தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து

Added : செப் 09, 2013

தர்மபுரி: தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத் துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் விவசாயத் தொழிலை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். மாவட்டத்தில் முக்கிய பயிர்களாக மா, நெல், தக்காளி, கரும்பு, மஞ்சள், பருத்தி, மரவள்ளி கிழங்கு, துவரை, கேழ்வரகு, ராகி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் பெய்யும் தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை மற்றும் அணை, கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் பயிர்களை மானாவாரியாகவும், பாசன முறையிலும் பயிர்களை சாகுடி செய்து வருகின்றனர்.
இதில் மாவட்டத்தில் உள்ள வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, நாகவதி, கேசர்குழி, தும்பலஹள்ளி, வரட்டாறு உள்ளிட்ட அணைகள் மூலம் விவசாயிகள் நேரடியாக, 11,116 ஹெக்டேரில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அணை பாசன பகுதிகளில் விவசாயிகள், இரண்டு போகம் நெல் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு மாவட்டத்தில் போதிய பருவமழை பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள, ஏழு அணைகளில் தொப்பையாறு அணையை தவிர, மற்ற, ஆறு அணைகளும் தண்ணீர் இன்றி வறண்டன.
இதனால் அணை பாசன வசதியை நம்பி கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் சின்னாறு மூலம் குடிநீர் வசதி பெற்று வந்த தர்மபுரி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்தனர்.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளை சில மாதங்கள் ஏமாற்றிய பருவமழையால் அணை பாசன பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆனி, ஆடி பட்டங்களில் பயிர்களை சாகுபடி செய்ய முடியா நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி வருவதுடன், வறண்டு கிடந்த வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, நாகவதி, கேசர்குழி, வரட்டாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து துவங்கியுள்ளது.
நேற்று முன்தினம் (செப்., 7) மாவட்டத்தில் உள்ள அணைகளில் அதிகபட்சமாக, 50.18 அடி கொள்ளளவு கொண்ட தொப்பையாறு அணையில், 20.66 அடி தண்ணீரும், 65.27 அடி கொள்ளளவு கொண்ட வாணியாறு அணையில், 8.2 அடியும், 25.2 அடி கொள்ளளவு கொண்ட கேசர்குழி அணையில், 5.74 அடியும், 24.6 அடி கொள்ளளவு கொண்ட நாகவதி அணையில், 5.5 அடியும், 50 அடி கொள்ளளவு கொண்ட சின்னாற்றில், 3.05 அடியும், 34.45 அடி கொள்ளளவு கொண்ட வரட்டாற்று அணையில், 3 அடி தண்ணீர் இருந்தது.
மேலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக இவ்வணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளதால் அணையின் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (செப்., 7) பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக தர்மபுரியில், 32 மில்லிமீட்டரும், அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில், 16 மி.மீ., அரூரில், 9.30 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டியில், 8.30, பாலக்கோட்டில், 1 மி.மீ., மழை அளவு பதிவானது.நேற்று (செப்., 8) தர்மபுரி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X