யார் ஆட்சியில் நாட்டுக்கு பேராபத்து?| Dinamalar

யார் ஆட்சியில் நாட்டுக்கு பேராபத்து?

Added : ஜன 03, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
யார் ஆட்சியில் நாட்டுக்கு பேராபத்து?

வெளிநாட்டு பயணங்களின் போது, விமானத்தில் மட்டுமே, பேட்டி கொடுத்து, பழகி விட்டவர் பிரதமர் மன்மோகன் சிங். டில்லியில், செய்தியாளர்களை சந்திப்பது அரிது. அப்படியே சந்தித்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களையே அதிகம் பேசுவார். அதனால், அவரது பேட்டியில், எப்போதுமே சுவாரஸ்யம் குறைவு. ஆனால், நேற்றைய பேட்டி, அந்த ரகம் அல்ல. 'மோடி, பிரதமரானால், நாட்டுக்கே பேரழிவு' எனக் கூறி, பா.ஜ., எதிர்ப்புக் குண்டை வெடிக்கச் செய்திருக்கிறார். ஒரு குற்றச்சாட்டுக்கு, இன்னொரு குற்றச்சாட்டு தான் பதிலடி என்பது, அரசியல் நடைமுறை. இதோ விமர்சிக்கின்றனர், இரு பிரபலங்கள்.


'பலவீனமான பிரதமர்' என, விமர்சிக்கும் பா.ஜ.,வுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மன்மோகன் சிங். 'மதவாத தன்மையும், இனக் கலவரமுமே, வலிமைக்கு அடிப்படை என்றால், அந்த வலிமை எனக்கு தேவையில்லை; அதுபோன்ற வலிமையானவரை, பிரதமர் ஆக்கினால், நாட்டுக்கே, அது பேரழிவாக முடிந்து விடும்' என, எச்சரித்திருக்கிறார். மோடி மீதான குற்றச்சாட்டை ஆதாரமாக வைத்து, பிரதமர் இதை சொல்லியிருக்கிறார். மோடி மீதான குற்றச்சாட்டு, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு விட்டது என, கூறலாம். ஆனால், அந்தக் குற்றச்சாட்டு, மோடி ஆளும் குஜராத் மாநில போலீசால் தான், விசாரிக்கப்பட்டுள்ளது. அம்மாநில நீதிமன்றத்தால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு வெளியே விசாரணை நடத்தப்படும்போது, உண்மை புலப்படலாம். பெரும்பான்மையினரும், சிறுபான்மையினரும் இணக்கமாக வாழும் நாடு இது. ஆனால், ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய சக்திகளால், சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அதிகம். குமரி மாவட்டத்தில், நடைக்காவு என்ற இடத்தில், வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்தியதற்காக, ஒருவர் கொல்லப்பட்டார். குலசேகரத்தில், கிறிஸ்தவ பேரணியில் தாக்குதல் நடந்தது. வாழப்பாடியில், 65 அடி உயர இயேசு சிலையை திறக்க, எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி நாடு முழுவதும், பல உதாரணங்கள் கூறலாம். இப்பவே, இப்படி நிலைமை. இதில், மோடி பிரதமரானால், நிலைமை எப்படி இருக்கும்? சிறுபான்மையின மக்கள் அச்சத்தில் வாழ வேண்டியிருக்கும். நாட்டில், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால், சரி செய்து விடலாம். ஆனால், மத கலவரம் வெடித்தால், பேரழிவு நிச்சயம்.

- விஜயதாரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,


'குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை' என, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனும், நீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளன. அப்படியிருக்கும்போது, ஏதோ மோடியே முன்வந்து கலவரம் செய்ததுபோல், பிரதமர் பேசுவது, நீதித் துறையை களங்கப்படுத்தும் செயல். வளர்ச்சி திட்டங்களுக்காக, மத்திய அரசு தரும் விருதுகளை, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட அதிகம் பெற்றது, குஜராத். பொருளாதார வீழ்ச்சிக்கு, உலக நாடுகளை காரணம் காட்டும் பிரதமர், நாட்டின் மொத்த விவசாய உற்பத்தி, 3.5 சதவீதமாக இருக்கும் நிலையில், குஜராத்தில், 11.5 சதவீதமாக இருப்பதை ஏன் மறந்து விடுகிறார்? ஏற்றுமதியில் அதிக பங்களிப்பு, மின்சாரம், குடிநீர் என, பல்வேறு நிலைகளில், ஒரு மாநிலத்தை சிறப்பாக ஆட்சி செய்பவர், மோடி. குஜராத் மக்களால் புறக்கணிக்கப்பட்ட, மதவாத கோஷத்தை முன்னெடுத்து செல்வதன் மூலம், மோடி மீது வேறு எந்த விமர்சனமும் இல்லை என்பதை பிரதமர் நிரூபித்திருக்கிறார். காங்கிரசை விட, இந்த நாட்டுக்கு வேறு எந்த பேராபத்தும் வரப் போவதில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதலாவது ஆட்சியில் நடந்த ஊழல்கள், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருப்பதன் மூலம், அவை மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டன என, பிரதமர் கூறுகிறார். அது மோடிக்கும் பொருந்துமே. எந்த மதக் கலவர குற்றச்சாட்டை மோடி மீது சுமத்தினீர்களோ, அந்த குற்றசாட்டை, அம்மாநில மக்கள் புறக்கணித்ததால் தானே, திரும்பவும் அவரால் ஆட்சிக்கு வர முடிந்திருக்கிறது. அம்மாநில மக்கள் முதல்வராக ஏற்றுக் கொண்டதில் இருந்தே, அந்த குற்றச்சாட்டு பொய்யானது என்பது உறுதியாகி விட்டதே.

- வானதி சீனிவாசன், பா.ஜ., மாநில செயலர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X