"ஆம் ஆத்மி' சட்ட அமைச்சர் அத்துமீறி நடந்தாரா?| Dinamalar

"ஆம் ஆத்மி' சட்ட அமைச்சர் அத்துமீறி நடந்தாரா?

Added : ஜன 24, 2014
Advertisement
"ஆம் ஆத்மி' சட்ட அமைச்சர் அத்துமீறி நடந்தாரா?

டில்லியில், போதை மருந்து கடத்தல் மற்றும் பாலியல் தொழில் நடப்பதாகக் கூறி, அம்மாநில சட்ட அமைச்சரும், "ஆம் ஆத்மி' கட்சி தலைவர்களில் ஒருவருமான, சோம்நாத் பார்தி, சமீபத்தில், நள்ளிரவில், தன் ஆதரவாளர்களுடன் சோதனை நடத்தியதும், அப்போது, உகாண்டா பெண்களிடம், தரக்குறைவாக நடந்ததும், பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சர், சோம்நாத் பார்தியின் நடவடிக்கைக்கு, பெண்கள் ஆணையம் உட்பட, பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மாநில அமைச்சர் ஒருவரின்
இந்தச் செயல், சரியா, தவறா என, இரு அரசியல் பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:

ஒரு மாநிலத்தின் சட்ட அமைச்சராக இருந்தாலும், நள்ளிரவில் ஒரு பகுதியில், திடீரென சோதனையிட அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளதா என்பது கேள்விக்குறியே. மேலும், சோதனை நடந்த இடங்களில் தங்கியிருந்த பெண்களிடம், தேவையற்ற கேள்விகளை கேட்டு, அவர்களை கேவலப்படுத்தியதோடு, அவர்கள் மனம் புண்படும் வகையிலும் பேசியுள்ளார், டில்லி சட்ட அமைச்சர், சோம்நாத் பார்தி.
சோதனை நடத்துவதற்கான நெறிமுறைகள், சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின்படியே, சோதனை நடத்த வேண்டும். ஆனால், அதை மீறி, தான்தோன்றித்தனமாக, சட்ட அமைச்சர் என்ற தோரணையில், அதிகார மமதையில் நடந்து கொண்டுள்ளார் பார்தி. அவரின் செயல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இச்செயலுக்காக, அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் அத்துமீறிய செயலுக்கு, பொறுப்பேற்று, அமைச்சர் பதவியை, அவரே முன் வந்து ராஜினாமா செய்யவேண்டும்.
அரசியலில் முதிர்ச்சியற்ற, குழந்தைத்தனமாக உள்ள, "ஆம் ஆத்மி' கட்சி, ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே, கோமாளித்தனங்களை அரங்கேற்றி வருகிறது. முதல்வராக இருப்பவரே, பல நாடகங்களை நடத்துகிறார். திடீரென, சாலையில் அமர்ந்து போராடுகிறார். அதற்கு, மக்களையும், போலீசாரையும் அழைக்கிறார்.ஒரு அரசு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யாமல், எதை
செய்யக் கூடாதோ, அதையெல்லாம், ஆம் ஆத்மி செய்து வருகிறது.முதல்வர் கெஜ்ரிவால்
எப்படி செயல்படுகிறாரோ, அவரைப் போலவே, அமைச்சரவைசகாக்களும் செயல்படுகின்றனர்.
இவர்கள், அடிக்கும் கூத்து, வரும்காலங்களில் இன்னும் அதிகரிக்கும்.இவர்களுக்கு ஏன், ஓட்டுப் போட்டோம் என, டில்லி மக்கள் நொந்து போகும் நாள், வெகு தூரத்தில் இல்லை.

சிவகாமி பரமசிவம் , மாநில செயலர், தமிழக பா.ஜ.,

மற்ற மாநிலங்கள் எல்லாம், போலீஸ் அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ள நிலையில், டில்லி அரசுக்கு மட்டும், போலீஸ் அதிகாரம் இல்லை. அதனால், மாநில அரசு சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அனைத்து பாதுகாப்புக்கும், மத்திய அரசை எதிர்பார்த்துள்ளது.தலைநகரில், போலீஸ் அதிகாரத்தை, டில்லி அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது, நீண்ட நாள் கோரிக்கை. அதுபற்றி,
பல விவாதங்களும் நடந்து வருகின்றன.இந்த, அதிகாரத்தையே, ஆம் ஆத்மி அரசு கேட்கிறது. இது தவறில்லை.இந்நிலையில், டில்லியின் ஒரு பகுதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டு, அங்கு தங்கியிருந்த ஆப்ரிக்க பெண்கள், விபசாரம் செய்ததாகவும், போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதா
கவும், உட்கொண்டதாகவும், மாநில சட்ட அமைச்சரே புகார் செய்துள்ளார். அமைச்சரின் சோதனையின் போது, வரம்பு மீறி, சில செயல்கள் நடந்ததாக கூறப்படுகிறது.சோதனை நடத்தவதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சோதனையின் போது பெண்களை, மோசமாக நடத்தியுள்ளனர் என்றும், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபசாரம், போதை பொருள் விற்பனையை தடுக்க, அதற்குரிய முறையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.சட்ட அமைச்சரின் செயல்பாடுகளை, முதல்வர் கெஜ்ரிவால், கண்டித்திருக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது. இதுகுறித்து, டில்லி முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். எனவே, தவறுகளைத் தடுக்கும் போது, மேலும் தவறுகள் நிகழாதபடி, டில்லி அரசு நடவடிக்கை எடுத்தால், உண்மையான நோக்கம் நிறைவேற்றப்படும்.இல்லையேல், மேலும், தவறுகள் நடக்க, அரசின் செயல்பாடுகள் துணை போய்விடும். அதற்கு, இடம் கொடுக்காமல், செயல்பட வேண்டும் என்பதே, தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பமாகவும் இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X