தங்கக்குதிரையில் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் வேடுபறி நிகழ்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

தங்கக்குதிரையில் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் வேடுபறி நிகழ்ச்சி

Added : ஜன 19, 2014

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடக்கிறது. ராப்பத்து உற்சவ, ஏழாம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் திருக்கைத்தல ஸேவையில் காட்சி அளித்தார். 8ம் நாளான நேற்று மாலை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது.
சோழப் பேரரசில் தளபதியாக இருந்து, பின்னர் சிற்றரசரான திருமங்கை மன்னன், ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணியை மேற்கொண்ட போது, போதிய நிதியில்லாததால் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார். தவறான வழியில் வரும் பணத்தை கொண்டு திருப்பணிகள் செய்வதை தடுக்க நினைத்த பெருமாள், மாறுவேடத்தில் வந்தார். அவரிடம் வழிப்பறி செய்வதற்காக மன்னன் வழிமறித்தார்.
அப்போது மன்னன் காதில், "ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை பெருமாள் ஓதினார். இதனால் திருமங்கை மன்னன் திருந்தி, திருமங்கையாழ்வாராக மாறினார். "வாடினேன் வாடி' என்ற பாடலை பாடினார். இதைக்கேட்டு பெருமாள் மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், நேற்று மாலை, திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது. நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு, மணல்வெளிக்கு வந்தார்.
வையாளி கண்டருளிய பின் வேடுபறி நடந்தது. திருமங்கை மன்னன் வம்சாவழியைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது. நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியப்பட்டா வாசல் வழியே, மணல் வெளிக்கு வந்ததால் பரமபதவாசல் நேற்று திறக்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X