போன்ற விஞ்ஞானிகளும் திரு, மோடி போன்ற நாட்டை முன்னேற்றச்செய்யும் அரசியல் தலைவர்களும், நாட்டில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனுக்குடன் தெரிவிக்கின்ற செய்தி தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களும், நாட்டை பற்றிய அக்கறை இல்லாத மற்றும் தெரியாத இளைஞர்களுக்கு நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம்......என்று எடுத்து சொல்ல உங்கள் போன்ற ஆசிரியர்களும் இன்று களம் கண்டுள்ளீர்கள். இதுவே நாம் நமது நிலைமையை அறிந்து எடுத்து வைத்திருக்கும் முதல் படி. இனி நாம் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை............வடக்கே சீனாவும்,தெற்கே இலங்கையும்,மேற்கே பாகிஸ்தானும் என்ன அட்டுழியம் செய்தாலும் நாம் தட்டிக்கேட்கும் நிலைமை வெகு தூரத்தில் இல்லை என்பதை நாம் மனதில் நிலைநிறுத்த துவங்கியுள்ளோம்.இப்பொழுது நாம் குழியில் கிடக்கும் யானைகள்... அதனால் எறும்பு கூட ஏளனம் செய்கிறது...இந்த நிலைமை நிரந்தரமானது இல்லை.யானை குழியில் இருந்து மேலேறுவதை தடுக்கும் சக்தி எவருக்குமில்லை.அப்படி தடுத்தால் என்ன நடக்கும் என்பதும் வெளியில் இருப்பவர்களுக்கும் தெரியும். இதை பேச்சளவில் இல்லாமல் செய்துகாட்ட,செய்திதாள்களும், தொலைக்காட்சிகளும் இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு முதல் பக்கத்திலும்,தலைப்புசெய்திகளிலும் இடம் தரவேண்டும். இந்த விழிப்புணர்வு மட்டும் நம்மிடம் தொடங்கிவிட்டால், மோசமான அரசியல்வா(வியா)திகளையும், கேடுகெட்ட அரசு அதிகாரிகளையும்,அரசு ஊழியர்களையும், ஜாதி சங்கங்களையும் நாம் குழிதோண்டி புதைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே முற்றிலும் உண்மை......இதை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.....
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
12-செப்-201311:59:55 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar இன்றைய இந்தியாவில் முக்கியமாக அரசியல்வாதிகள் சரியில்லை.., மக்கள் வளர்ச்சிக்கு போடப்படும் திட்டங்களால் அரசியல்வாதிகளின் சுயநல முறைகேடுகளும் ஊழல்களும் அவர்களின் குடும்ப பொருளாதரத்தில் பெருமளவில் பரம்பரை சொத்துகள் சேர்த்துவிட்டனர்.., அடுத்து அவர்களின் வாரிசுகள் அவர்கள் வகித்த பதவிக்கு வர தயராக இருகின்றனர்.., அடுத்து சினிமா மாயையால் மக்கள் குடும்ப பொருளாதரத்தையும் வாழ்க்கையும் தொலைத்து விட்டு கண்மூடி தனமாக இருகின்றனர்.., மக்கள் மனதில் அரசியல் விழிப்புணர்வும் தம் அறியாமையால் சினிமா மோகத்திலிருந்து முதலில் விடுபடவேண்டும்..,இவ்விரு விஷியத்தில் மக்கள் மனமாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் இந்திய ஒரு வளர்ச்சி பெற்ற நாடாக நிரந்தரமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை..,ஊழலும் சினிமாவும் மக்கள் வாழ்க்கை வளர்ச்சியை பாதிக்கிறது எனலாம் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
12-செப்-201307:30:54 IST Report Abuse
spr லஞ்சமோ, ஊழலோ நிர்வாகத் தவறுகளோ இல்லாத நாடு என்று எதுவுமே இல்லை.ஆனால் மக்கள் ஏழைகளாக இருக்கும்வரை தான். அவர்கள் வேறெந்தப் பிரச்சினையும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது இந்த நாட்டின் அரசியல்வியாதிகளின் எண்ணம். ஒரு சில நல்லவர்கள் வந்தாலும், அவர்களும் இலவச உணவு, இலவசக் கல்வி என்று அளித்து மக்களைப் பிச்சைக்காரகளாக நிரந்தரமாக அரசியல்வியாதிகளைச் சார்ந்தே இருக்கும் நிலைமையை உண்டாக்கிவிட்டனர் விருந்தோம்பல் இந்த நாட்டின் சிறப்பான அம்சம் என்ற வகையில் தன வீட்டிற்கு வரும் அரசியல்வியாதியை உணவுண்ணுங்கள் என்று ஒரு மரியாதைக்குச் சொன்னால் கூட போதும், அவன் அடுத்த வேளைக்கு உணவு பெற்றவனாக இருக்கிறானா என்று கூடக் கவலைப்படாமல், அவன் உணவினைப் பிடுங்கித் தின்பதை அவனுக்குத் தரும் மரியாதை என்று நினைக்கும் கொள்ளைக்காரகளை நம்மை ஆளவிட்டதன் விளைவே இந்தியா ஏழ்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நிற்க்கிறது.
Rate this:
Share this comment
Cancel
bala - Bedok,சிங்கப்பூர்
11-செப்-201306:53:40 IST Report Abuse
bala இந்தியாவில் என்னைக்கு லஞ்சம், ஊழல் ஒழியுதோ அன்னைக்குதான் நமக்கு விடிவுகாலம். ஒலிம்பிக்கில் சாதிச்ச பெண் பானிபூரி கடை நடத்தும் அவலம் எதனால்? இன்னும் எத்தனையோ பேர் திறமை இருந்தும் முன்னேற முடியாததற்கு காரணம் என்ன? நம்ம நாட்டு மக்களின் மூளை பலத்தால் இன்று உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் முன்னேறுகின்றன. சொந்த மக்களை சரியாக பயன்படுத்தாதது யாருடைய தவறு? எந்த வளமுமே இல்லாத நிறைய நாடுகள் மிக அதிக முன்னேற்றத்தை அடையும்போது, எல்லா வளமும் கொண்ட நம்நாட்டு மக்கள் ஏன் அவர்களிடம் போய் வேலை செய்ய வேண்டும். எங்கு பார்த்தாலும் ஊழல், லஞ்சம். நம் நாட்டு பெண்களைக்கூட பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை. குழந்தையும், கிழவியும்கூட காமத்துக்கு பலியாகும் அவலம். மாற்றங்கள் முதலில் அரசாங்கத்திலிருந்துதான் வரவேண்டும். ஒரு அரசு, சட்டம் சரியாக இருந்தால் மக்கள் நிச்சயமாக ஒழுங்காக இருப்பார்கள். எந்த நாட்டிலுமே 100% ஒழுங்கானவர்கள் இல்லை. எல்லாவற்றையுமே மீறி அந்த நாடு முன்னெருகிரதென்றால் அது அந்த நாட்டின் சட்டமும், அரசியல் பலமும்தான். இந்தியா முன்னேறவேண்டும் என்கிற கனவு எனக்குள் ஏராளமாக உள்ளது.. அது நடக்க கடவுள்தான் துணைபுரிய வேண்டும்..
Rate this:
Share this comment
SURESH SUBBU - Delhi,இந்தியா
11-செப்-201308:05:48 IST Report Abuse
SURESH SUBBUஎன் மனதில் தோன்றிய எண்ணங்களை உங்கள் வரிகளில் கண்டேன் நன்றி பாலா...நம் நாட்டில் என்ன வளம் இல்லை.. நீர் வளம் நிறைந்த நாடு, விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற நாடு..ஆனால் ஒரு புறம் நதி நீர் எல்லாம் வீணாக கடலில் கலக்கிறது..மறு புறம் விவசாயத்திற்கு தண்ணீர் தர அண்டை மாநிலங்கள் மறுக்கின்றன..இதற்க்கு என்ன வழி..நதி களை இணைத்து விவசாயத்தை பெருக்க வேண்டும்..கடலில் கலக்கும் நீரினை விவசாயத்திற்கு திருப்பி விட வேண்டும்..அதை செய்வதற்கு அரசியல் வாதிகள் தயார் இல்லை..ஒருபுறம் லஞ்சம் ஊழலினால் அரசியல் வாதிகள் பெரும் செல்வந்தர்களாக வளம் வருகிறார்கள்.. மறுபுறம் ஏழைகள், விவசாய்கள் பட்டினி சாவு, தற்கொலை..அரசியல் வாதிகளின் ஊழல்களை கட்டுபடுத்த, ஊழல் செய்த பணத்தை மீட்க்க சரியான சட்ட திட்டங்கள் இல்லை...நம் நாட்டின் செல்வம் வெளி நாடுகளில் கருப்பு பணமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது....வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க எந்த ஒரு அரசியல் வாதியும் முன் வருவதில்லை, சட்ட திட்டங்களும், அவற்றில் உள்ள ஓட்டைகளும் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது..இவற்றை எல்லாம் சரி செய்ய சரியான அரசியல் அமைப்புகளும், சட்டதிட்டங்களும் இயற்றும் வரை, உங்களுடைய கனவும், நாட்டு மக்களின் கனவும் கனவாகவே இருக்கும்..நல் எண்ணம் உள்ளவர்கள் ஓங்கி குரல் கொடுத்தாலும் அது பாராளுமன்றத்திலோ, நீதி மன்றங்களிலோ ஒலிப்பதில்லை..இதை நாட்டின், நாட்டு மக்களின் தலை எழுத்து என்று ஒதுங்கி செல்லவும் முடியவில்லை..நாட்டிருக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற நம்மை போன்றவர்களின் எண்ணம் என்று தான் நிறைவேறுமோ தெரியவில்லை...நம்மால் முடிந்தது சின்ன சின்ன கல்லாக தண்ணீர் பானைக்குள் எறிவதுதான்..ஆனால் அந்த தண்ணீர் மேலே வரும் போது நாம் உயிருடன் இருக்கிறோமோ இல்லையோ வரும் சந்ததிகள், சமுதாயம் வளமான இந்தியாவில் இருந்தால் அதுவே மகிழ்ச்சி.....
Rate this:
Share this comment
Prakash S - Tamilnadu,இந்தியா
25-செப்-201310:41:37 IST Report Abuse
Prakash Sசரியான சட்டங்கள் இயற்றினால் தான் நம் நாடு முன்னேறும் - 100 % உண்மை. சரியான சட்டத்தை யார் உருவாக்குவது, நமது அரசியல் வாதிகள் உருவகுவார்களா ?............. இதற்கு வேறு வழி என்ன ? உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்,...
Rate this:
Share this comment
Cancel
Vijeyakumar Anthony - Florida,யூ.எஸ்.ஏ
11-செப்-201301:38:11 IST Report Abuse
Vijeyakumar Anthony 100% True
Rate this:
Share this comment
Cancel
Manoharan.M - Trichy,இந்தியா
11-செப்-201300:11:29 IST Report Abuse
Manoharan.M அன்புள்ள தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு, மேற்கண்ட தொகுப்பை படித்தேன். மிகவும் அழகாக சொல்லி இருக்கிறார் நமது ஆசிரியர், இந்தியt ஒரு ஏழை நாடு என்று, படித்தவர்கள் மிகவும் குறைவு என்று.இந்த கருத்தை ஏன் அவர் இவ்வளவு நாள் சொல்லவில்லை. பொருளாதாரம் மட்டும் ஒரு நாட்டை உயர்த்தி விடாது. நல்ல கல்வி, பண்பாடு, ஒழுக்கம் இவற்றில் சிறந்து விளங்கும் இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. அறிவியல் தான் ஒரு நாட்டை மிக பெரிய வல்லரசாக்கும் என்பதை ஆசிரியர் மறந்து விட கூடாது. விக்ரம் சாராபாய், அப்துல் கலாம், சதீஷ் தவான், ஆகியோரின் உழைப்பை மறந்து விடகூடாது. என் தாய் நாட்டை ஏழை என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இந்த இளைய சமுதாயம் இந்தியாவை ஒரு மிக பெரிய வல்லரசாக்கும்... இன்னொரு முறை என்னுடைய நாடு ஏழை என்று சொல்வதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். 120 கோடி மக்களும் மிக வேகமாக முன்னேறுகிறோம்..எங்களுடைய வளர்ச்சி தனி மனித வளர்ச்சி அல்ல...நாட்டு மக்களின் மொத்த வளர்ச்சி...நாங்கள் வேகமாக வருகிறோம்...வந்தே மாதரம்...
Rate this:
Share this comment
OX Vijay - Chennai,இந்தியா
14-செப்-201302:07:27 IST Report Abuse
OX Vijayமனோகரன் அவர்களே, உங்களுடைய ஆத்திரம் நியாமானதே. ஆனால் நான் ஏழை இல்லை என்று சொல்வதானால் மட்டும் பணக்கரானகி விட முடியாது. உலக பணக்காரர்கள் வரிசையில் இந்தியர்கள் இடம் பிடிக்கும் அதே வேளையில், வறுமையால் தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்களையும் நாம் பார்க்க வேண்டும். எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை விட, எப்படி முன்னேறுகிறோம் என்பதே முக்கியம். இந்தியா நிச்சயம் வல்லரசாகும் என்று நான் உறுதியளிக்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை