தைவான் தமிழ்ச்சங்க நான்காம் தமிழ் இலக்கிய அமர்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தைவான் தமிழ்ச்சங்க நான்காம் தமிழ் இலக்கிய அமர்வு

ஜனவரி 04,2018  IST

Comments

தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் நான்காம் அமர்வு தைபே நகரில் உள்ள தேசிய தைவான் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. முனைவர் மு. திருமாவளவன் அவர்கள் சீரிய தலைமையில் உதயண்ணன் அவர்கள் அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார். இந்த அமர்வினை சிறப்பிக்கும் விதமாக தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் காணொளி வழியாக சிறப்புரையாற்றினார். பங்கேற்ற பார்வையாளர்கள் அனைவரும் உரையில் இன்புற்று மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தனர்.

நெல்லை கண்ணன்


நெல்லை கண்ணன், தைவான் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரோடும் உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறி தனது உரையை தொடங்கினார். தமிழகம் கடந்து வாழும் உங்களை போன்ற தமிழ் மக்கள் தமிழின் மீது காதலுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் காலத்திலே தமிழை பலமடங்கு பாராட்டி உள்ளனர். அந்த மொழி அழிந்து போகும் என்று உலகத்திலே பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ஆனால் என்னுடைய நம்பிக்கை ஒரு காலத்திலும் தமிழ் மொழி அழிந்து போகாது. உங்களை போன்றவர்கள் கடல் கடந்து போனாலும் தமிழ் மீது வைத்துள்ள பற்றுதான் அதனை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

இன்னொன்று அழியக்கூடாத அற்புதமான நூல்களை கொண்டது தமிழ். ஒரேயொரு நூல் மட்டுமே போதும், அது திருக்குறள். இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் எந்த காலத்திற்கும் ஒரு மனிதனின் எந்த ஒரு செயலுக்கும் ஏற்ற வினாவையும் அதற்கேற்ற விடையையும் வள்ளுவன் நமக்கு கொடுத்துள்ளான். இன்றைக்கு எதனை பெரிய தொழில்கள் இருந்தாலும் உழவுதான் அனைத்திற்கும் மூலத் தொழில் என வள்ளுவன் சொல்கிறான். ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்து உழவே ‘’குறளின் மூலம் ஒரு அருமையான செய்தியை சொல்கிறான் வள்ளுவன். எந்த தொழில் செய்பவனுக்கும் உழவன் உணவளிக்கவில்லை எனில் வாழ்க்கை கிடையாது. எல்லா உயிர்களையும் காப்பாற்றும் இடத்திலே உழவன் இருந்தாலும் அவன் அத்தொழிலில் நலிவடைந்துதான் உள்ளான். அவ்வாறு இருந்தாலும் அவன் அத்தொழிலை செய்ய காரணம் எல்லா உயிர்களையும் காப்பாற்றவே கடவுள் தன்னை படைத்துள்ளான் என பெருமை கொள்வான். மெத்த படித்தவன்தான் அறிஞன் எனப்படுவது இல்லை, எவன் ஒருவன் பிறர் துன்பத்தை தன் துன்பமாக எண்ணி வருந்துகிறானோ அவனே அறிஞன் எனப்படுவான், எனவே உழவனும் ஒரு அறிஞன்தான். வாழ்வில் சிறந்து விளங்க வேண்டுமெனில் மற்ற எந்த நூல்களை படிக்கவில்லை என்றாலும் திருக்குறளை படியுங்கள், நீங்கள் சிறந்து விளங்குவீர்கள் என எடுத்துரைத்தார்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் பாரதி, அவன்தான் கற்பு என்ற மாயையை உடைத்தெறிந்தவன் ஆணெல்லாம் கற்பை விட்டு தவறு செய்வானெனில் அவன் அங்கே ஒரு பெண்ணை கற்பழிக்கிறான் ஆணும் பெண்ணும் கலந்து வாழும்போது அவன் பெண்ணின் உணர்வுளை மதித்து வாழ்ந்தான் எனில் அது சிறந்த வாழ்க்கை. அப்படி இல்லையெனில் அது வாழ்க்கை இல்லை என்றான்.


வள்ளுவனைக்கூட தொலைத்து விடலாம் ஆனால் அவ்வை கிழவியை தொலைத்து விடக்கூடாது. ஒற்றை வரிகளில் ஆழமான கருத்துக்களை வழங்கியுள்ளாள் ‘‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' பெற்றோரின் சிறப்பையும் எனக்கூறும் அவ்வை ''அறம் செய்ய விரும்பு'' என மென்மையாய் உறைக்கிறாள். முதலில் அறம் என்பது பசியோடு இருப்பவருக்கு உணவளித்தல் மட்டுமல்ல எவன் ஒருவன் தூய்மையான மனதோடு வாழ்கிறானோ அவன் அற வழியில் வாழ்பவனே என்ற வள்ளுவனின் கூற்றிற்கிணங்க இல்லறமென்பது நல்லறம் என அவ்வை அறத்தையும் இல்வாழ்க்கையோடு இணைத்து அழகாய் கூறுகிறாள்.

மேலும் பல அவ்வையின் கருத்துக்களை எடுத்துரைத்த அவர் இலக்கிய திறனாய்வாய் வள்ளுவன், அவ்வை, நபிகள் நாயகம் போன்றோர் கூறிய பல கருத்துக்கள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையதாய் உள்ளது என்பதை அழகாய் விளக்கினார். அரசுகளின் நேர்மை பற்றி கூறும்போது அக்கால அரசர்கள் எவ்வளவு நேர்மையாக இருந்தார்கள் என்பதை ‘‘என்னே அரசன் யானோ கள்வன் '' என்ற வாக்கியத்தின் மூலம் அறியலாம்.

மேலும் அவர் தன் சொந்த கருத்தாக நான் கடவுளை வணங்க வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் மக்களுக்கு அரும் சேவை செய்யுங்கள் அதுவே கடவுளை அடைந்ததாக கருதப்படும். மேலும் பணம் வாழ்க்கைக்கு அவசியம்தான் ஆனால் பணம் மட்டுமே இன்றியமையாதது இல்லை என்றார் வள்ளுவனின் ''பொருள் இல்லார்க்கு '' என்ற குறளிற்கிணங்க. பல்வேறு நூல் வாசிப்பின் அவசியத்தையும் தமிழ் நூல்கள் மட்டுமின்றி பிற மொழி நூல்களையும் வாசித்தல் அவசியம் என்றார். அதுமட்டுமின்றி பிறமொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தால் வேண்டும் என்றார் ‘’பிறநாட்டு சாஸ்திரங்கள்’’ எனத் தொடங்கும் பாரதியின் பாவிற்கேற்ப. தனது உரையின் கருத்தாக உறவுகளை எல்லாம் நட்பாகிக் கொள்ளுங்கள் நட்புகளை எல்லாம் உறவாக்கிக் கொள்ளுங்கள் என்றார் இறுதியாக அன்போடு வாழ்ந்தால் உயர்வாய் வாழலாம் என தனது உரையை முடித்தார்


தமிழ் மற்றும் கொரிய மொழித்தொடர்பு


இரண்டாவதாக "தமிழ் மற்றும் கொரிய மொழித்தொடர்பு - ஒரு நாடோடியின் பார்வையில்" எனும் தலைப்பில் சுப்புராஜ் திருவேங்கடம் உரையாற்றினார். அவர் தன் உரையின் தொடக்கமாக, இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில் பேசப்படும் தமிழ்மொழி மற்றும் அதன் பாரிய பண்பாட்டு விழுமியங்கள், ஆசியக்கண்டத்தின் கடை கீழ்திசைக்கண் பேசப்படும் கொரிய மொழியோடு ஒன்றிப்போவது மிக வியப்பான செய்தியாகும் என்றார். ஆயினும் “திரைகடல் ஓடியும் திரவியந்தேடு” என்ற பைந்தமிழ் சொற்றொடரை எண்ணுகையில், தமிழன் கொரிய தீபகற்பம் வரை எட்டியிருக்கக்கூடும் என்றே தன் உள்மனம் இயம்புவதாக கூறினார்.

இந்தியா தனது பொருளாதார கொள்கைகளை தாராளமயம் நோக்கி சீர்திருத்திய பின், பெரும்பாலான உலகநாடுகள் உத்திரவாதமின்றி இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்கிய போது தென்கொரியா மட்டும் எவ்விதமான கோரிக்கைகளின்றி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்தது. இது குறித்து ஹான்யாங் பல்கலையின் மானுடவியல் பேராசிரியர் கிம்பியோங்மோ “கொரியா இந்தியாவின்மீது குறிப்பாக தமிழகத்தின்மீது வைத்த நம்பிக்கையானது தாய்வழி உறவுகளுக்குள் உள்ள நுட்பமான தொடர்பு போன்றது”என்கிறார். 2005ல் தென்கொரியாவிற்கான இந்தியத் தூதுவராக பணியாற்றிய என்.பார்த்தசாரதி “கொரியாவில் இந்திய இளவரசி” என்ற தாய்வழி தொன்மம் சார்ந்ததொரு புனைவுக் கதையை எழுதினார். தென்கொரியாவின் தேசிய தொலைக்காட்சியான எம்.பி.சி இதுகுறித்து “கிம்சுரோ” என்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடர்மூலம் விரிவாக கூறியது. மேலும் முந்தைய கொரிய-இந்திய தொடர்புகள் இலைமறைகாய் போல உள்ளதால், அவற்றை தெளிவாகக் கண்டறிய பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என என்.பார்த்தசாரதி அறிவுறுத்துவதாக பேசினார்.

மேலும் கொரிய நாட்டார் பழங்கதை, மற்றும் அவர்களது வரலாறு குறித்த நிகழ்வுகளை இல்யோன் என்கிற பவுத்த துறவி 13ஆம் நூற்றாண்டில் ”சம்குக்உசா” என்ற நூலில் ஆவணப்படுத்துகிறார். இந்நூலின்படி கொரியா தமிழகம் போல மூன்று நாடுகளாகவும் (சில்லா, பெக்ஜே, கயா) மற்றும் ஐந்திணைகளாகவும் வகைப்படுத்தப்பட்டமை கொரிய-தமிழ்தொடர்புக்கு சான்று பகர்வதாகும். மேலும் கொரிய நாட்டவரின் கர்ண பரம்பரைக் கதைகள் பல தமிழ்புராண தொன்மங்களின் சாயலில் இருப்பது மிகவும் அதியசத்தக்கதாகும்.

பட்டுப்பாதை என்றவுடன் ஆய்வாளர்கள் பலருக்கும் முதலில் நினைவுவரும் சீனம் தொடங்கி நிலவழியாக மத்திய ஆசிய நாடுகளை ஊடறுத்துச் சென்று ஐரோப்பிய நாடுகளை அடையும் பாதைதான். ஆனால் மத்திய தரைக்கடல் தொடங்கி எகிப்து வழியாக அரபிக்கடல், இந்திய பெருங்கடல், மற்றும் வங்கக்கடல் வழியாக காடாரம் (மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதி), சாவகம் (இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்று) முதலான தென்கிழக்காசிய நாடுகள்வழியே நடந்த பட்டுப் பாதை வணிகம் குறித்தும் அதில் தென்னிந்தியா ஒரு இணைப்புக் கேந்திரமாக விளங்கியது குறித்தும் பலருக்கும் தெளிவாக தெரிவதில்லை.

கிம்சுரோ மன்னன் கடல் வழி வந்த இளவரசியை மணந்த கதையானது நள-தமயந்தி கதையை ஒத்திருக்கிறது. மேலும் அக்கடல் வழி வந்த இளவரசி தனது நாடு “அயுத்த” என்றும் தன்னுடன் கடல் அமைதிப்படுத்தும் அதிசயக் கற்களை கொண்ட மீன் கொடியேந்திய கலத்தில் பயணித்ததாக கூறுகிறாள். வடக்கிந்திய மன்னர்கள் கடற்பயணம் செய்ததாகவோ அல்லது அதுசார்ந்த துறைகளை ஊக்குவித்ததாகவோ பெரிதான குறிப்புகள் இல்லை என்பதால் அந்த இளவரசி நிச்சயமாக தென்னிந்தியாவை சார்ந்தவளாக குறிப்பாக பாண்டிய நாட்டை (ஆய்வேளிர்) (மீன்சின்னம்) சார்ந்தவளாக இருக்கவேண்டும். சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கடல் வணிகத்தில் சிறந்த விளங்கிய மாசாத்துவன் மற்றும் மாநாய்க்கன் பற்றிய குறிப்புகள் உள்ளன.

மேலும் மணிமேகலையில் நாகை தொடங்கி மாநக்கவரம் வழியாக காடாரம், சாவகம் போன்ற தீவுகளுக்கு மணிமேகலை பயணித்த நிகழ்வுகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. இன்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மொழி, பண்பாட்டு விழுமியங்களில் தமிழின் சாயல் பிண்ணிப் பிணைந்துள்ளது. போதிதருமர் இதற்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டாக உள்ளார். கொரிய மொழியின் இலக்கண வரிசையானது தமிழ்மொழி போல் ஒத்துள்ளது. தமிழின் நெடுங்கணக்கு வரிசைமுறை போன்றதொரு அமைப்பை கொரிய மொழி பின்பற்றி வருகிறது.

அவர் தன் பேச்சின் இறுதியாக எளிதில் தமிழில் பொருள்படவல்ல பலவார்த்தைகள் கொரியமொழியில் பயன்பாட்டில் உள்ளதாகவும். குறிப்பாக பெற்றோரை அம்மா, அப்பாவென்று அழைக்கும் முறை இருமொழியிலும் ஒரேமாதிரி இருப்பது மொழித்தொடர்புக்கு தக்க சான்று பகர்வதாக கூறினார். மூத்தோர் வழிபாடு, களத்தில் வீழ்ந்தவருக்கு நினைவுச் சின்னம் (நடுகல்) எழுப்பிவழிபாடு, படையல் இடுதல், அறுவடை திருநாள் போன்றநிகழ்வுகள் தமிழகம் போலகொரியாவிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதாக தனது உரையினை முடித்தார்.


பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்


மூன்றாவதாக ''பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்'' என்ற தலைப்பில் தேசிய சிங்ஹுவா பல்கலைக்கழத்தின் முனைவர் பட்ட மாணவி பவித்ரா ஸ்ரீராம் பேசினார். அவர் தன் உரையின் தொடக்கமாக பேசிய பெரியாரின் அறிமுகம் சற்று புதுவிதமான தொனியில் இருந்தது. அது தமிழ்நாடு சான்றோர் பலரை நம் நாட்டிற்காக கொடுத்தாலும் அதில், நாட்டிற்காக வீழ்ந்தவர் பலர்; மொழிக்காக வாழ்ந்தவர் பலர்; ஆனால் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளை வேரறுத்தவர்கள் சிலரே, அவர்களுள் ஒருவர்தாம் பெரியார்.

பழந்தமிழ் சமுதாயத்தில் மதிக்கப்பட்ட பெண்கள் பிற்காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். நாட்டின் விடுதலைக்காக போராடிய பெரியார் பெண்ணின் விடுதலைக்காகவும் போராடியது நாம் அறிந்ததே. மேலும் அவர் பெரியாரின் பெண் விடுதலைக்கான சிந்தனைகள் பலவற்றை எடுத்துரைத்தார். அவைகள், பெண்களுக்கான அடிப்படை உரிமை, பெண்கல்வி, சொத்துரிமை, அரசுப்பணி, குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணை தடுப்பு, விதவை திருமணம், கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்றும் குடும்ப திட்டமிடல், புராணங்கள் மற்றும் மத இலக்கியங்கள் ஆகியவற்றால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தல், மகளிர் வாழ்க்கை பாணியில் தேவையான மாற்றம் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்கு தேவையான பிறமுக்கிய நடவடிக்கைகள் ஆகியவையாகும்.

பெரியார் தனது ஆரம்ப அரசியல் வாழ்க்கையிலிருந்து பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு சமூக அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இதற்காக பெரியார் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தி, பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வெற்றியும் கண்டார். பெண்கள் கல்வியால் மட்டும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்க முடியும் என பெரியார் நம்பினார்.

பெண்கள் தாங்களாகவே அடிமைத்தனத்திலிருந்து வெளியேவந்து தங்களது உரிமைக்கு போராடவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். 1920 மற்றும் 1930களில் பெண்களுக்கான பிரச்சனைகளில் எவரும் ஆர்வம் செலுத்தாத போது அவர்களுக்காக குரல் கொடுத்தவர் பெரியார். தனது அயராத உழைப்பு மற்றும் தொடர்ச்சியான சேவைகளின் விளைவாக பெண்களுக்கான பல அதிகாரங்களை பெற்றுதந்தார் பெரியார்.

இதனால் தமிழ் சமுதாயத்தின் பெண்கள் விழிப்புடன் தங்களது உரிமைகளை பெற்று பலதுறைகளில் சாதனைபுரிந்து வருகின்றனர். அவர் தன் பேச்சின் இறுதியாக பெரியார்வழி காட்டுகளால் மற்ற மாநிலங்களுக்கிடையே தமிழகம் இன்றுதலை நிமிர்ந்து நிற்பதாக கூறி தனது உரையினை முடித்தார்.

தமிழர்களின் அறிவியல் மற்றும் சித்த மருத்துவம்


நான்காவதாக ‘‘தமிழர்களின் அறிவியல் மற்றும் சித்த மருத்துவம் '' என்ற தலைப்பில் தமிழ் ஒளி தேவேந்திரன் (சோயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம்) பேசினார். அவர் தன் முன்னுரையாக பண்டைய தமிழர்கள் அண்ட பிணடங்களை ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்து இன்று கண்டுபிடிக்கப்படும் பல அறிவியல் கூறுகளை பல்வேறு விதமாக கூறியுள்ளனர் என்றார்.

கோயிகள் மலை மீது கட்டப்பட்டதன் காரணம், மலைகள் உருவானதே அணைந்து போன எரிமலை குழம்புகளே. அத்தகைய எரிமலை குழம்புகளை கோயில்களில் பயன்படுத்தப்படும் பால். நெய், போன்றவற்றின் மூலம் வேதிச் சமநிலை படுத்தவே. மேலும் கோயில் கலசங்கள் வெப்பச் சலனத்தை தடுக்கவும், இடிதாங்கியாகவும் பயன் படுத்தப்படுகிறது, தீபங்கள் ஏற்றப்படுவதன் குறிப்பாக மலை உச்சியின் மீது ஏற்றப்படும் தீபங்கள் குளிர்காலங்களில் சுற்றுப்புறத்தை சூடாக வைப்பதன் மூலம் புயல் போன்றவற்றை தடுக்கவே ஏற்றப்படுகிறது என்பதை பற்றி அப்பர் தன் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

வணக்கம் சொல்லுதல் 19 ஆம் நூற்றாண்டில் தான் பயன்பாட்டுக்கு வந்ததாக கூறப்பட்டாலும் அது சோழர் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருகரம் கூப்பி வணக்கம் சொல்லும்போது அஞ்சலிமுத்திரா எனப்படுவது இந்தஅமைப்பு அக்குபஞ்சர் புள்ளிகள் இணைந்து உடலுக்கு சக்தியை தருகிறது. ‘’நீரில்லா நெற்றிப்பால்’' என் அவ்வையும் ‘‘நெய்யில்லா உண்டிப்பால் '' என ஒரு சித்தர் பாட்டும் குறிப்பிடப்படுவது நெற்றியில் திருநீர் இடுவதும் அதன் மீது பொட்டு இடுவதும் ஒரு அறிவியில் பூர்வமான விடயம் என்னவெனில் அதனால் ஆஸ்தமா போன்ற வியாதிகள் கட்டுப்படுத்தப்படும். திருமணமான பெண்கள் நெற்றிக்கு மேல் பகுதியில் வைக்கப்படும் செந்தூரப் பொட்டு பாலுணர்ச்சியை துண்டவல்லது. திருமணம் ஆகாத கணவனை இழந்த பெண்கள் அவற்றை பயன்படுத்துவது இல்லை.

ஓம் என்ற சொல் மனிதனின் 108 உயிர்நாடிகளை தூண்டி ஒருவித சக்தியை உடலுக்கு தருகிறது. கோயில்களில் தெப்ப குளம் வெட்டப்படுவதன் நோக்கம் மழைநீர் சேகரிப்புக்காக. இது நம் பழந்தமிழர்களின் முன் எச்சரிக்கை நடவடிக்கை. கடந்த 150 ஆண்டுகளாக மட்டுமே அறிவியல் உலகம் ஓசோன் படலம் பற்றிய ஆய்வில் உள்ளது. ஆனால் சுமார் 700 வருடங்களுக்கு முந்தைய நம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இதற்கான கல்வெட்டு அமைப்பு உள்ளது இது நம் பழந்தமிழரின் அறிவியல் செயல்பாடுகளுக்கு தசன்று ஆகும். மேலும் தோரணம் கட்டுதல், வாழை இல்லை உணவு, போன்ற செயல்பாடுகளின் பின் உள்ள அறிவியல் விடயங்களை பேசி தனது உரையை முடித்தார்.

- நமது செய்தியாளர் ரமேஷ் பரமசிவம்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா

பிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை

பிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா

சரவணபவன், சன்னிவேல், கலிபோர்னியா...

ஞானம் 213ஆம் இதழ்

ஞானம் 213ஆம் இதழ்...

Advertisement
Advertisement

வைகோ மீது சரமாரி கல்வீச்சு

துாத்துக்குடி:உடன்குடியில் வைகோ பிரச்சார வேன் மீது கற்கள் வீசப்பட்டதால் இருதரப்பு மோதல் நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

துாத்துக்குடி ...

ஏப்ரல் 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)