முதல்வருக்காக விரைவில் வெற்றி விழா: நேரில் சந்தித்த "பெப்சி' நிர்வாகிகள் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்காக விரைவில் வெற்றி விழா: நேரில் சந்தித்த "பெப்சி' நிர்வாகிகள் அறிவிப்பு

Added : நவ 06, 2013
Advertisement
முதல்வருக்காக விரைவில் வெற்றி விழா: நேரில் சந்தித்த "பெப்சி' நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை: ஊதிய உயர்வு உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான, "பெப்சி' சார்பில், சென்னையில், நேற்று பேரணி நடந்தது. பேரணி முடிவில், சங்க நிர்வாகிகள், முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
"பெப்சி'யின் தலைமை அலுவலகம், சென்னை வடபழனியில் உள்ளது. இந்த அமைப்பில், 23 சினிமா சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சம்மேளனம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், நேற்று பேரணி நடந்தது. இதையொட்டி, சினிமா மற்றும்,"'டிவி' சீரியல் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது. சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், இசையமைப்பாளர் இளையராஜா, பேரணியை துவக்கி வைத்தார். "பெப்சி' தலைவர் அமீர் தலைமை தாங்கினார். "பெப்சி'யின், 23 சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


முதல்வர் சந்திப்பு:

புதுப்பேட்டை சாலை வரை பேரணி அனுமதிக்கப்பட்டது. பேரணி முடிவில், "பெப்சி' சங்கத் தலைவர் அமீர், செயலர் சிவா, இயக்குனர் சங்கத் தலைவர் விக்கிரமன் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்தனர். சினிமா தொழிலாளர் மற்றும் சின்னத்திரை தொழிலாளர்களின், சம்பள பிரச்னைக்கு, தீர்வு காண வேண்டும்; திரைப்படத் தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட, அரசு நிலம் வழங்கியும், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. அங்கு வீடு கட்ட, நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமா கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் முறைகேடு செய்த நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தொழிலாளர் மீது பொய் வழக்கு போடும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

முதல்வருடனான சந்திப்பு குறித்து, அமீர் கூறியதாவது: தொழிலாளர்களின் கோரிக்கைகளை, 15 நிமிடங்களுக்கு மேலாக, முதல்வர் கவனத்துடன் கேட்டார். வெளி மாநிலத்தில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, இங்கு படப்பிடிப்பு தளங்கள் இல்லாத சூழ்நிலை, சென்னையில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, சம்பள உயர்வு ஒப்பந்தம் போடாதது என, எல்லா கோரிக்கைகளையும் கேட்டார். பின், கோரிக்கைகளை படித்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களை சந்தித்த முதல்வருக்கு, 23 ஆயிரம் தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சார்பில், நன்றி. சென்னையில், படப்பிடிப்பு நடத்த, அனுமதி கொடுத்திருப்பதாக, முதல்வர் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட, பள்ளிக்கரணை அருகில், முதல்வர், 85 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்தார். அதன்பின் அந்த இடம், சதுப்பு நிலம் என்பது தெரிய வந்தது. இதனால், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். முதல்வர் எங்கள் கோரிக்கை குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். அதைத் தொடர்ந்து, அவருக்கு வெற்றி விழா நடத்த உள்ளோம். அதை கலை நிகழ்ச்சியாக நடத்தாமல், உண்மையானத் தொழிலாளர்களின் உள்ளப்பூர்வமான விழாவாக நடத்துவோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் கூறியதாவது: சென்னையில் படப்பிடிப்பு நடத்த, அனுமதி இல்லாததால், பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்போர், அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். சின்ன பட்ஜெட்டில், படம் எடுப்போர், புதுச்சேரி செல்கின்றனர். இதற்கு அதிக செலவாகிறது. எனவே, மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெறாத இடத்தில், படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கும்படி, முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அடுத்து, எல்லா படத்திற்கும், வரி விலக்கு என்றால், சின்ன படத்தை, தியேட்டர் உரிமையாளர்கள் ரிலீஸ் செய்ய மாட்டர். எனவே, பெரிய படங்களுக்கு, குறைந்த வரி விதித்துவிட்டு, சின்ன படங்களுக்கு, முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றோம். முதல்வரும், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். "சீனாவில், புத்தாண்டை விமரிசையாக கொண்டாடுகின்றனர். அதேபோல், தமிழ் புத்தாண்டை கொண்டாட, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றேன். "வரும் ஏப்ரல் மாதம், தேர்தல் வராமல் இருந்தால், இந்த ஆண்டே ஆரம்பிப்போம்' என, முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு, விக்ரமன் தெரிவித்தார்.


முதல்வருக்கு பரிசு:

முதல்வரை சந்தித்த, திரைப்படத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், முதல்வருக்கு பரிசளிக்க, "வாள்' கொண்டு வந்திருந்தனர். அதை, முதல்வர் வாங்கிக் கொள்ளவில்லை. "இன்னொரு சந்தர்ப்பத்தில், வாங்கிக் கொள்கிறேன்' என, சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, முதல்வருக்கு நடத்தும் வெற்றி விழாவில், "வாள்' பரிசளிக்க, முடிவு செய்திருப்பதாக, இயக்குனர் அமீர் தெரிவித்தார்.

Advertisement