ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா-2018 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா-2018

மே 26,2018  IST

Comments

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி, தமது மாணாக்கர்கள் கற்ற தமிழை உற்றார் அறிய ஒவ்வொரு வருடமும் கல்வியாண்டின் இறுதியில் ஆண்டுவிழா கொண்டாடி வருகிறது. இவ்வருட ஆண்டுவிழாவை ஹூஸ்டன் மாநகர விஸ்டம் உயர்நிலைப் பள்ளியில் வெகு சிறப்பாகக் கொண்டாடியது. ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி, மாநகரத்தின் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக மொத்தம் 450 மாணவர்களுக்கு தமிழ் பயில, தன்னார்வலர்கள் பலரைக் கொண்டு தமிழ்க் கல்விப்பணி செய்து வருகிறது. மாநகரத்தின் பகுதிகளான பியர்லேண்ட், கேட்டி, உட்லண்ட்ஸ், மேற்கு ஹூஸ்டன், சுகர்லேண்ட், மேற்கு கேட்டி மற்றும் புதிய கிளையான சைப்ரஸ் என ஏழு கிளைகளில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது.

இங்கு ஆண்டுவிழா என்பது ஏழு கிளைப்பள்ளிகளின் தமிழ்ச் சங்கமம் என்றே சொல்லலாம். இவ்வருடம் 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் பங்குபெற்று தத்தம் தமிழ்த்திறனை வெகுசிறப்பாக வெளிக்கொணர்ந்து ஆண்டுவிழா நிகழ்ச்சியை அலங்கரித்ததுடன், 600க்கும் மேலான பெற்றோர்கள், விருந்தினர்கள் உட்பட சுமார் 1000 நபர்கள் வந்திருந்து விழாவினைச் சிறப்பித்திருந்தனர்.

மாணாக்கர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் விழா இனிதே துவங்கியது. அதனையடுத்து பள்ளித்தலைவர் ஜெகன் அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தி விழாத் தலைமையேற்று துவக்கி வைத்தார். அவரது உரையில், அங்கீகாரம் பெற்ற முதல் தமிழ்ப்பள்ளியான தமது பள்ளி என்பதனைக் குறிப்பிட்டதோடு. பள்ளி ஆண்டுதோறும் பரிணாம வளர்ச்சி காண்பதுடன் புதிய பல பரிமாணங்களையும் கண்டுவருவதனை பெருமிதத்துடன் குறிப்பிட, தொடர்ந்து நிகழ்ச்சி, பள்ளி மாணாக்கர்களது கலை நிகழ்வுகளுக்கு ஆயத்தமானது.

பின்னர், சுகர்லேண்ட் கிளைப்பள்ளி இன்றைய தமிழ்நாட்டு சூழலை கருவாகக்கொண்ட நிகழ்ச்சியினை வழங்கியது நிகழ்ச்சிக்கு அற்புதத் தொடக்கத்தை அளித்தது. அடுத்ததாக, மேற்கு ஹூஸ்டன் கிளைப்பள்ளி வழங்கிய உணவே மருந்து நிகழ்ச்சி இன்றைய யதார்த்த உணவுப்பழக்க நிலையை படம்பிடித்துக் காட்டுவதாக இருந்தது. தொடர்ந்து, இவ்வருட புதுக்கிளையான சைப்ரஸ் பள்ளி ஒயிலாட்டம் ஒன்றினை வழங்க பார்வையாளர்களை உற்சாகமூட்டுவதாக அமைந்திருந்தது. அதனையடுத்து, உலக சமாதானம் என்ற கருவுடன் மகாபாரதத்தினை அடிப்படையாகக்கொண்ட ஒர் அற்புத நிகழ்ச்சியினை வழங்கி மாணாக்கர்களின் கலைத்திறனைத் தொகுத்தந்தது உட்லண்ட்ஸ் கிளைப்பள்ளி. தொடர்ந்து, எண்கள், நிறங்கள் என திட்டப்பணிகளாகத் தொகுத்து கவியரங்கம் மற்றும் கருந்தரங்கம், ஆடல் பாடல் என அனைத்துப் பரிணாமங்களிலும் தமது மாணாக்கர்களின் தமிழ்த்திறனை வெளிப்படுத்தியது பியர்லேண்ட் கிளைப்பள்ளி. இறுதியாக கேட்டி மற்றும் மேற்கு கேட்டி கிளைப்பள்ளிகள் இணைந்து வில்லுப்பாட்டு, நாடகம் மற்றும் ஆடல் பாடலுடன் நிகழ்ச்சியினை மெருகூட்டின. ஆக, மாணாக்கர்கள் அனைவரும் இணைந்து, இயல் இசை நாடகம் என முத்தமிழால் முத்திரை பதித்து தமிழ்ப் பண்பாடு கலை, ஆடல், பாடல் என பல வகைகளிலும் தமிழை நிலைநிறுத்தி தமது திறனை வெளிக்கொணர்ந்தனர்.

ஏழு கிளைகளின் அற்புதக் கலைப்பயணத்தின் இரண்டரை மணிநேர உற்சாகக் நிகழ்வுகளுக்குப்பின் அனைவரும் சிற்றுண்டி அருந்த, பின்னர் விழா தொடர்ந்தது. விழாவின் முத்தாய்ப்பாக, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து குடும்பத்துடன் வசித்து வரும் நடுத்தர வயதுடைய விக்ரம் இராஜன் கடந்த ஓராண்டாக பியர்லேண்ட் தமிழ்ப்பள்ளிக்கிளையில் இணைந்து பயின்று வருவதனை தமது கொஞ்சும் தமிழில் எடுத்துரைத்த விதம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.


அடுத்த நிகழ்வாக, ஆண்டுதோறும் பள்ளியின் சார்பில் நடத்தப்படும் திருகுறள் ஒப்புவித்தல் போட்டியில் அனைத்துக்கிளைகளின் சார்பிலும் பங்கேற்று இறுதியில் வயதுவாரியான குழுக்களில் முதல் மூன்று இடம்பெற்ற மாணாக்கர்களுக்கு பள்ளித் தலைவர் ஜெகன் அண்ணாமலை சிறப்பு விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார். மேலும், இவ்வருடம் புதியதாக, முதல் இடம்பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தமிழகத்தில் தமிழ் மொழிக்காகப் பாடுபட்டவர்களின் நினைவாக சிறப்புப் பரிசு என்ற வகையில் மடிக்கணினி வழங்கப்பட்டது, இது, மாணாக்கர்களுக்கு மிகவும் ஊக்கம் தரக்கூடிய போற்றுதலுக்குரிய செயல் என அனைவராலும் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்திருந்த, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் துணைத்தலைவர் கால்டுவெல் வேள்நம்பி மற்றும் விருந்தினர்கள் பலருக்கு பள்ளி மாணவிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். அதனையடுத்து கால்டுவெல் வேள்நம்பி மற்றும் விருந்தினர்கள் சிறப்புரை நிகழ்த்தினர். அவர்கள்தம் உரையில் ஹூஸ்டன் வாழ் தமிழர்கள் பல்லாண்டுகளாக தமிழால் இணைந்து தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று நிலைநிறுத்துவதைப் பாராட்டியதுடன், பேரவை மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழுறவை மேம்படுத்தவும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினருக்கு பட்டயம் வழங்கி மரியாதை செய்தார் பள்ளி ஆலோசகர் வசந்தி இராமன். மேலும், பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார் கால்டுவெல் வேள்நம்பி அவர்கள். பின்னர், நிழற்படங்களின் ஒளிப்பதிவுத் தொகுப்பினை பாலாஜி லெட்சுமணன் தலைமையிலான குழு திறம்படத் தயாரித்து திரையிட்டது அனைத்து மாணாக்கர்களுக்கும் உற்சாகம் கொடுத்ததுடன் மிகவும் இரசித்தும் பாராட்டப்பட்டது.


விழாவின் இடையிடையே பார்வையாளர்களை உற்சாகமூட்டும் ஊக்கப்பரிசுகள் பலவும் வழங்கப்பட்டன.


அடுத்ததாக பதிவு மற்றும் வகுப்புத்தேர்வுகளில் முதன்மை இடம்பெற்ற அனைத்துப்பள்ளிக்கிளை மாணாக்கர்கள் அனைவருக்கும் விருதுகளை அவரவர் வகுப்பு ஆசிரிய-ஆசிரியைகள் வழங்கி மாணாக்கர்களை மகிழ்வித்தனர். பிற்பகல் உணவுடன் தொடங்கி, சுமார் ஐந்து மணிநேரம் நடந்த ஆண்டுவிழா இறுதியாக துணைத்தலைவர் பாலா சிவப்பிரகாசம் நன்றியுரை வழங்க, விழா இனிதே நிறைவடைந்தது. மாணாக்கர்கள் மேடையில் பேசும் தமிழ் ஆண்டுக்கு ஆண்டு பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பது கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்த்துடன், தமிழகத்திலிருந்து வந்திருந்த பெற்றோரது பெற்றோர்கள் அயலக மண்ணில் அருமைத் தமிழ் ஒலி கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது என மாணாக்கர்களை வாழ்த்திச் சென்றனர்.


- தினமலர் வாசகர் கரு,மாணிக்கவாசகம்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)