ஆன்மிகவாதிகள், மதத் தலைவர்கள் அரசியல் செய்யலாமா?| Dinamalar

ஆன்மிகவாதிகள், மதத் தலைவர்கள் அரசியல் செய்யலாமா?

Added : மார் 11, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
ஆன்மிகவாதிகள், மதத் தலைவர்கள் அரசியல் செய்யலாமா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியல்வாதிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, 'அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறோம்' என, ஒரு ஆன்மிகவாதி இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னாரை பிரதமர் ஆக்கப்பாடுபடுவேம் என்றும் கூட சொல்லி புறப்பட்டிருக்கிறார். அதேபோல் எதிரணியில், இன்னொரு மதத் தலைவர், குறிப்பிட்ட ஒரு கட்சிக்காக, கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். ஆன்மிகவாதிகளும், மதத் தலைவர்களும் அரசியல் செய்வது குறித்து, சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், இது குறித்து மாறுபட்ட கருத்துக்களோடு, இரண்டு பிரபலங்கள் நடத்திய மோதல் இங்கே:


ஒவ்வொருவரும் அவர் விரும்பும் மதத்தை பின்பற்ற முழு உரிமை உள்ளது. ஆனால், மத கோட்பாடுகளை பிறர் மீது புகுத்தக் கூடாது என்பதே பொது விதி. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், இதற்கான வழிமுறைகள் தெளிவாக உள்ளன. ஆனால், சட்டத்தை மீறி, சிறுபான்மையினரை நசுக்க வரும்போது, அதை எதிர்க்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் அரசியல் துணையை நாட வேண்டி உள்ளது. ஏற்றத் தாழ்வுகள் நிரம்பிய இந்த சமூக அமைப்பில், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமையை மேம்படுத்த, சட்டத்தில் பல்வேறு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சமூக நீதியை காக்க, இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. சமூக நீதிக்கு ஆபத்து வந்தால், அதை பாதுகாக்க வேண்டியது, அனைவருடைய கடமை. அதற்காக, குரல் கொடுக்கும்போது, மதத் தலைவர் அரசியலுக்கு வரலாமா என, கேள்வி எழுப்ப முடியுமா? மதத் தலைவர்களுக்கும், அவர்களுடைய கருத்தை வெளியிடும் உரிமை உண்டு. அரசியல் ரீதியாக, பொது அமைதியை பாதுகாக்க வேண்டும் என்றால், அதை செய்ய வேண்டிய கடமை, மதத் தலைவர்களுக்கு இருக்கிறது. சமூக மேம்பாட்டுக்கு தான், ஈ.வெ.ரா., குரல் கொடுத்தார். அவர் நேரடி அரசியலுக்கு வரவில்லை. ஆனால், இட ஒதுக்கீடு தொடர்பான முதல் அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த காரணமாக இருந்தவர் ஈ.வெ.ரா., மேலும், சமூக அமைப்பில் சில சித்தாந்தங்களை அனைவரும் ஏற்க வேண்டியும் உள்ளது. தமிழ் இலக்கியங்கள், சித்தர்களின் அருளுரை போன்றவற்றை, அரசியல் நோக்கோடு தேடித் தேடி அழித்தனர். அப்போது, இதற்கு எதிராக, சமயத் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, எங்களது மதம், கோட்பாடுகளை பிறர் மீது புகுத்த நினைக்கவில்லை. சிறுபான்மையினரை, பெரும்பான்மையினர் அரசியல் ரீதியில் நசுக்க முற்படும்போது, அதற்கு எதிராக குரல் கொடுக்கிறோம். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்.,சின் அரசியல் வடிவமாக உள்ள, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயன்றால், அதைத் தடுக்க வேண்டியுள்ளது.

எஸ்றா. சற்குணம், பிஷப், இந்திய இவாஞ்சிகல் தேவாலயம்

மதத் தலைவர்கள், மத நிறுவன தலைவர்கள், சர்வ காலமும் ஆன்மிகத்தையும், அவர்கள் சார்ந்த மதத்தையும், அதன் கொள்கைகளை பாதுகாக்கவும், பரப்பவுமே செயல்படுகின்றனர். தேர்தல் வரும்போது, திடீரென்று அரசியல் தலைவர்களை சந்திக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கின்றனர். சிலர், அரசியல் தலைவர்களை வெற்றி பெற செய்வோம் என, பிரசாரத்திலும் ஈடுபடுகின்றனர். மதத் தலைவர்களின் இதுபோன்ற செயல்கள், அவர்கள் சார்ந்துள்ள மத நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடவோ, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கவோ பயன்படுகிறது. இதைத் தவிர, மதத் தலைவர்களின் அரசியல் பிரவேசத்துக்கு வேறு காரணங்கள் இல்லை. தனிப்பட்ட முறை யில், அரசியல் சார்பு ஒருவருக்கு இருப்பது அவரது உரிமை. ஆனால், அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என, புறப்படும் மதத் தலைவர்கள், முழுமையாக அரசியலுக்கு வந்துவிட்டால், அவர்களின் செயல்பாடுகளை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் பிரவேசத்தை செய்வது, அதன்பின் எங்களது கடமை, ஆன்மிகம் என்று செல்வது என, அவர்களது அணுகுமுறை மாறுவது தான் விவாத பொருளாகிறது. சமூகத்தில் பெரும் மத மோதல்கள், ஜாதி சண்டைகள் நடக்கும்போது, சமூகத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என, இப்போது அரசியல் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும், மதத் தலைவர்கள் அமைதியாக இருப்பது ஏன். சமூகத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கு பதில், அவர்கள் சார்ந்த மதத்தையோ, ஜாதியையோ காப்பாற்ற வேண்டும் என்றே செயல்படுகின்றனர். எனவே, மத நிறுவன தலைவர்களுக்கு, அவர்கள் சார்ந்த மதத்தின் சிந்தனையே எப்போதும் இருக்கும். அவர்களால், பொதுவான சமூக அமைப்பை ஏற்படுத்த முடியாது. இந்த சிந்தனைகளோடு, தேர்தல் காலங்களில் அரசியலுக்கு வந்து செல்வது, முழுக்க, முழுக்க, அவர்களின் சொந்த லாப, நஷ்டங்களை கருத்தில் கொண்டு தானே தவிர, பொது நலனுக்காக அல்ல.

சு.வெங்கடேசன், பொது செயலர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
11-மார்-201403:05:49 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran சுயநலவாதி்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X