ஆக்லாந்தில் சங்கீத உத்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் சங்கீத உத்சவம்

ஜூன் 08,2018  IST

Comments

ஆக்லாந்து : நியூசிலாந்து கர்நாடிக் சங்கத்தின் சார்பில் இந்த வருடம் சங்கீத உத்சவம் ஜூன் 2, 3, மற்றும் 4 தேதிகளில் ஒனேஹங்காவில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் மந்திர் அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் அதாவது ஜூன் 2ஆம் தேதியன்று காலை 9 மணியளவில் யுவகலா பாரதி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் முறையே டாக்டர்.அசோக் மலூர், யஸோ மஹேந்திரன், பவானி சுரேஷ், பிரியா விஜய், கல்பனா உமாபரன், மைதிலி அசோக்குமார், துளசி பிரபாகரன், வித்துவான் திவாகர் அவர்களின் மாணவர்களும், மேலும் தருண் முரளிதரன் , NZCMS கான விஷாரத் சிராக் மணி மற்றும் பவண் மணி ஆகியோர் பங்கு பெற்றனர்.

முதல்நாள் இசை கச்சேரி மாலை 5.30 மணி அளவில் தொடங்கியது. அன்று வித்வான் ஆர். சூர்யப்ரகாஷின் இசை கச்சேரி நடை பெற்றது. அவரோடு இணைந்து நாகை ஸ்ரீராம் வயலின், திருவனந்தபுரம் பாலாஜி மிருதங்கமும் மற்றும் திருப்புணித்துறை என். ராதாகிருஷ்ணன் கடமும் வாசித்தார்கள். முதலில் அசோக் தேவராஜன் கலைஞர்களுக்கு வரவேற்புரையும் வாழ்த்துரையும் வழங்கினார்.
சூர்யப்ரகாஷ் முதலில் 'மஹாகணபதிம்' என்ற நாட்டை ராகத்தில் வர்ணம் ஆரம்பித்து பின்னர் தியாகராஜரின் கல்யாணி ராகத்தில் அமைந்த 'வாசுதேவயனி வெடலின' க்ருதியை சிறப்பாக பாடி பின் தன்யாசி ராகத்தை விரிவாக ஆலாபனை செய்து தீக்ஷிதரின் 'பரதேவதா' பாடி முடித்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். தன்யாசி ராகத்தை கேட்ட ரசிகர்கள் எல்லோரும் நெஞ்சு நிறைந்து மெய்மறந்து சொக்கி போனார்கள் என்றால் மிகையாகாது. அங்கே எழுந்த ரசிகர்களின் கைதட்டல் ஆரவாரம் சபை எங்கும் ஒலித்தது. பின்னர் சாரங்க ராகத்தில் ஒரு பாடலை அழகாக பாடி ஐயப்பனை முகாரி ராகத்தில் போற்றி பாடியும் த்யாகராஜர் இயற்றிய 'ஸரஸ ஸாம தான தண்ட' என்ற காபி நாராயணி ராகத்தில் அமைந்த கிருதியை பாடி முடித்தார். தொடர்ந்து காம்போதி ராகத்தை முதன்மை ராகமாக எடுத்து விஸ்தாரமாக ராக ஆலாபனை செய்து பாபநாசம் சிவனின் 'காண கண் கோடி வேண்டும்' கபாலி என்ற கீர்த்தனையை கல்பனா ஸ்வரங்களுடன் மிக அழகாக பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அதை தொடர்ந்து அன்று கச்சேரியில் சிறப்பம்சமான ராகம் தானம் பல்லவியை கீரவாணி ராகத்தில் பாடி தானத்தையும் பல்லவியையும் பல ராகங்களில் ராகமாலிகையாக தொடுத்து பாடி சிறப்பித்தார். தொடர்ந்து சூர்யப்ரகாஷ் சிந்துபைரவி ராகத்தில் புரந்தரதாஸரின் வெங்கடாச்சல நிலையம் என்ற பாடலை பாடி அடுத்து ரசிகர் விருப்பமாக மதுரை மணி அய்யரின் இங்கிலிஷ் நோட் பாடியது ரசிகர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியது. மங்களம் பாடி அன்றைய நிகழ்ச்சியை இனிதாக நிறைவு செய்தார். அவருடன் சிறப்பாக நாகை ஸ்ரீராம் வயலின் இணைந்து வாசித்து சிறப்பு செய்தார். மேலும் திருவனந்தபுரம் பாலாஜி மற்றும் திருப்புனித்துறை ராதாகிருஷ்ணனின் தனி ஆவர்த்தனம் மிக சிறப்பாக இருந்தது. அசோக் மல்லூர் இசைக்கலைஞர்களை பாராட்டி நன்றி கூறினார்.

சங்கீத உற்சவத்தின் இரண்டாம் நாளான ஜூன் 3ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. சங்கீத யுவ கலா பாரதி மாணவர்களின் இசை கச்சேரி நடந்தது. அதில் மாலதி வாசுதேவன், டாக்டர். பத்ம கோவர்த்தன, கலைமாமணி எஸ். ராஜேஸ்வரி, ராணி நடராஜா மாணவர்களும், NCMS கான விஷாரத் அனுஷா சுரேஷ், டாக்டர்.வி. பிரதியுஷா, தீரஜ் வெங்கடாச்சலம் இசை கச்சேரி சிறப்பாக நடை பெற்றது. அன்று மாலை 5.30 மணியளவில் ஆக்லாந்து இசை ரசிகர்கள் எதிர்பார்த்த நாகை முரளீதரனின் வயலின் இன்னிசை நடைபெற்றது. அவருடன் இணைந்து நாகை ஸ்ரீராம் வயலின் இசைத்தார். அவர்களுடன் அன்றும் திருவனந்தபுரம் பாலாஜி மிருதங்கமும் மற்றும் திருப்புணித்துறை என். ராதாகிருஷ்ணன் கடமும்திறம்பட வாசித்து கச்சேரியை மெருகூற்றினர். ரவி நாகராஜன் இசைக் கலைஞர்களை வாழ்த்தி வரவேற்புரை கூறினார்.

அன்று ஸ்ரீனிவாச ஐயங்கார் இயற்றிய அட தாளத்தில் அமைந்த கானடா ராக வர்ணத்தோடு கச்சேரி தொடங்கியது. மைசூர் சாம ராஜா உடையார் இயற்றிய ‘ஸ்ரீ ஜாலந்தரம்’ என்ற பாடலை காம்பீர நாட்டையில் அழகாக வாசித்தனர். அதை தொடர்ந்து தியாகராஜரின் 'பூவினிதாஸுடனி ' ரஞ்சனி ராகத்தில் இசைத்து மகிழ்வித்தனர். அன்று அரங்கில் இசை கலைஞர்களின் வயலினிசை செவிகளை குளிரச் செய்‌தது. முரளீதரன் பூர்வி கல்யாணி ராகத்தை முக்கிய ராகமாக எடுத்து நீண்ட ஆலாபனையும் கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய 'நடமாடும் நாதனடி மலரே' என்ற கிருதிக்கு நிறைய கல்பனா ஸ்வரங்களும் நிரவல்களும் அமைத்து அதற்கு நாகை ஸ்ரீராமும் அவரோடு வயலினில் இசைந்து பாலாஜியின் மிருதங்கமும் ராதாகிருஷ்ணனின் கடமும் தனி ஆவர்தனமாக மிகச்சிறப்பாக அமைந்தது.ராதாகிருஷ்ணன் கடத்தை தூக்கி போட்டு வாசித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்ததது. அன்று முரளிதரன் மற்றும் ஸ்ரீராம் வாசித்த எல்லா பாடலும் ராகங்களும் மிகவும் தேர்ந்தெடுத்த ஒன்றாகவும் ரசிகர்கள் விரும்பும் வண்ணம் ஜன ரஞ்சகமாகவும் இருந்தது. பின்னர் பைரவி ராகத்தில் 'அம்பா காமாக்ஷி' தொடர்ந்து எல்லோரும் விரும்பும் தீக்ஷிதரின் த்வஜாவந்தி ராகத்தில் ‘அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்’ என்ற பாடலை வயலினில் இசைத்து கேட்டு அன்று எல்லோரும் மிகவும் ரசித்தார்கள். அதை தொடர்ந்து நிறைய துக்கடாக்கள் அதாவது பிலஹரியில் ‘தொரகுண இட்டுவண்டி சேவா’, புரந்தரதாஸரின் காபி ராகத்தில் ‘ஜகதோ தாரனா’, மிஸ்ர யமன் ராகத்தில் ஜி.என்.பி.யின் ‘ராதா ஸமேதா கிருஷ்ணா’ என்ற ஜனரஞ்சகமான பாடல்களை தொடர்ந்து ராகமாலிகையில் அமைந்த ‘ பாரோ கிருஷ்ணையா’, யமன் கல்யாணி ராகத்தில் அமைந்த அன்னமாச்சார்யாவின் ‘பாவயாமி கோபால பாலம்’ என்ற பாடலும், புரந்தரதாஸரின் ‘பாக்கியத லட்சுமி பாரம்மா’, பின்னர் ஜாவளி , தில்லானா முடித்து மங்களம் இசைத்து கச்சேரியை நிறைவு செய்தார். இரண்டு நாளும் அரங்கமே நிரம்பி வழிந்தது. ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்கள் மகிழ்ச்சியை கரவொலி எழுப்பி தெரிவித்தனர். அசோக் மல்லூர் இசை கலைஞர்களை பாராட்டி பேசியதை தொடர்ந்து ரெங்கநாதன் நன்றி உரை ஆற்றினார்

சங்கீத உத்சவத்தின் மூன்றாவது இறுதி நாளன்று காலை 9 மணிக்கு ஆக்லாந்தில் உள்ள மூத்த இசை கலைஞர்களின் கச்சேரி இடம்பெற்றது. அதில் டாக்டர் பத்மா கோவர்தன், மாலதி வாசுதேவன், வித்வான் எம்.டி.திவாகர், பிரியா விஜய், துளசி பிரபாகரன், அஷ்வினி விஸ்வநாத், யஸோ மகேந்திரன் மற்றும் டாக்டர். அசோகமல்லூர் ஆகியோரின் இசை கச்சேரி நடை பெற்றது.
இவ்விழாவில் ஏராளமான இசை ரசிகர்களும், இசை ஆர்வலர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மூன்று நாட்கள் முழுவதும் அரங்கேறிய இசை கச்சேரிகளால் பார்வையாளர்கள் அனைவரும் இசையமுதம் பருகினர். ஒவ்வொரு நாளும் செவிக்கு உணவான இனிய கச்சேரிக்கு பின்னர் வ‌ந்திருந்த அனைவ‌ருக்கும் இரவு உணவு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 2

மல்லிகை மலர்- 2...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்...

மல்லிகை மலர்

மல்லிகை மலர்...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்...

Advertisement
Advertisement

மீனவருக்கு பாதுகாப்பு: ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ...

ஆகஸ்ட் 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)