கூட்டணிக்காக பணம் பேரம் பேசுவது ஜனநாயகமா?| Dinamalar

கூட்டணிக்காக பணம் பேரம் பேசுவது ஜனநாயகமா?

Added : மார் 09, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கூட்டணிக்காக பணம் பேரம் பேசுவது ஜனநாயகமா?

ஏற்கனவே கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீத அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் இருப்பதால், பெரும்பாலும், அந்த ஓட்டு சதவீதத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, வெற்றிக்கனியை பறிக்க, பெரிய கட்சிகள் அடுத்தடுத்த நிலையில் இருக்கும் கட்சிகளோடு கூட்டணி அமைக்கின்றன. தங்கள் ஓட்டு வங்கிக்கு ஏற்ப பெரிய கட்சிகளிடம், "சீட்' பெறுவது வாடிக்கை. ஆனால், "சமீப காலமாக, அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டு "சீட்'களோடு, பணம் பெறுவதும் வாடிக்கையாகி இருக்கிறது. அது தேர்தல் நடைமுறைக்கு கேடானது' என்று பரவலான கருத்திருக்கிறது. இது குறித்து, அரசியல் பிரபலங்கள் இருவரின் வாத - பிரதிவாதங்கள் இங்கே:

கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தான், அனைத்துத் தரப்பு ஓட்டுகளையும் பெற்று வெற்றி பெற முடியும் என்பது, தற்போதைய அரசியல் சூழல். பெரிய கட்சிகளுக்கு கணிசமான ஓட்டுகள் இருந்தாலும், வெற்றியை உறுதி செய்ய, சிறுபான்மையினர் கட்சிகள் போல பிற மக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்களை, கூட்டணியில் சேர்க்கின்றனர். சிறிய கட்சிகள், சட்டசபை, பார்லிமென்டில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என, பெரிய கட்சிகளிடம் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுகின்றன. கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. ஆனால், 80 தொகுதிகளில், அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு துணை நின்றது. கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி தான், அதிக இடங்களில் போட்டியிடுகிறது. சிறிய கட்சிகள், அவர்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் பிரசாரத்தை மேற்கொள்கின்றன. இதனால், பெரிய கட்சிகளுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. அவர்களுக்கு, பணியாற்றும் கூட்டணிக் கட்சிகளின் பிரசாரங்களுக்கு, பெரிய கட்சிகள் உதவி செய்வது வாடிக்கை தான்.
இதை, பணம் பெற்று, கூட்டணி சேர்ந்தனர் என கூற முடியாது. தொகுதிகளை முன்னிறுத்தியே பெரும்பாலான கூட்டணிகள் அமைகிறது. பணத்தை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகள் அமைவதில்லை. தொகுதிகளோடு, பணத்தையும் முன்னிறுத்தி கூட்டணி பேரங்கள் நடப்பது, ஜனநாயகத்தை மையப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சிகளில் நடப்பதில்லை. இதுதவிர, கொள்கை முரண்பாடுகள் கொண்ட கட்சிகளை, எவ்வளவு பணம் கொடுத்தாலும், கூட்டணியில் சேர்க்க முடியாது. முஸ்லிம்கள், பா.ஜ.,வுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டார்கள். இதுபோல, நேர் எதிரியாக உள்ளவர்கள் ஒரு கூட்டணியில் எந்த ஆதாயத்துக்காகவும் சேரமாட்டார்கள். அதுபோன்ற கூட்டணிகளை அமைத்தால், மக்களுக்கு தெரியாமலா போகும். அவர்கள் எப்படி ஓட்டுபோடுவர். மக்களைப் பற்றி கவலையில்லாமல், அமைக்கும் கூட்டணிகள், மக்கள் மன்றத்திலிருந்து துரத்தப்படுவர்.

ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சி

கறுப்பு பணத்தைக் கொண்டு தான், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. தொகுதிகளை ஒதுக்குவதோடு, ஒவ்வொரு தொகுதிக்கும், இவ்வளவு பணம் வேண்டும் என, கோடிக்கணக்கான ரூபாயை, பெரிய கட்சிகளிடமிருந்து சிறிய கட்சிகள் பெறுகின்றன. தேர்தலில் கறுப்புப் பணத்தை தடுக்க வேண்டும் என, லோக்சபா தொகுதியில் தேர்தல் செலவை, 40 லட்சம் ரூபாயிலிருந்து, 70 லட்சம் ரூபாயாக, தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகளில், தேர்தலை முன்னிட்டு நடக்கும் பணப் புழக்கமோ, கோடிகளில் உள்ளது. கொள்கைகளைச் சொல்லி, மக்கள் திட்டங்களைச் சொல்லி வெற்றிபெற முடியாத கட்சிகள், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில், வாக்காளர்களை விலைக்கு வாங்கவும், சிறிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கவும், பெரும் பணத்தை செலவிடுகின்றன.
இந்த பணம் இவர்களுக்கு எப்படி வந்தது. அதற்கு என்ன கணக்கு என்பதை, அரசியல் கட்சிகள் வெளியிட மறுக்கின்றன. டில்லி சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு சட்டசபை வேட்பாளருக்கும், ஒதுக்கப்பட்ட பணம், அப்பணம் கட்சிக்கு வந்ததன் பின்னணி ஆகியவற்றை, இணையதளத்தில் வெளியிட்டோம்.
இதுபோல, எந்த அரசியல் கட்சியும் வெளியிட தயாராக இல்லை. அப்படி வெளியிட்டால், பணத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். கணக்கு காட்டிய பணத்துக்கு, வருமான வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க, பணத்தை கணக்கு காட்டுவதில்லை. முக்கிய அரசியல் கட்சி வேட்பாளராக நிற்க, பலர் பணம் தருகின்றனர். பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு, வேட்பாளர்களை சில கட்சிகள் அறிவிக்கின்றன. மக்களை நம்பாமல், பணத்தில் வெற்றி பெறலாம் என்ற, தீய நோக்கில், அரசியல் கட்சிகள் உள்ளன. அப்படி வெற்றிபெறும்போது, தேர்தலுக்கு செலவிட்ட பணத்தை சம்பாதிக்க, ஊழல் செய்கின்றனர்.
மக்கள் திட்டங்களிலிருந்து பணத்தை சுருட்டுகின்றனர். சிறிய கட்சிகளுக்கு பணம் கொடுப்பதற்காகவே, பெரிய கட்சிகள் மக்கள் வரிப் பணத்தில் கை வைக்கின்றன. இதையெல்லாம் தடுக்க தேர்தல் சீர்திருத்தமே தீர்வு,

ஜெயராமன் வெங்கடேசன் தமிழக பிரசார குழு உறுப்பினர், "ஆம் ஆத்மி' கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X