மதுரை விமான நிலையம் மேம்படுவது எப்போது| Dinamalar

மதுரை விமான நிலையம் மேம்படுவது எப்போது

Updated : அக் 21, 2013 | Added : அக் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மதுரை விமான நிலையம் மேம்படுவது எப்போது

மதுரை உட்பட தென் மாவட்டங்கள் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாடு அடைய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முக்கியம். குறிப்பாக போக்குவரத்து வசதிகளில்
தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். ரூ.135 கோடியில் மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையம் அமைக்கப்பட்டு, மூன்றாண்டுகளாகியும் முழுஅளவில் வெளிநாடுகளுக்கு சர்வதேச விமானங்களை இயக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மதுரை மட்டுமின்றி, தென் மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. மருத்துவ சுற்றுலா என உலகின் பல நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். உயர்கல்வி மற்றும் யோகா உட்பட பண்பாடு, பாரம்பரிய விஷயங்களுக்காக அமெரிக்கா, ஐரோப்பியா, மேற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் துபாய், சவூதி, கத்தார், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிகின்றனர். சிங்கப்பூருக்கு ஆண்டுக்கு 35 ஆயிரம் தென் மாவட்ட பயணிகள் சென்று வருகின்றனர். தற்போது இவர்கள் அனைவரும் சென்னை, திருச்சி அல்லது திருவனந்தபுரம் சென்று விமானம் ஏறுகின்றனர். மதுரை பகுதிகளில் இருந்து காய்கறிகள், பூக்கள், ஜவுளி பொருட்கள், மருத்துவ உபகரணங்களும் வெளிநாடுகளுக்கு இந்த விமான நிலையங்கள் மூலம் தான் அனுப்பப்படுகின்றன.
ஏன் இந்த நிலை..?
மதுரை முதல் திருநெல்வேலி வரை 8 மாவட்ட மக்கள் பயன்பெற, மதுரை விமானநிலையத்தை முழுவசதியுடன் சர்வதேச விமானநிலையமாக மாற்ற மத்திய அரசு தயங்குவது ஏன்?
மதுரை விமான நிலையத்தை, சுங்கவரி மற்றும் கார்கோ விமான நிலையமாக அறிவித்தும் கூட, அதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. சிங்கப்பூர் அரசு, மதுரைக்கு விமான சேவையை துவக்க அனுமதி கோரியும் கூட, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி மறுத்து விட்டது. நம் நாடு வெளிநாடுகளுடன் செய்த இரு வழி விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம், இடம் பெறாத காரணத்தால் பல நாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியவில்லை. மதுரையை சேர்க்கவும் மத்திய அரசு முயலவில்லை. இத்தனைக்கும் மத்திய அமைச்சரவையில் "அதிகாரமிக்க அமைச்சரான' சிதம்பரம் மற்றும் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், மாஜி அமைச்சர் அழகிரி, எம்.பி.,க்கள் எல்லோரும் தங்கள் ஊருக்கு இந்த விமான நிலையம் வழியாகத்தான் வருகிறார்கள். கேரள எம்.பி.,க்கள் போல கட்சி வேறுபாடின்றி, தென் மாவட்ட எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, மத்திய அரசுடன் போராடினால் தான் மதுரை, முழுத்தகுதியுடன் சர்வதேச விமான நிலையம் ஆகும். எம்.பி.,க்கள் மனது வைப்பார்களா? மதுரை மக்கள் காத்திருக்கிறார்கள்!
நான்கு வழிச்சாலை தேவை
பெங்களூரு போன்ற இடங்களில், விமான நிலையத்தை அடைய, நான்கு வழிச்சாலை உள்ளது. அதுபோல மதுரை விமான நிலையம் அருகே அமைந்துள்ள இருவழிச்சாலையை(ரிங்ரோடு) நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். ரிங் ரோடு, நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்ததோடு சரி. முயற்சிகள் இன்னும் துவங்கவில்லை.
நில ஆர்ஜித பணி என்னாச்சு
மதுரை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான நில ஆர்ஜிதத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களும் வருவதால் அதற்கான பணி சிக்கல்கள் நிறைந்ததாக உள்ளது. தற்போதுள்ள விமான நிலையத்தின் ரன்வே நீளம், அகலத்தை மேம்படுத்தும்போது, இந்த விமான நிலையத்தின் மொத்த பரப்பளவும் விரிவடையும். எனவே ஏராளமான நிலங்கள் தேவைப்படுகிறது.இதற்காக பாப்பானோடை, ராமன்குளம், குசவன்குண்டு, கூடல்செங்குளம், பெருங்குடி, அயன்பாப்பாக்குடி கிராமங்களில் 613.44 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, ஆர்ஜிதமும் செய்யப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்தால் தற்போதுள்ள ரிங்ரோடு பகுதியில் 4 கி.மீ., வரை பாதிப்பு ஏற்படும். இதனால் ரிங்ரோட்டையே மாற்றி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகவும் நிலஆர்ஜித பணிகள், அதற்கான தனிஅதிகாரிகள் நியமனம் குறித்தும் அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலைய பணிகளுக்காக தேவைப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு, அவற்றை கையகப்படுத்துவது, இழப்பீடு வழங்குவது தொடர்பாக நோட்டீசும் அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்.,18ல், அன்சுல்மிஸ்ரா கலெக்டராக இருந்தபோது, 1.4.2012 கைடுலைன் மதிப்பீட்டின் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு அதிகரிக்கப்பட்டு, கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. பங்கேற்ற பலரும், இழப்பீடு தொகை போதாது என்றுகூறி, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டது. மாநில அரசு விரைவாக முடிவெடுத்து, நிலத்தை கையகப்படுத்தி வழங்கினால்தான், அடுத்த கட்டப் பணிகளை விமான நிலைய ஆணையம் துவங்க முடியும்.
1942: மதுரை ஏர்பீல்டு, 2ம் உலக போரின் போது, ராயல் ஏர்போர்ஸால் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது.
1942: முதல் பயணிகள் விமானம் சென்னை-மதுரை-திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டது.
2012: ஆக., 27ல் அமெரிக்காவிலிருந்து, இருசர்வதேச தனி விமானங்கள் நேரடியாக மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கின.


அசத்தும் ஆமதாபாத், கோழிக்கோடு விமான நிலையங்கள்:

இந்தியாவின் ஏழாவது சுறுசுறுப்பான விமானநிலையம், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம். தினமும் 250 விமானங்கள் வந்து செல்கின்றன. சென்னை, டில்லி, மும்பை, ஐதராபாத், கோல்கட்டா, பாட்னா, ராஞ்சி, பெங்களூரு, சண்டிகர், கோவா, ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, நாக்பூர், புனே, விசாகபட்டினம், சிலிகுரி, போபால், கோவை, திப்ருகர், கவுகாத்தி, போர்ட்பிளேயர், இந்தூர், ராய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து உள்ளது. அதாவது, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இங்கிருந்து செல்ல முடியும்.சர்வதேச அளவில் ஷார்ஜா, குவைத், லண்டன், மஸ்கட், துபாய், அபுதாபி, நியூயார்க், தோகா, ஜெட்டா, சிங்கப்பூர், பாங்காக் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோழிக்கோடுகேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையம், நாட்டின் பரபரப்பான சர்வதேச விமான நிலையங்களுள், 12வது இடம் பெற்றுள்ளது. சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, கோவை, டில்லி, பெங்களூரு, கோவா, டில்லி ஆகிய நகரங்களுக்கு விமான சேவை அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில், அபுதாபி, தமாம், ரியாத், பக்ரைன், துபாய், குவைத், மஸ்கட், ஷார்ஜா, தோகா, ஜெட்டா ஆகிய நகரங்களுக்கு
விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது கடந்த பத்தாண்டுகளில் இந்த விமான நிலையங்கள் பெற்றுள்ள அபார வளர்ச்சி. இத்தனைக்கும் மத்திய அரசிலும், அம்மாநிலத்திலும் வெவ்வேறு
கட்சிகள் தான் ஆட்சி புரிந்தன. என்றாலும் எம்.பி.,க்களின் ஒற்றுமையால் சாதிக்க முடிந்தது. கேரளாவில், எத்தனை அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், வளர்ச்சி திட்டங்களில், கம்யூனிஸ்ட்-காங்., எம்.பி.,க்கள் ஒற்றுமையாக குரல்கொடுப்பார்கள். இல்லையேல், அடுத்த முறை ஓட்டு கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும்!
நம்மூர் மக்களும் இப்படி பாடம் கற்பித்தால், வளர்ச்சி திட்டங்கள் வரும்.இங்கெல்லாம் முடியும் என்றால், நாட்டின் தென் பகுதியில், போக்குவரத்து வாய்ப்புகள் அதிகம் உள்ள மதுரையில் விமான நிலையத்தை மேம்படுத்த முடியாதா?
விமான பயணிகள் சொல்வது என்ன: ஜார்ஜ் தர்மராஜ், தலைமை பொது மேலாளர், டி.என்.பி.எல்.,சென்னை: விமான சர்வீஸ்களை அதிகரித்தால், என்னை போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும்.
யொடிட், ஜெர்மனி: யோகா கற்று கொள்ள, மதுரைக்கு முதல் முறையாக வந்துள்ளேன். ஆரோக்கியமான உடல் நலனுக்கு யோகா அவசியம். மதுரை விமான நிலையம் சுத்தமாக இருக்கிறது.
பாபு, கோவில்பட்டி: நான் கத்தார் எண்ணெய் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிகிறேன். ஆண்டுக்கு ஏழு முறை ஊருக்கு வந்து செல்கிறேன். தற்போது சென்னை அல்லது திருவனந்தபுரம் வழியாக வர வேண்டியுள்ளது. மதுரையிலிருந்து கத்தார் போன்ற நாடுகளுக்கு விமானங்களை இயக்கினால் நல்லது.
ஆண்டிரிட், உக்ரைன்: முதல் முறையாக குழுவினராக வந்துள்ளோம். தூத்துக்குடி செல்கிறோம். திஸ் ஏர்போர்ட் ஈஸ் நைஸ்.
தெரசாள், சென்ட்ரல் இந்தியன் பள்ளி ஆசிரியை, நைரோபி: மதுரை தான் சொந்த ஊர். 20 ஆண்டுகளாக நைரோபியில் பணிபுரிகிறேன். மதுரை விமான நிலையம்
இந்தளவு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முன்பு சென்னை வந்து ரயிலில் வருவேன். தற்போது மதுரைக்கு விமானத்தில் வர முடிகிறது. வெளிநாடுகளுக்கு, விமானங்களை இயக்கினால் வரவேற்பேன்.


எல்லோரும் திருச்சிக்கு செல்வது ஏன்?

: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர்ஜெகதீசன்: மதுரையில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், தாய்லாந்து, வளைகுடா நாடுகளுக்கும் நேரடி விமான சேவை வரவேண்டும். அதற்கு, இந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் இடையேயான இருவழி விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில் மதுரை இடம்பெறவேண்டும். ஆனால், மத்திய அமைச்சர்களும், எம்.பி.,க்களும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. ஏற்றுமதிக்கு நல்ல வசதி இருந்தும், அதற்குரிய கட்டமைப்பு மதுரை விமான நிலையத்தில் இல்லை. இங்கு 5 மாதங்களுக்கு முன், சரக்கு கையாள சுங்கத்துறை அனுமதி அளித்தது. ஆனால், அதற்குரிய எந்த வசதியும் இல்லை. "ஏரோ பிரிட்ஜ்' வசதிக்காக உதிரிபாகங்கள் வந்துவிட்டன. இன்னும் அமைக்க முயற்சிக்கவில்லை. உடனுக்குடன் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வசதிகள் இல்லாததால்தான், தென்மாவட்ட மக்களில் 65 சதவீதம் பேர், திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
மதுரை "மாதிரி முனையமாகும்' : மாணிக்கம்தாகூர் எம்.பி., விமான போக்குவரத்து துறை ஆலோசனை குழு உறுப்பினர்:
ஜன., முதல் கோலாலம்பூர், சிங்கப்பூருக்கு விமானங்கள் இயங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கார்கோ, குளிரூட்டப்பட்ட ஸ்டோரேஜ் உட்பட வசதிகளை செய்யக்கேட்டு விரிவான அறிக்கையை ஏற்கனவே விமானத்துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளேன். விமான போக்குவரத்து ஆலோசனை கூட்டங்களில் வலியுறுத்தவும் செய்கிறேன். பயணிகளின் எண்ணிக்கை, தென் மாவட்டங்களிலிருந்து போதிய சரக்குகள் அனுப்பப்படுவதற்கான வாய்ப்பு போன்றவைகளை ஆராய்ந்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஓரிரு ஆண்டுகளில் மதுரை, "மாதிரி முனையமாக' வாய்ப்புகள் உள்ளன.
ஏரோபிரிட்ஜ் வசதி எப்போது: முஸ்தபா, டிராவல் கிளப் தலைவர், மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு தற்போது தினமும் 12 விமானங்கள் வந்து செல்கின்றன. தென் மாவட்டங்களில் இருந்து ஜவுளி பொருட்கள், பூக்கள் போன்றவை தற்போது திருச்சி, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. மதுரைக்கு, கார்கோ மற்றும் குளிரூட்டப்பட்ட ஸ்டோரேஜ் வசதி வேண்டும். ஏரோபிரிட்ஜ் வசதியில்லாததால், பயணிகள் பஸ்சில் விமானம் வரை அழைத்து செல்லப்படுகின்றனர். துபாய், கோலாலம்பூர் போன்ற இடங்களுக்கு சர்வதேச விமானங்கள் செல்லவுள்ள நிலையில் ஏரோபிரிட்ஜ் வசதி கட்டாயம் தேவை. ஆமதாபாத், மும்பை ஏர்போர்ட் போல புட்கோர்ட், மணி எக்சேஞ்ச் சென்டர், பாங்க் ஏ.டி.எம்., போன்றவை அமைத்து முன்மாதிரி முனையமாக்கலாம். பயணிகளை வரவேற்க வருவோருக்கு ஓய்வறை வசதி தேவை. மற்ற விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் மதுரை விமான நிலையம் 24 ஆயிரம் சதுரடி பரப்பில் உள்ளது. துபாய்க்கு இரவு நேர விமானம் இயக்கவுள்ளதால், கூடுதல் விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X