வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சந்தையில் ஆட்டுத்தோல் கொள்முதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சந்தையில் ஆட்டுத்தோல் கொள்முதல்

Added : டிச 07, 2013

பொள்ளாச்சி:வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக,பொள்ளாச்சி ஆட்டுத்தோல் சந்தையிலிருந்து, தோலை வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் பகுதியில், மாட்டுச்சந்தை, காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இதில், இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளின், தோல்கள் மட்டும் தனியாக விற்பனை செய்யும் வகையில், பொள் ளாச்சியில் சந்தை செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், செயல்படும் இச்சந்தைக்கு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் உடுமலை பகுதிகளிலிருந்தும் அதிகளவு இறைச்சிக்காக வெட்டப்பட்ட ஆடுகளின் தோல் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இச்சந்தைக்கு, கோவை, திண்டுக்கல் பகுதியிலிருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து, தோல்களை வாங்கிச் செல்கின்றனர். பின், இந்த தோல், ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல் கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பான முறையில், சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.பின், சென்னையிலிருந்து, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆட்டுத்தோல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரம்தோறும் கூடும் இந்த சந்தையில், ஆட்டுத்தோல்களின் வரத்து அதிகரித்து காணப்படும்.
கார்த்திகை, புரட்டாசி மாதங்களில்,மட்டும் இறைச்சி சாப்பிடாததால், ஆட்டு தோல் வரத்து குறைந்து காணப்படும். மற்ற மாதங்களில், அதிகளவு தோல் வரத்து இருக்கும் என வியாபாரிகள் கூறினர்.வியாபாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சியில், ஆட்டுத்தோல் சந்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தோலின் வரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு ஆட்டு தோல் ரூ. 250 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி, தோல்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில், ஷூ, கிளவுஸ், ஜெர்க்கின் போன்ற பொருட்கள் தயாரிக்க இந்த தோல் பயன்படுத்தப்படுவதால், அங்கு ஆட்டுத்தோல்களுக்கு "கிராக்கி' உள்ளது. இதனால், இவற்றை கொள்முதல் செய்து, மற்றொரு வியாபாரி மூலமாக சென்னை கொண்டு செல்லப்பட்டு, ஆர்டர் கொடுக்கும் வெளிநாடு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
வரத்து குறைவு:கார்த்திகை மாதத்தில், இறைச்சி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகளவு இருக்காது. இதனால், இந்த மாதம் ஆட்டுத்தோல் வரத்தும் சந்தையில் குறைந்திருந்தது. வரத்து குறைந்திருந்தால், ஆட்டுத்தோலின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X