தைவான் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் தமிழ் இலக்கிய அமர்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தைவான் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் தமிழ் இலக்கிய அமர்வு

நவம்பர் 14,2017  IST

Comments

     தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் மூன்றாம் அமர்வு சொங்லி நகரில் உள்ள தேசிய மத்திய பல்கலைகழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்பனா தலைமையில் பூங்கொடி அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.


அன்பும் அறனும்


முதலாவதாக ‘அன்பும் அறனும்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவி தி.க.இசையாழினி பேசுகையில், வாழ்வின் அடிப்படை நியதியான அன்பு, அறன் ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்த திருவள்ளுவர் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' மற்றும் ‘அறனென்னப் பட்டதே இல்வாழ்க்கை’ எனவும் கூறியுள்ளார். இறைவன் உயிர்குலத்திற்கு கொடுத்த ஓரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று, பாதுகாப்பின் கவசம். மாந்தர்க்கு உயிரியல். அன்பில்லையேல் மற்ற செல்வம், புகழ், அறிவு எவை இருந்தாலும் அவற்றிற்கு மதிப்பே கிடையாது. அன்பின் வழிநடத்தல் நம்மை என்றும் உயர்த்தும்.‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மற்றும் ‘வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன்.’ போன்ற முன்னோர்களின் கூற்றுகள் யாவும் அன்பின் மகத்துவத்தை ஆழமாக எடுத்துரைப்பது சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையை காட்டுகிறது. இத்தகைய அன்பே பாசம், நேசம், காதல் போன்ற வெவ்வேறு பரிமாணங்ககளில் மனித உள்ளங்களை பிரதிபலிக்கின்றது. இத்தகைய அன்பே அறத்திற்கும் சான்றாக உள்ளது. அறன் என்பது மனுதர்மம், வரையறுத்த தர்மம் அல்லது வாழ்வியல் நியதி ஆகும். அறத்தை பின்பற்றும் யாவரும் அன்புடையவரே. இந்த அறத்தை எல்லாரும் தானாக கடைபிடிக்க வேண்டும். எனவேதான் அறிவுரை கூறும் அவ்வை மூதாட்டி கூட ஆறாம் செய்ய விரும்பு என கட்டளையிடாமல் அன்பாய் எடுத்துரைக்கின்றார். அறத்தின் சிறப்பையும் உணர்ந்த திருவள்ளுவர் அறத்துப்பாலை முன்னிலைப் படுத்தியுள்ளர். செய்யவேண்டிய செயலை தவிர்ப்பதும் அநீதியை கண்டு மவுனமாக இருப்பதும் அறத்தை மீறுதல் ஆகும். அறத்தை மீறும் தருணங்களில் எல்லாம் அவற்றை எதிர்த்து அறச்சீற்றம் கொள் என சான்றோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அன்பும் அறனும் இல்லாத சமூகம் அழியும். அறத்தை இறுதிவரை கடைபிடித்த அரிச்சந்திரன் சரித்திரத்தில் சிறந்த சான்றாகவும் உள்ளான். சமூகம், தனிமனித ஒழுக்கமின்றி போலிகவுரவம், புகழ், செல்வம் இவற்றினைப் போற்றி அழிவை நோக்கி பயணிக்கிறது. இச்சமூகத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும். எனவே இயன்ற மட்டும் அன்பு செலுத்தி அறனை பின்பற்றி இச்சமூகத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவோம். தமிழே என் உயிர்முச்சு என்றார்.தமிழும் திராவிடமும்

இரண்டாவதாக 'தமிழும் திராவிடமும்' என்கிற தலைப்பில் தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் பேசுகையில், ‘கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த குடி தமிழ்க்குடி’ என்கிற கருத்திற்கிணங்க தமிழ் பண்டைய காலம் தொட்டே பேசப்பட்டு வருகிறது. ஆரிய, முகலாய, ஆங்கிலேய போன்ற படையெடுப்புகளால் சிறிதும் தொய்வடையாமல் தமிழ் மொழி ஓங்கி நிற்கிறது. சமஸ்கிருதம், ஹீப்ரு போன்ற பழமையான மொழிகள் வழக்கொழிந்தாலும் நம் தமிழ் மொழி வழக்கில் இருப்பதுடன் மென்மேலும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தென்னகத்து மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றுக்கெல்லாம் மூல மொழி தமிழே என ஆராய்ச்சியாளர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் திராவிடம் என்கிற சொல் தமிழுக்கு மட்டுமே அல்லது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பை குறிப்பிடுவதற்கும் மற்றும் தென்இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசிய உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களை திராவிடர்கள் என அச்சொல்லோடு இணைத்துப் பயன்படுத்தவதாக ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. பெரியார்தான் முதன்முதலில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர் என்பது தவறு. ஏனெனில் பெரியார் ஒருபோதும் எந்த ஒரு மொழியையோ, நாட்டையோ உயர்த்திப் பிடித்தவர் இல்லை. அவரின் முக்கிய கொள்கைகள் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் போன்றவை ஆகும். பெரியார் தன்னுடைய இயக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்றே பெயரிட்டார். பிற்காலத்தில் அண்ணாதுரையின் காலத்தில் 1944-ல்தான் திராவிடர் இயக்கமாக மாற்றப்பட்டது. 1935 முதல் 1940 வரையே பெரியார் சமத்துவ கொள்கைக்காக மிகப்பெரிய போராட்டங்கள் செய்து சிறை சென்று வரும் வரைக்கும் அவர் திராவிடம் என்ற சொல்லை போராட்டக்களங்களில் பயன்படுத்தியது இல்லை. பெரியாரைப் பற்றி 19ஆம் நூற்றாண்டில்தான் நம் அனைவரும் அறிவோம். ஆனால் திராவிடம் என்ற சொல் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்ததாக மனுஸ்ருமிதி என்ற சமஸ்கிருத நூலில் கூறப்பட்டுள்ளது. மேலும் 17ஆம் நூற்றாண்டில் தாயுமானவர் ‘கல்லாத தேர்விலே நல்லவர்கள்’ எனத்தொடங்கும் பாடலில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். அவரைத் தொடர்த்து வந்த திருஞானசம்பந்தர் திராவிடசிசு என அழைக்கப்பட்டார். 1956ல், கார்டுவெல் என்கிற ஆராய்ச்சியாளர் தன்னுடைய மொழிசார்ந்த நூல்களில் திராவிடம் என்ற சொல்லை பரவலாக பயன்படுத்தியுள்ளார். உண்மை இவ்வாறாக இருக்க, பெரியார்தான் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர் மேலும் அவர் கன்னடராக இருந்ததினால் தமிழை அழிக்கவே திராவிடம் என்பதை முன்னெடுத்துச்சென்றார் போன்ற தவறான கருத்துக்களை புறந்தள்ள வேண்டும். 


பெரியாரை பின்பற்றி வந்த திராவிட இயக்கங்கள் தமிழுக்கு மென்மேலும் பெருமையையும் எளிமையையும் பத்திரிகை, நாடகம், தெருக்கூத்து, மேடைப்பேச்சுக்கள் மூலமாய் சேர்த்தார்கள். இவர்களின் தாக்கம் பத்திரிகை துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1940ற்குப் பிறகு ஆனந்தவிகடன், கல்கி போன்றவை எளிய தமிழ் சொல்லாடலை பயன்படுத்த துவங்கினர். 1946ல் புலவர் குழந்தையின் ராவணன் காவியம் முழுக்க முழுக்க எளிய தமிழ் சொல்லாடலை கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் திராவிட இயக்கத்தார், பல சமஸ்கிருத சொற்களுக்கு மாற்றாக எளிய தமிழ் சொற்களை உருவாக்கினர். எடுத்துக்காட்டாக விவாக சுபமுகூர்த்த பத்திரிகை-திருமண அழைப்பிதழ், கர்ணபூஷணம்-காதணிவிழா, ருதுசாந்தி-மஞ்சள் நீராட்டுவிழா, கிரகப்பிரவேஷம்-புதுமனைப்புகுவிழா, உத்திரகிரியை-நீத்தார் வழிபாடு, நமஸ்கரம்–வணக்கம், அக்ரசானர்- அவைத்தலைவர், காரியாதசி-செயலாளர், அபேக்ஷகர்-வேட்பாளர் போன்றவை ஆகும். தற்போதைய நிலையில் திரவிட இயக்கங்கள் முன்பைப்போல தமிழுக்கு தொண்டாற்றாமல் போனாலும் அவ்வியக்கங்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை எவராலும் மறுக்க இயலாது என்றார்.பெரியாரின் சிந்தனைகள்

மூன்றாவதாக ‘பெரியாரின் சிந்தனைகள்' என்ற தலைப்பில் சொங்யுயன் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்திலிருந்து கே. பி. மகேஷ் பேசுகையில், அவரின் இயற்பெயர் ஈ. வே. ராமசாமி நாயக்கர், 1879 செப்டம்பர் 17ல் ஈரோட்டில் பிறந்தார், 1973 டிசம்பர் 24ல் மறைந்தர். அவர் பொதுக்கூட்டங்கள், மேடைப்பேச்சு என 21,400 மணி நேரங்கள் பேசியுள்ளார். அவரின் சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதித்து கேட்டால் அதனை 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இடைவிடாமல் நாம் கேட்கலாம். இத்தனை பேச்சுக்கள் யாவும் எளியோரின் முன்னேற்றத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் மட்டுமே. பெரியாரை பற்றிய பிம்பம் கடவுள் மறுப்பாளர் மற்றும் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற இரண்டு விடயங்களினால் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு விடயத்திற்குப் பின்னாலிருந்து பார்த்தால் அவரின் நீண்ட நெடிய சிந்தனைகள் புலப்படும். கடவுளின் பெயரை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிற மதங்களில் பெண்ணடிமை இருந்தாலும் இந்து மத்தில் மட்டுமே சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இவை அனைத்திற்கும் மூலம் யாதெனில் சாஸ்திரங்கள், வேதங்கள், இவற்றை அளித்தது யாரெனில் கடவுள் என சொல்லப்படுகிறது. எனவே கடவுள் மறுப்பு என்ற ஒற்றை கொள்கையில் சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், பார்ப்பன எதிர்ப்பு என அனைத்தும் அடங்கிவிடும், எனவேதான் பெரியார் கடவுள் மறுப்பாளராக இருந்தார். 1920ல் பாலா கங்காதர திலகரின் இறுதி ஊர்வலத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு திலகரின் உடல் தங்கிய பாடை தூக்க அனுமதி மறுக்கப்பட்ட விடயத்தையும், காந்தியடிகளை 1929 வரை தனது வீட்டின் முற்றம் வரையே உபசரிப்பு செய்த சீனிவாச ஐயங்கார் அதன்பின் வீட்டின் உட்பகுதி வரை அழைத்துச்சென்ற விடயத்தையும் பார்க்கும் போது சாதிக்கொடுமை பாரபட்சமின்றி சாமானிய மனிதன் முதல் பெரும் அரசியல் தலைவர் வரை இருந்துள்ளது என புலப்படும். இதனைப்பற்றி காந்தியாரிடம் கேட்டபோது இதற்கு முழு காரணம் பெரியாரின் தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான நடவடிக்கைகளே. எனவே அவருக்குதான் தன் நன்றியை தெரிவிக்கவேண்டும் எனவும் கூறினார். பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து அதன் முதல் மாநில மாநாடு 1925ல் செங்கல்பட்டில் நடைபெறாது. அம்மாநாட்டில் அவர் இயற்றிய தீர்மானங்கள் எக்காலத்திலும் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு மிகச்சிறப்பானவை. அவைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களின் மறுமணம், மற்றும் குழந்தை திருமணங்களை தடுக்க பெண்ணுக்கு திருமண வயது 16 போன்றவை ஆகும். இத்தகைய சீரிய முயற்சிகளை பெரியார் எடுக்கவில்லை எனில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தற்போது நடந்திருக்க வாய்ப்பில்லை. 


பெரியாரின் சீர்திருத்த கொள்கைகள் பெரும் வெற்றி பெற்றன என்பதற்கு சாட்சியாக இருந்தது பெரியாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் எம் ஆர் ராதா பேச்சு. இவ்வாறாக சாதிய கொடுமைகளுக்காகவும் பெண்ணடிமைக்கு எதிராகவும் மிகக்கடுமையாக போராடினார் பெரியார். அவர் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாவே பெரும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. அவரின் இறப்பிற்குப் பிறகு வெகுவாக இச்சமூகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.


தமிழ் நூல்களில் கற்பனைச் செறிவும் கலாச்சாரமும்இலக்கிய அமர்வின் இறுதிப் பேச்சாளராக மு. திருமாவளவன் ‘தமிழ் நூல்களில் கற்பனைச் செறிவும் கலாச்சாரமும்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகையில், ‘தமிழ் மொழி வளரும்போதே நாகரிகமும் சேர்ந்தே வளர்ந்தது’ தமிழ் மொழியின் தொன்மை, பரிணாம வளர்ச்சி மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள், சங்க நூலகள் எவை, அவை எவ்வாறு முறையாக வகைப்படுத்தப்பட்டன, தமிழ் மொழியில் எழுத்துக்கள் வடிவமைக்கப் பட்ட செய்தி,  இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி சங்க நூலான தொல்காப்பியத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்திகள் சொல்லப் பட்டிருப்பது, எப்படி ஓரறிவில் தொடங்கி ஆறறிவு வரை உயிர்கள் வகைப்படுத்தப்பட்டன, சங்க காலத்துப் படைப்பாளிகள் முன் கூட்டியே இந்த உலகைப் பற்றி எப்படி இவ்வாறு சிந்திக்க முடிந்தது, உலகப் பொதுமறையான திருக்குறளில் சொல்லப்படாத செய்தியே இல்லை, 'அகர முதல எழுத்தெல்லாம்’ என்று திருவள்ளுவர் பாடியதிலிருந்து அவர் தமிழ்ச் சமூகத்தையே சார்ந்தவர், குறள்கள் எப்படி தமிழ் மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறைகள் மற்றும் அறிவியல் செய்திகள் சார்ந்த கருத்துகள் பலவற்றையும் விவரிக்கின்றன, மொத்தம் உறுதி செய்யப்பட்ட மூன்று அவ்வையார் இருந்ததாக புதிய தகவல், சங்க காலத்தில் ஏறக்குறைய 49 பெண் புலவர்கள் இருந்ததாக தகவல், அவ்வையாரின் அறிவு நுட்பம், சிந்தனைத் திறன், எப்படி அவர் படைப்புகள் வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தையும் எடுத்து விவரிக்கின்றன, சிலப்பதிகாரத்தின் கற்பனை வளம், அக்கால மக்களின் வாழ்க்கை முறை, வாழ்வியல் நியதிகள் பாரதியில் தொடங்கி பாலகுமாரன் வரை அவர்களின் படைப்புக்களை எடுத்துக்காட்டி, சங்க காலம் முதல் சம காலம் வரை தமிழ் மொழியில் உருவான படைப்புகளை பற்றி கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொண்டு, எந்த நூலையும் தெளிந்த ஆழ்ந்த சிந்தனையோடு அணுகினால் அலாதி இன்பம். தமிழ் நூல்கள் யாவும் பக்கவாட்டு சிந்தனையைத் தூண்டக் கூடிய சிறப்பம்சம் உடையன என்றும் விளக்கினார்.  


இறுதியாக இசையாழினிக்கு தைவான் தமிழ் சங்கம் சார்பாக நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது. மேலும் அவரின் பேச்சினை பாராட்டி தைவான் தமிழ் சங்க துணைத்தலைவர் சங்கரராமன் அவர்கள் தனிப்பட்ட பரிசாக 1000 தைவான் டாலர்களை அளித்தார்.- தினமலர் வாசகர் ரமேஷ் பரமசிவம்Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)