தமிழகத்தின் பாரம்பரியச் சின்னம்: கி.பி. 1987ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சைப் பெரியகோயிலை அறிவித்தது. இதன் மூலம் இக்கோயிலின் பெருமை உலகத்தின் பலநாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. மனிதமரபினை, பண்பாட்டினைப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷமாகத் திகழும் இக்கோயிலைக் காண நாள்தோறும் வெளிநாட்டவர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இக்கோயிலை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கான காரணங்கள்.
1.பொதுவாக பெரிய கோயில்களை பலகாலம் பல மன்னர்கள் கட்டுவர். ராஜராஜன் ஒருவனாலேயே எழுப்பப்பட்ட முழுமையான பிரம்மாண்ட கோயில் இது.
2.ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த திருக்கற்றளி கோயிலாக அமைந்தது. (கற்களால் ஆன கோயில்களைக் கற்றளி என்பர்)
3.கருவறைக்கு மேலே உயரமான விமானம் அமைத்தது மாறுபட்ட அமைப்பாக இருந்தது.
4.புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.
5.ராஜராஜசோழன், தானேகோயில் கட்டியதற்கான ஆதாரத்தை கல்வெட்டில் பொறித்ததோடு மட்டுமல்லாமல், எந்தெந்தவகையில் பொருள் வந்தது என்பதையும், கோயிலுக்கு யார் யாருடைய பங்களிப்பு, கும்பாபிஷேகம் நடத்திய வரலாறு ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ள தகவல்கள்.
6.கற்றளியால் அமைந்த விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது.
7.தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகத் திகழ்கிறது.
கல்வெட்டுகள் தரும் தகவல்: தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜசோழன் காலம் முதல் மராட்டிய மன்னர் சரபோஜி காலம் வரையான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் கிடைத்த தகவல்களின் சுவையான தகவல்கள்:
* கல்வெட்டுகள் அனைத்திலும் "திருமகள் போல' "செந்திரு மடந்தை' என்று மகா லட்சுமியைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன.
* ராஜராஜன் மற்றும் அவனுடைய சகோதரி, பட்டத்தரசிகள், சோழ நாட்டு மக்கள் கொடுத்த பொன், பொருள்கள் முழுமையாகப் பட்டியல் இடப்பட்டுள்ளன.
* பெரிய கோயில் நிர்வாக அலுவலராக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.
* அரண்மனை ராஜகுருவாக இருந்தவர் ஈசான சிவபண்டிதர்.
* கோயில் தலைமை அர்ச்சகராகப் பணிசெய்தவர் பவண பிடாரன்.
* கல்வெட்டில் இடம்பெறும் செய்திகளுக்கு மெய்க்கீர்த்தி என்று பெயர். இதனை செதுக்கியவர் பாளூர்கிழவன்.
* கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.
* கோயிலில் தேவாரம் பாட 50 ஓதுவார்களும்(பிடாரர்கள்), ஆடல் மகளிராக 400 பேரும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வீடுகளும், பொன்னும், பொருளும், நெல்லும் அளிக்கப்பட்டது.
* கோயிலில் பணிபுரிந்த பணியாளர்களின் எண்ணிக்கை 1500.
*அனைத்து செப்புத் திருமேனிகளையும் ராஜராஜன், அவனது மனைவியர், சகோதரிகள், அரண்மனை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் தனித்தனியாக செய்து தந்துள்ளனர்.
* இரண்டு நிதிநிலைக் கருவூலங்கள் (வங்கி போன்றது) இக்கோயிலில் இயங்கி வந்தன. மன்னன், மக்களிடம் இருந்து பெற்ற பொருளை முதலீடாகக் கொண்டு 12.5 சதவீதம் என்ற வட்டி அடிப்படையில் வணிகர்கள், ஊர் சபையினர், தனியார் கடன் கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த வருமானம் கோயிலுக்கு செலவழிக்கப் பட்டது.
* கோயிலுக்கு அளிக்கப்பட்ட பலகோடி மதிப்புள்ள பொன், ரத்தின நகைகள், தங்க வெள்ளிப் பாத்திரங்கள் முதலிய அனைத்தும் முறையாக எடைபோடப்பட்டும், அதற்கான மதிப்பும் துல்லியமாகக் கணிக்கப்பட்டு பதிவு செய்யப் பட்டிருந்தன. அந்த எடைபோடும் தராசைக் கூட "ஆடவல்லான் நிறை' என்று சிவபெருமான் பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடவல்லனாகிய நடராஜப் பெருமான் மீது ராஜராஜன் கொண்டிருந்த பக்தியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. சுவாமிக்கு அணிவிக்கும் ஒரு முத்துமாலையை எடை போட்டால் கூட "நூல் நீக்கி முத்துமாலையின் எடை'' என்று துல்லியமாக எடை குறிக்கப் பட்டிருப்பது ராஜராஜனின் நேர்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
* தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இடங்களிலும் கோயிலுக்கு நிலங்கள் இருந்தன. அங்கிருந்து ஆண்டுதோறும் வரும் வருமானம் கருவூல அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டன.