முதல் முறையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டி: 20 லோக்சபா தொகுதிகளில் களம் இறங்க திட்டம்| Dinamalar

முதல் முறையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டி: 20 லோக்சபா தொகுதிகளில் களம் இறங்க திட்டம்

Added : மார் 13, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தமிழக தேர்தல் வரலாற்றில், முதல் முறையாக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், வேறு கட்சிகளின் கூட்டணி இல்லாமல், ஓரணியில் தனித்துப் போட்டியிடுகின்றன.

கடந்த, 1964 ஏப்., வரை, இந்திய கம்யூனிஸ்ட் என்ற, ஒரு கட்சி தான் இருந்தது. பின், அக்கட்சியில் ஏற்பட்ட பிளவால், மார்க்சிஸ்ட் கட்சி உதயமானது. இதையடுத்து, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், நேர் எதிரிகளாக செயல்படத் துவங்கினர். ஒரு கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கும் கூட்டணியில், மற்றொரு கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்காத அளவுக்கு, எதிரும், புதிருமாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் செயல்பட்டன.


கூட்டணி ஏற்படுத்தி...:

1967 சட்டசபை தேர்தலின் போது, இந்திய கம்யூனிஸ்ட் தனித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தி.மு.க.,வோடு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. 1971 சட்டசபை தேர்தலின் போது, இந்திய கம்யூனிஸ்ட் தி.மு.க.,வோடு கூட்டணி அமைத்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்தும் போட்டியிட்டன. 1977ல், காங்கிரசுடன், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்தது. அ.தி.மு.க.,வுடன், மார்க்சிஸ்ட்கள் கூட்டணி ஏற்படுத்தினர்.


தொகுதிகளை பங்கிட்டு:

ஆனால், 1978ல், இடதுசாரி ஜனநாயக முன்னணி உதயமானது. இதன்பின், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து செயல்படத் துவங்கின. இருப்பினும், ஏதாவது ஒரு திராவிடக் கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில், அங்கம் பெற்றனர். தற்போது, முதன்முறையாக, இடதுசாரி ஜனநாயக மதச்சார்ப்பற்ற அணியை உருவாக்கி, தமிழகத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தங்களுக்குள் மட்டும் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொண்டு, லோக்சபா தேர்தலை சந்திக்கின்றன.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் கூறியதாவது: இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், எந்த கட்சிகளுடனும் சேராமல், முதல்முறையாக தனித்துப் போட்டியிடுகிறோம். குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட்டால், கட்சிக்கு ஓரளவு செல்வாக்குள்ள மற்ற தொகுதிகளில், யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எழுகிறது. எனவே, கட்சிக்கு ஓரளவு செல்வாக்குள்ள அனைத்துத் தொகுதிகளிலும், போட்டியிடுவது என, முடிவு செய்துள்ளோம். 20 தொகுதிகள் வரையில் போட்டியிடுவோம்.


பிரச்னை இருக்காது:

எங்களுக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகள் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நடத்திய முதல்கட்ட பேச்சில், அவரவர் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். தொகுதிப் பங்கீட்டில், எங்களுக்குள் பிரச்னை இருக்காது. எனவே, வரும், 17ம் தேதி முதல், தேர்தல் பிரசாரத்தை துவங்கி விடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X