நகரமயமாக்கம் தேவை| Dinamalar

நகரமயமாக்கம் தேவை

Added : அக் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
நகரமயமாக்கம் தேவை

தொழில்மயமாக்கத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் இடையேயான இருபக்க இணைப்பு நகரமயமாக்கம். ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல் நகரமயமாக்கம், முன்னேற்றம் இரண்டும் எப்போதும் தனித்தனி விஷயங்களாகப் பார்க்கப்படுவதில்லை. நகரங்களின் வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சி, மனித மேம்பாடு ஆகியவற்றின் கதைகளை உள்ளடக்கிய மனித நாகரிகத்தின் வரலாறு.


மனிதர்களின் அனைத்து சாதனைகளும் மனித யோசனைகளின் விளைவாக ஏற்பட்டவை. அப்படிப்பட்ட யோசனைகளில், நகரம் என்ற யோசனை மிகத் தொன்மையானது. அது யோசனைகளின் தரப் பட்டியலில் மிக உயர்வான இடத்தில் வரக்கூடியது.


நகரங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்குச் சக்தியூட்டக்கூடிய வளர்ச்சியின் இயந்திரங்கள். இந்த உண்மையை பகுத்தாராய்ந்தும், அனுபவப்பூர்வமாகவும் சரிபார்க்க முடியும். வாழ ஏதுவாக வடிவமைக்கப்பட்ட நகரங்களின் உருவாக்கத்தின் மூலம் தவிர்க்க இயலாத, அதே சமயம் விரும்பத்தக்கதுமான நகரமயமாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு உதவும் திட்டங்கள் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் திறன் வாய்ந்தவை, பயனுள்ளவை என்று வாதிடப்படுகிறது.பொருளாதார முன்னேற்றம்:

பொருளாதார முன்னேற்றம் பெரும்பாலும் யூகிக்கக்கூடிய பாதையையே பின்பற்றுகிறது. பெரும்பான்மையான தொழிலாளர்கள் முதலில் விவசாயத்திலும், பின் தொழிற்சாலைகளிலும், இறுதியாக சேவைத் துறைகளிலும் வேலைவாய்ப்பு பெறும் சுழற்சியே அது பின்பற்றும் பாதை. விவசாயத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்போது, அது தன்னிடம் தேவைக்கு அதிமாக இருக்கும் தொழிலாளர்களை தொழிற்சாலை பணிகளுக்கு விடுவிக்கிறது. தொழில் / உற்பத்தித் துறையில் தொழில்நுட்ப உபயோகத்தால் அந்தத் துறையின் திறன் மேலும் கூடும்போது, அங்கு மிகையாக இருப்பவர்களை அது சேவைத் துறைகளுக்கு விடுவிக்கிறது.


சேவைத் துறை குறிப்பிட்ட முக்கியத்துவம் கொண்டது. ஏனெனில், அங்குதான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி நடைபெறுகிறது. அங்குதான் புதிய யோசனைகள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு பழைமையான துறைகளான விவசாயம் மற்றும் உற்பத்தித் துறை ஆகியவற்றின் அதிக உற்பத்தி திறனுக்கும் உற்பத்திக்கும் அங்கு உருவாக்கப்படும் யோசனைகள் முக்கியமானவை. இந்த இரண்டு பழந்துறைகளில் உற்பத்தி அதிகரிக்கும்போது, அதன் விளைவாக மேலும் அதிகமான தொழிலாளர்கள் சேவைத் துறைக்கு விடுவிக்கப்படுகிறார்கள். சேவைகளின் உருவாக்கம், வினியோகம், நுகர்வு ஆகியவை நகரங்களில்தான் மிகத் திறனோடு நிகழ்கின்றன.நகரமயமாக்கம்:

மனித இனம் வெகு வேகமாக நகரமயமாக்கம் அடைந்து வருகிறது. 1800களில் இருந்த உலக மக்கள் தொகையில் (90 கோடி) 3 சதவிகிதம் பேரே 2. 70 கோடி) நகரங்களில் வாழ்ந்து வந்தனர். அதுவே 1900களில், உலக மக்கள்தொகையான 160 கோடியில் 10 சதவிகிதம் பேரே நகரங்களில் வசித்தனர். இன்றைய உலக மக்கள்தொகையான 600 கோடியில் பாதிக்கும்மேல் நகரங்களில் வாழ்கின்றனர். இதுவே 2050ம் ஆண்டுவாக்கில், அப்போதைய மக்கள்தொகையாக இருக்கும் என்று ஊகிக்கப்படும் 900 கோடியில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் நகரவாசிகளாக இருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.


குற்றம், சுற்றுச்சூழல் மாசு, ஜனநெருக்கடி போன்ற விஷயங்கள் இருந்தபோதும் நகரங்கள்தான் உற்பத்தி திறன் வாய்ந்தவை. இன்று உலகின் 40 பெரும் பிராந்தியங்களில் வாழும் சுமார் 120 கோடி மக்கள்தான் பொருட்கள் மற்றும் சேவைகளின் உலக உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்பவர்களாக உள்ளனர். உலகின் புதுமையான விஷயங்களில் 85 சதவிகிதத்துக்கும் மேலானவற்றை அவர்களே உற்பத்தி செய்கின்றனர். இந்தப் பெரும் பிராந்தியங்களில் வாழும் ஒரு தனிநபர், பிற பிராந்தியத்தில் வாழ்பவரைவிட பொருட்கள் மற்றும் சேவைகள் உற்பத்தியில் 8 மடங்கு அதிகத்திறன் கொண்டவராகவும், புதுமைகள் படைப்பதில் 24 மடங்கு அதிகத்திறன் கொண்டவராகவும் உள்ளார்.செழிப்பும் ஏழ்மையும்:

நகரங்கள் வளங்களை 'உற்பத்தி' செய்கின்றன. அதன் அர்த்தம், பெரும்பாலான உற்பத்தி நகர்புறங்களில்தான் நடைபெறுகிறது. அதனாலேயே, செல்வச் செழிப்பான பொருளாதாரத்தில் நகரங்கள் தலையாயதாகவும், கிராமப்புறங்கள் ஏழை நிறைந்தாகவும் உள்ளன. ஒரு பொருளாதாரம் ஏழைமையில் இருந்து செல்வச் செழிப்புள்ளதாக மாறுவது, பெரும்பான்மையான மக்கள்தொகையை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மாற்றுவதில்தான் இருக்கிறது.


பொருளாதார வளர்ச்சியின் மையக் கவலை மக்களின் முன்னேற்றமாகவே இருக்கவேண்டும். கிராம மக்கள்தொகையின் முன்னேற்றத்தை, கிராமப்புறங்களின் முன்னேற்றத்தோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. கிராம மக்கள்தொகை, கிராமங்களில் சிக்கிக்கொண்டு இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது. இந்த உரையைப் படித்துக் கொண்டிருக்கும் நம்மைப் போல், கிராம மக்களுக்கும் நகரங்களில் வாழவும், பணிபுரியவும் அதே அளவு உரிமையும், ஆர்வமும் உண்டு. விரும்புகிறோமோ இல்லையோ, கிராமப்புற மக்கள்தொகை நகரமயமாகியே தீரும். தாங்கள் விரும்பும்படி வாழ்வதற்கு அதிக வாய்ப்புகள் கொண்ட இடங்களைத் தேடுவதற்கு மக்களை அவர்களுடைய உள்ளுணர்வு உந்துகிறது. நகர்ப்புறத் துறையின் சான்றோரான ஜேன் ஜேக்கப்ஸ், 'நகரங்கள் சொல்லும் செய்தி, தேர்ந்தெடுக்க் கிடைக்கும் வாய்ப்புகளின் பன்மடங்குப் பெருக்கமே' என்கிறார்.புதிய நகர்ப்புறங்கள் தேவை:

இந்தியாவின் நகரமயமாக்கம் புழக்கத்தில் இருக்கும் நகரங்களைக் கொண்டு நாம் நிறைவேற்றக்கூடிய விஷயம் அல்ல. ஏற்கெனவே தெறிக்கும் அளவுக்கு அவை வளர்ந்து விட்டதோடு, 2030ம் ஆண்டுவாக்கில் நகர்புறங்களில் சேர இருக்கும் 30 கோடி மக்களுக்கு தற்போதுள்ள நகரங்கள் இடமளிப்பது நினைத்துப் பார்க்க முடியாதது. எனவே, திறம் வாய்ந்த, மனிதர்களை மையப்படுத்திய, வாழ்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்ட புதிய நகர்ப்புறங்களை உருவாக்குவது உடனடித் தேவையாகிறது.


இது இந்தியாவுக்கு இருக்கும் மிகச்சிறந்த வாய்ப்பு. ஏனெனில், தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும்போது, எப்படி நகரங்களைக் கட்ட வேண்டும் என்பதைப் பற்றி இதுவரை உருவாக்கப்பட்ட யோசனைகள் அனைத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். அத்தோடு, முந்தைய தலைமுறை நகரங்கள் உருவாக்கப்பட்டபோது ஏற்பட்ட தவறுகளைத் தவிர்க்கவும் முடியும். இதுபோன்ற வாய்ப்பு முன்னேறிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இருந்திருக்கவில்லை. அமெரிக்க நகரங்கள் ஆதாரவள உபயோகத்திலும், அவற்றைப் பேணிக்காப்பதிலும் தகாத பெயர் பெற்றவை, திறனற்றவை. அமெரிக்கர்களின் பாரம்பரிய நகர்ப்புற மையங்கள், நீடித்து இயங்கவல்ல புதிய நகரங்களுக்குக் குடிபெயரும் கட்டத்தை அவர்களுக்குப் பெரும் சுமையாக ஆக்கி உள்ளன.புதிப்பித்தல் வேண்டாம்:

இந்தியா விலையதிகமான தரைவழித் தொலைத்தொடர்புக் கட்டத்தைத் தாண்டி, மலிவான, நவீன, எளிதாக இசைந்து கொடுக்கக்கூடிய கம்பியில்லா தொலைத்தொடர்பு விஷயத்தில் முன்னணி வகிக்கிறது. அதுபோல, பழைய நகரங்களை அதீத செலவில் புதுப்பிக்கும் விலைகூடிய வேலையைத் தவிர்த்து, புதிய நகரங்களைக் கட்டுவதன் மூலம் கூடுதல் திறனோடும், விரைவாகவும் நகரமயமாக்கம் செய்ய முடியும்.


இந்தியாவுக்குப் புதிதாக வடிவமைக்கப்பட்ட நகரங்கள் தேவை. அதாவது, நன்கு யோசித்து வடிவமைத்த, தெளிவான தன்மை கொண்ட நகரங்கள் தேவை. தொழில்நுட்பச் சிக்கல் நிறைந்த பொருட்களான கணினி, ஜெட் விமானங்கள் ஆகியவை பல தலைமுறைகளின் கடின உழைப்பால் கற்றுக்கொள்ளப்பட்ட, ஆழ்ந்து ஆராய்ந்த வடிவமைப்பின் தயாரிப்புகள். அதுபோல் நகரங்களும் மனிதர்களின் உருவாக்கத்தில் விளைந்த மிகச் சிக்கலான சில விஷயங்களுள் ஒன்று. எனவே, அவை நல்ல முறையில் வடிவமைக்கப்பட வேண்டும்.தனித்தன்மை:

ஒரு நகரத்தில் கிடைக்கும் சேவைகளான வர்த்தகம், நிதி, கல்வி, பொழுதுபோக்கு, சமய க்ஷேத்திரம், கலை, உற்பத்தி போன்ற பல நூறு விஷயங்களில் எது பிரதான செயல்பாடாக உள்ளதோ, அதைப் பொறுத்தே அந்த நகரத்தின் தனித்தன்மை அமைகிறது. உதாரணமாக, ஒரு நகரத்தை, அதன் முதன்மையான நோக்கமாகப் பல சிறந்த பல்கலைகழகங்களைக் கொண்டிருப்பதை வைத்து வடிவமைக்க முடியும். அப்போது பல்கலைக்கழகக் கல்விக்குத் தொடர்புடைய துணை சேவைகளான அரங்கம், கலைக்கூடம், அருங்காட்சியகம், விளையாட்டு அரங்கம் முதலானவை தேவைப்படும். இதுவே 'உற்பத்தி' என்பது ஒரு நகரத்தின் பிரதான செயல்பாடாக இருக்கும்போது, அதற்குரிய தேவைகளான துறைமுக அணுக்கம், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் போன்றவை தேவைப்படும்.


நகரமயமாக்கத்தை எப்படிச் செயல்படுத்தலாம் என்பதற்குப் பல சுவாரசியமான யோசனைகள் உள்ளன. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரவியல் நிபுணரான பால் ரோமர், 'சார்ட்டர் நகரங்கள்' என்ற யோசனையை முன்வைத்து வருகிறார். அதை ஹார்வார்டு வர்த்தக ஆய்வு இதழ், அதன் '2010ன் 10 திருப்புமுனையான யோசனைகள்' என்பதில் சேர்த்துள்ளது.


ஒரு சார்ட்டர் நகரம் என்பது, அந்த நகரத்துக்கு மட்டும் பிரத்யேக விதிமுறைகள் கொண்டு ஆரம்பிக்கப்படும், இடர்பாடுகள் எதுவும் இல்லாத திட்டம். அந்த விதிமுறைகளில் நாட்டம் கொண்ட மக்களும் நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து அந்த நகரத்தைக் கட்டுவர். ரோமர் கூறுவது, '...ங்புசிதிய விதிகளை முன்மொழிந்து பின்னர் இதில் இணைய யாருக்கு விருப்பம் என்று கேட்டு இந்த விதிமுறைகளின் கீழ் வாழ ஆர்வம் உள்ளவர்கள் அவற்றின் கீழ் வாழும்போது, அந்த விதிமுறைகளைச் சீர்திருத்தம் செய்யவும், மாற்றி அமைக்கவும், முன்னேற்றவும் விரைவான ஒரு வழிமுறையை அது நமக்கு கொடுக்கக் கூடும்' என்கிறார்.


சார்ட்டர் நகரங்கள் இந்தியாவுக்கு ஒரு அருமையான யோசனை. இந்தியா முன்னேற்றப் பாதையில் தற்போது இருக்கும் கட்டத்தில், துணிச்சலான திட்ட முடிவுகளை எடுக்க வேண்டும். அப்படிச் செய்வது அதன் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதோடு, பல கோடி மக்களை வறுமையிலிருந்து வளமைக்கு இட்டுச்செல்லும். புதிய நகரங்களை உருவாக்கவும், அவற்றைச் சந்தை வழிமுறைகள் மூலம் நிதி பெறவும் அனுமதியளிக்கும் தேசியக் கொள்கையை கொண்டு வருவதற்கும் நேரம் கனிந்து இருக்கிறது. இந்தியா பெரிய யோசனைகளை சுவீகரித்துச் செயல்படுவது அவசியம். ஏனெனில், பெரிய தேசமான இந்தியா சிறிய யோசனைகளோடு ஜோடி சேருவது பொருத்தமற்றது.


=======


( இதன் அடுத்த பகுதி 04/11/2013 வெளியாகும்)

இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-702-2.html
ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை
Advertisement


வாசகர் கருத்து

Rajesh Rajendran - Chennai,இந்தியா
02-நவ-201313:03:42 IST Report Abuse
Rajesh Rajendran உண்மையா சொல்லுங்க சார் பாக்கலாம், இது சரிதானான்னு, >>விவசாயத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்போது, அது தன்னிடம் தேவைக்கு அதிமாக இருக்கும் தொழிலாளர்களை தொழிற்சாலை பணிகளுக்கு விடுவிக்கிறது. தொழில் / உற்பத்தித் துறையில் தொழில்நுட்ப உபயோகத்தால் அந்தத் துறையின் திறன் மேலும் கூடும்போது, அங்கு மிகையாக இருப்பவர்களை அது சேவைத் துறைகளுக்கு விடுவிக்கிறது.
Rate this:
Share this comment
revathy - Trichy,இந்தியா
06-நவ-201319:34:40 IST Report Abuse
revathyஓகே ஐ வில் அச்ச்செப்ட்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X