புதுடில்லி :பார்லிமென்டுக்கு வருகை தந்தவர்களில், இளம், எம்.பி.,க்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். விவாதங்களில் பங்கேற்பது, தனிநபர் மசோதாக்களை கொண்டு வருவது, கேள்விகள் எழுப்புவது போன்ற அலுவல்களிலும், இளம், எம்.பி.,க்கள் சிறப்பாக பங்காற்றியுள்ளதாக, பார்லிமென்ட் அலுவல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
காங்., எம்.பி.,:
நடப்பு, 15வது லோக்சபா செயல்படத் துவங்கிய, 2009, ஜூன் மாதத்திலிருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, இளம், எம்.பி.,க்கள் ஒழுங்காக பார்லிமென்டுக்கு வருகை தந்துள்ளனர்.மத்திய பிரதேசத்தின், மாண்ட்சார் தொகுதி, காங்கிரஸ், பெண் எம்.பி.,யான, 40 வயது, மீனாட்சி நடராஜன், 85 சதவீத வருகைப் பதிவேட்டைக் கொண்டுள்ளார். எம்.பி.,க்களின் சராசரி வருகை, 77 சதவீதமாக உள்ள நிலையில், மீனாட்சி நடராஜன், 85 சதவீத வருகை தந்துள்ளார்.காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலுக்கு மிக நெருக்கமானவர் என, கூறப்படும் மீனாட்சி, பார்லிமென்டுக்கு வருவதில் மட்டுமின்றி, கேள்விகள் கேட்பதிலும், விவாதங்களில் பங்கெடுப்பதிலும் ஆர்வமாக இருந்துள்ளார். அவர், 16 விவாதங்களில் பங்கேற்று, 135 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இளைஞரணி தலைவர்:
பா.ஜ.,வின் இளைஞரணி தலைவர், அனுராக் தாக்குர், 38, இமாச்சல பிரதேசத்தின், ஹமிர்பூர் லோக்சபா தொகுதி, எம்.பி.,யான இவர், 84 சதவீத வருகை பதிவு கொண்டுள்ளார். 61 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்; 540 கேள்விகளை எழுப்பியுள்ளார். மூன்றாவது இடத்தை, லட்சத்தீவு தொகுதியின், காங்கிரஸ் கட்சி, எம்.பி.,யான ஹம்துல்லா சயீத், 31 பெற்றுள்ளார். இவர், 82 சதவீத வருகை பெற்றுள்ளார். 572 கேள்விகளை எழுப்பியுள்ளார். தனி நபர் மசோதாக்கள், இரண்டை கொண்டு வந்துள்ளார்.அடுத்த இடத்தைப் பிடித்துள்ளவர்,
ஐதராபாத்தின், மஜ்லிஸ் - இ - இட்டே ஹதுல் முஸ்லிம்மென் கட்சியின், எம்.பி., அசாவுதின் ஒவாய்சி, 44. இவர், இளம், எம்.பி.,க்கள், யாருமே கேட்காத வகையில், 1,042 கேள்விகளை எழுப்பியுள்ளார். 38 விவாதங்களில் பங்கேற்றுள்ள இவர், 69 சதவீத வருகைப் பதிவை பெற்றுள்ளார்.
வாய்மூடி மவுனி:
காங்கிரஸ்
கட்சியை சேர்ந்த, சங்ரூர் தொகுதி எம்.பி., விஜய் இந்தர் சிங்லா, 85 சதவீத
வருகைப் பதிவைக் கொண்டுள்ள போதிலும், வாய்மூடி மவுனியாக இருந்துள்ளார்;
நான்கு விவாதங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார்; கேள்விகள் எதையும்
கேட்கவில்லை.சமாஜ்வாதி கட்சியின், இளம், எம்.பி.,க்களில் ஒருவரான, யஷ்விர்
சிங், 40,காங்கிரஸ் கட்சியின், மீனாட்சி நடராஜனை விட, 2 சதவீதம் அதிகமாக, 87 சதவீத வருகைப்பதிவை கொண்டிருக்கிறார். கேள்விகளும் அதிகமாக கேட்டுள்ளார்; 585 கேள்விகளை எழுப்பியுள்ளார்.மகாராஷ்டிராவின், ரத்னகிரி லோக்சபா, காங்கிரஸ் எம்.பி., நிலேஷ் நாராயண் ரானே, 32, சரமாரியாக, 545 கேள்விகளை எழுப்பி, 18 விவாதங்களில் பங்கேற்று, 71 சதவீத வருகை கொண்டுள்ளார்.
ராகுல் குறைவு:
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என நம்பப்படும், துணைத் தலைவர், ராகுல், 43, 43 சதவீத வருகைப் பதிவை மட்டுமே கொண்டுள்ளார். ஒரேயொரு விவாதத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளார்; எந்தவொரு தனி நபர் மசோதாவையும் அவர் கொண்டு வரவில்லை.ஆனால், அவரின் சித்தப்பா மகன், வருண், 33, சற்று கூடுதலாக, 65 சதவீத வருகைப் பதிவேட்டை கொண்டுள்ளார்; 618 கேள்விகளை எழுப்பியுள்ளார்; இரண்டு, தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளார்.
ரெட்டி மிக குறைவு:
ராகுலை விட மிகக் குறைந்த வருகைப்பதிவு கொண்டவராக, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி விளங்குகிறார். அவர், 31 சதவீத வருகைப்பதிவை
கொண்டுள்ளார். இரண்டு விவாதங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். ஏனெனில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, அவர் ஓராண்டுக்கும் மேலாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மொத்தத்தில், இளம் எம்.பி.,க்கள் பலர்,
பார்லிமென்டுக்கு ஒழுங்காக வருகை தந்துள்ளதுடன், கேள்விகளையும் எழுப்பி,
தங்கள் ஜனநாயககடமைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக, பி.ஆர்.எஸ்., ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
புள்ளிவிவர கணக்கெடுப்பு:
பார்லிமென்ட் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, வருகைப் பதிவேட்டில் அவர்கள் கையெழுத்திடுவதை வைத்து, எம்.பி.,க்களின் வருகைப் பதிவு கணக்கிடப்படுகிறது. கேள்விகள் எழுப்புவது, எழுத்து வடிவிலும் இருக்கலாம், வாய்மொழியாகவும் இருக்கலாம்.வருகைப் பதிவேட்டில், அமைச்சர்கள் கையெழுத்திட மாட்டார்கள் என்பதால், இளம் அமைச்சர்களின் வருகை மற்றும் அவர்களின் செயல்பாடு குறித்து, இதில் எதுவும் குறிப்பிடவில்லை. அமைச்சர்கள், அரசின் பிரதிநிதிகள் என்பதால், அவர்கள் கேள்வி எதுவும் எழுப்ப மாட்டார்கள்.அது போலவே, சபாநாயகரும், துணை சபாநாயகரும், எம்.பி.,க்கள்
வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடத் தேவையில்லை. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், எம்.பி.,க்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட மாட்டார். ஆனால், விவாதங்களில் பங்கேற்பார்; கேள்விகள் பல எழுப்புவார்.