எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை ஓராண்டுக்குள் முடிப்பது சாத்தியமா?| Dinamalar

எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை ஓராண்டுக்குள் முடிப்பது சாத்தியமா?

Added : மார் 12, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை ஓராண்டுக்குள் முடிப்பது சாத்தியமா?

'ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, குற்றச்சாட்டு பதிவான ஓராண்டுக்குள் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, இறுதித் தீர்ப்பு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், கீழ் கோர்ட்டுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே, கிரிமினல் வழக்குகளில் இரண்டாண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால், மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்க, நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவால், கிரிமினல் பின்புலம் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பலரும் ஆடி போயிருக்கின்றனர். இந்த உத்தரவு குறித்து, மாறுபட்ட நிலைப்பாட்டில் இருக்கும் அரசியல் பிரபலங்கள், இருவர் நடத்திய கருத்து மோதல்:




அரசியல்வாதிகள், பொதுமக்களின் நேரடிப் பார்வையில் உள்ளவர்கள். அவர்கள் மீது குற்றச்சாட்டை கூறுவதும், அது தொடர்பாக வழக்குத் தொடர்வதும், உடனடியாக வெளிப்பட்டு விடுகிறது. அதனால், அரசியல்வாதிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, கேள்வி எழுப்புகின்றனர். அரசியல்வாதிகளை விட, கறுப்பு பணத்தை அதிகம் வைத்துள்ளவர்களும், சட்டத்துக்குப் புறம்பாக தொழில் செய்பவர்களுமான, கார்பரேட் முதலாளிகள் பலர் மீது, நீண்ட காலமாக வழக்குகள் நடந்து வருகின்றன. அவர்கள் மீதான நடவடிக்கை, என்ன என்றே தெரியவில்லை. பல கார்ப்பரேட் முதலாளிகள், நீதியை வாங்கும் நிலையில் உள்ளனர். சில தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத அவர்கள், முறையீடுகளில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறுகின்றனர். இதற்கு, அவர்களிடம் உள்ள பணம் தான் காரணம். முதலாளிகள் நீதியிலிருந்து தப்பிப்பதும், நீதியை வாங்குவதும் இன்று நேற்று அல்ல, பழங்காலம் தொட்டு நடக்கிறது. பிரபுகள் சபை அதற்காகவே துவங்கப்பட்டதை, வரலாறு சொல்கிறது. கார்ப்பேரட் முதலாளிகள் மீதான வழக்குகள் முடிவுக்கு வராமல், பல ஆண்டுகளாக இழுப்பதால், பல்லாயிரம் பேர் பாதிக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம், நெருக்கடிக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலை, ஒரு அரசியல்வாதியால் ஏற்படுவதில்லை. ஆனாலும், அரசியல்வாதிகள் மீதான வழக்கை, ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பை, அரசியல்வாதிகளுக்கு மட்டும் செயல்படுத்தாமல், அதிகார பலம், பண பலம் கொண்ட முதலாளிகளுக்கும் சேர்த்து செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் தான், அதிகார பலமும், பண பலமும் கொண்டவர்கள், சமூகத்தில் முன்னுரிமை பெற்றவர்கள் எனக் கூறப்படுபவர்களும், சட்டத்திலிருந்து தப்பிக் முடியாது. அவர்களும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே. அவர்கள் தவறு செய்தாலும், வழக்குத் தொடரப்பட்டு, விரைவில் தண்டிக்கப்படுவர் என்ற எண்ணம் ஏற்படும். நீதியின் மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் நீடிக்கும்.

கே.எஸ்.அழகிரி, எம்.பி., காங்கிரஸ்

அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை, ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என, நீதித் துறைக்கு, உச்ச நீதிமன்றம் கால வரையறையை நிர்ணயித்துள்ளது. இதன்மூலம், அரசியல்வாதிகள் குற்றம் செய்தால், தண்டனை கிடைப்பதில்லை என, மக்கள் மத்தியில் நிலவும் கோபத்தை குறைக்க முற்பட்டுள்ளனர். ஆனால், இந்த உத்தரவுக்கு கைமேல் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே. தேர்தல் வழக்குகளை, ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என, ஏற்கனவே உத்தரவு உள்ளது. 2009 லோக்சபா தேர்தல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், நான்கு வழக்குகள் தான் முடிந்துள்ளன. சிதம்பரம், அழகிரி உள்ளிட்டோரின் தேர்தல் வெற்றி தொடர்பான வழக்குகள், இன்னும் முடியவில்லை. அவர்களின் பதவிக்காலம் முடிகிறது. இனிமேல், தீர்ப்பு வந்தாலும் பயனில்லை. எனவே, தேர்தல் வழக்குகளை, ஆறு மாதத்தில் முடிக்கும் உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை. குற்ற வழக்குகளில், கீழ் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்து, தண்டனைக்கு தடை பெறுகின்றனர். சட்டப் பிரிவு, 84ன் படி, இந்த தடை ஆணையைப் பெறுபவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிகளில் தொடர்கின்றனர். இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும். மேல் முறையீட்டில் தடை பெற்றாலும், அவர்களை நீதிமன்றம் நிரபராதி என, உறுதி செய்யவில்லை. எனவே, கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்பை, மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் நிராகரிக்கும் வரை, அவர்கள் குற்றவாளிகள் என்றே பாவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், அதற்கு தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், அரசியல்வாதிகள் மீதான குற்றங்களை, ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உத்தரவு, எந்தளவு நடைமுறைக்கு வரும் என, தெரியவில்லை. நீதிபதிகள் பற்றாக்குறை, நீதிபதிகள் பணி மாறுதலால், விசாரணையில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றை காரணம் காட்டி, ஓராண்டுக் குள் வழக்கை முடிக்க முடியாது என கூற வாய்ப்புள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவு எவ்வளவு தூரம் நடைமுறைக்கு வரும் என, தெரியவில்லை.

சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X