விஜயகாந்த் தமிழக முதல்வராக வருவாரா?| Dinamalar

விஜயகாந்த் தமிழக முதல்வராக வருவாரா?

Added : பிப் 16, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
விஜயகாந்த் தமிழக முதல்வராக வருவாரா?

பிரதமர் மன்மோகன் சிங்கை, நேற்று முன்தினம், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் சந்தித்துப் பேசினார். அப்போது, 'முதல்வர், ஜெயலலிதா எனக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறார்; நேரில் சந்திப்பதில்லை. ஆனால், நீங்கள் என்னை நேரில் சந்தித்து, குறைகளை தெரிவித்தது வரவேற்கத்தக்கது. நீங்கள் முதல்வரானால், தமிழக பிரச்னைகள் தீரும் என, நினைக்கிறேன். தமிழகத்தின் அடுத்த முதல்வராக, நீங்கள் வரவேண்டும்' என, விஜயகாந்திடம், மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதை, விஜயகாந்தே, வெளியில் நிருபர்களைச் சந்தித்த போது, கூறியுள்ளார். விஜயகாந்த் முதல்வரானால் எப்படி இருக்கும்; தமிழக பிரச்னைகள் தீர்ந்து விடுமா என்பது தொடர்பாக, இரு பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:

ஒரு கட்சியானது துவங்கப்பட்டது முதல், மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்படும். மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்குப் பெற்றுள்ள, தே.மு.தி.க.,வின் தலைவர், விஜயகாந்தும், அந்த ஆசையில் இருப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அதையே, டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின், அவர் வெளிப்படுத்தியுள்ளார். விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என, மன்மோகன் சொன்னாரா என்பது பற்றி தெரியவில்லை. அப்படி சொல்லியிருந்தால், நாட்டின் மூத்த தலைவரும், மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதைக்கு உரியவருமான, மன்மோகன், தமிழகத்தின் முதல்வராக விஜயகாந்தை ஆசீர்வதித்துள்ளார் என்று தான் பொருள். தமிழகத்தில், இவர் தான் முதல்வராவார் என, யாரையும் கணித்து, இதுவரை சொல்லவில்லை. முதல்வராக இருந்து தோற்றவர்கள் உண்டு. அவர்களே மீண்டும் முதல்வராக வந்த வரலாறும் உண்டு. எனவே, இவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என, யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது அந்த வகையில், விஜயகாந்தும் தமிழக முதல்வர் ஆக விருப்பம் தெரிவித்துள்ளார். டில்லியில் யாரும் எதிர்பாராத நிலையில், 'ஆம் ஆத்மி' கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் முதல்வரானார். பெரும் திருப்பங்கள் டில்லி அரசியலில் ஏற்பட்டது. அதுபோன்ற நிலை, தமிழகத்திலும் ஏற்படலாம். அதை மறுக்க முடியாது. அதுபோன்ற சூழலை, தமிழகத்தின் மாற்று அரசியல் என, சொல்கின்றனர். ஆனால், எந்த மாற்றங்கள் ஏற்படுவதானாலும், அது மக்கள் கையில் உள்ளது. அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தமிழகத்தின் பிரச்னை களை முன்னிறுத்தி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பிரதமரை அவர் சந்தித்து, மாநில பிரச்னைகளைத் தீர்க்க, கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அவரது இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. மாநில நலன் கருதி, இதுபோன்ற முயற்சிகளை யார் செய்தாலும் அது பாராட்டுகுரியதே.

பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,


நாடு முழுவதும், காங்கிரஸ் மீது கோப அலை வீசுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில், லோக்சபாவிற்கு கத்தியுடன், காங்கிரஸ் -- எம்.பி.,க்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், எதைத் தின்றால் பித்தம் நீங்கும் என, காங்கிரஸ் நினைக்கிறது. அதில், ஒரு களமாக தமிழகத்தை பயன்படுத்த நினைக்கிறது. அதற்கு, விஜயகாந்துக்கு முதல்வர் என்ற ஆசையைத் தூண்டி விட்டு நாடகம் நடத்துகிறது. ஏற்கனவே, விஜயகாந்துக்கு உள்ள முதல்வர் ஆசை, காங்கிரஸ் போட்ட தூபத்தால் பேராசையாக மாற்றியுள்ளது. ஆனால், இதற்கெல்லாம் அவர் தகுதியானவரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பிரதமர் சந்திப்பு குறித்து, டில்லியில் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தாறுமாறாக வசைபாடுகிறார் விஜயகாந்த். இவரை நாடு தாங்குமா என, தெரியவில்லை. மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவராகவும் சட்டசபையில் உள்ளார். ஆனால், சட்டசபைக்கு வந்து, மக்கள் பிரச்னைகளை முன்வைத்து பேசுவதில்லை. சட்டசபைக்கு வராமல், சட்ட சபைக்கு வெளியிலிருந்து அரசியல் நடத்தி வருகிறார். அதில், ஒரு பகுதியாக, பிரதமரை சந்தித்து, தமிழக பிரச்னைகள் குறித்து மனுக்கொடுத்துள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை, சட்ட சபையில் பிரதிபலித்து, உரிய விவாதங்களை நடத்தி, அதன்மூலம் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டிய, ஜனநாயக முறையில், அவருக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தமிழகத்தின் முதல்வர் ஆகிவிட வேண்டும் என, துடிக்கிறார். விஜயகாந்தின் போக்கு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இல்லை. அப்படியிருக்கும் போது, காங்கிரசின் கபட நாடகத்துக்குப் பலியாகி, முதல்வர் கனவுக்குள் மூழ்கிவிட்டார். அவரது கனவு நிறைவேறுமா என்றால், அதற்கு மக்கள் உரிய பதிலைத் தருவர். விஜயகாந்துக்கும் அதை புரிய வைப்பர்.

ஆறுமுகம், எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X