தலவரலாறு: மலேசியாவின் பினாங்கு நகரில் தண்ணீர்மலையிலே பால தண்டாயுதபாணியாக நின்ற நிலையில் அனைவரையும் ஆசீர்வதித்து அருள் தந்து, பொருள் தந்து வாழ வைக்கிறார் முருகப் பெருமான். மூவேந்தர்களுக்கு பிறகு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சமூகம் திருக்கோவில்களை பாதுகாப்பதிலும் அதைப் பேணி முறையாக நடத்தி வரவும், ஆலயங்கள் அமைப்பதிலும், புதிப்பிப்பதிலும் இன்று வரை எடுத்துக்காட்டாக விளங்கி வந்திருக்கின்றனர்.பினாங்கில் கி.பி. 1818 ம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள், ஆறுபடை நாயகனான அருள்பொங்கும் தண்டாயுதபாணிக்கு, 9-8-1850ல் பினாங்கு வீதியில் 138 எண் கொண்ட கோவில் வீட்டில் தண்டாயுதபாணியின் தங்க உற்சவ மூர்த்தியை நிறுவி வழிபட்டு வந்தனர். இது மிகவும் ஆற்றல் மிக்க அருட்தெய்வமாகக் கருதப்படுகிறது. அதன் பின்னர் பினாங்கு வாட்டர்பால் ரோட்டில் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் ஒன்றை 1854ல் வாங்கி 12-12-1857ல் தண்ணீர்மலை தண்டாயுதபாணி ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. மேற்கூறிய இடத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு ஆகம முறைப்படி அழகிய திருக்கோயில் கட்டுவதற்குரிய வரை படத்தை வரைந்தனுப்புமாறு பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வேதாந்தத் திருமடமான கோவிலூர் ஆதீனத் தலைவராக விளங்கிய ஞானப் பேரொளி தவத்திரு வீரப்ப சுவாமிகளுக்கு மடல் வழி வேண்டுகோள் விடுத்து, அதற்கேற்க அன்னார் வரைந்தனுப்பிய வரைபடப்படியே தண்ணீர்மலைத் தண்டாயுதபாணி ஆலயம் அன்று அழகாகக் கட்டப்பட்டது. நாட்டுக்கோட்டை நகரத்தார் பினாங்கு தண்டாயுதபாணி கோவிலை தமிழகம் காரைக்குடியிலிருந்து வந்த கட்டிடக் கலைஞர்கள் சிற்பிகளைக் கொண்டு, செட்டிநாட்டு நகரத்தார் கட்டிடக் கலைச்சாயலில் கட்டினார்கள். இக்கோயில் அமைப்பு முறை சொக்கட்டான் காய் ஆட்டக் கட்டம்போல (நீண்ட நேர் கோடு குறுக்கு நேர் கோடு) கூட்டல் குறி அமைப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதனுள் பழநி மலையில் இருப்பதைப்போன்று தண்ணீர்மலையாண்டவன் நின்ற கோலத்தில் தங்கி இருக்கிறான். அவனது நின்ற அழகுக் கோலம் நம் அகத்தைக் கவரவல்லது. இந்தக் கோவில் கருவறை அர்த்த மண்டபம் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், நந்தவனம், பின்புறம் தென்னந்தோப்பு போன்ற இயற்கை சூழலில், பினாங்கில் மிகப்பெரிய இந்துக் கோவிலாகத் திகழ்கின்றது. தண்ணீர்மலைத் தண்டாயுதபாணியின் வலது தொடையின் மேல் அழகான மச்சம் ஒன்றுள்ளது. மரகதம் பதித்தாற்போலத் திகழும் இந்த மச்சத்தை தண்ணீர்மலையானின் அளவற்ற அருட்சக்தியின் அடையாளமாக பக்தர்கள் கருதுகின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சம், மண்டபங்கள் முழுவதும் பர்மாவிலிருந்து வர வைக்கப்பெற்ற தேக்கு மரத்தால் ஆனது. மண்டப மேல் பகுதியில் தேக்கு மரப்பலகையின் மீது பாரத தேசத்து வரலாற்றுச் சித்திரங்கள், இயற்கை வர்ணத்தில் வடித்து இருக்கிறார்கள். அடுத்த கீழ் வரிசையில், உலகப் புகழ்பெற்ற இந்தியச் சித்திரக் கலைஞர் ரவி வர்மாவின் அழகிய சித்திரங்கள் கோவில் முழுதும் வைக்கப்பட்டுள்ளன. தண்டம் என்றால் கோல் அல்லது தடி என்பதாகும். பாணி என்றால் கை என்று பொருள். தண்டத்தை கையிலே ஆயுதமாக கொண்டிருப்பதால் தண்டாயுதபாணி என்று முருகப் பெருமானுக்கு பெயர் விளங்குகின்றது. தென் கிழக்கு ஆசியாவில் பினாங்கில்தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. எல்லாம் வல்ல முருகன் எழுந்தருளியிருக்கின்ற இவ்வ்வாலயத்தில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் வண்ணக் காவடிகள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்புக் காவடி இப்படி இன்னும் எத்தனையோ வகைவகையான காவடிகள் காணிக்கையாக எடுத்து வரப்படுகின்றன. தைப்பூசத் திருவிழாவைக் காணவரும் லட்சக்கணக்கான மக்களில் பல இனத்தவரும் கலந்துகொள்வது சிறப்பாகும். மலேசிய அரசும் தைப்பூச நாளைப் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இவ்விழாவில் நூற்றாண்டுகள் பழமைமிக்க வெள்ளி ரதத்தில் தண்ணீர் மலையான் வண்ணக் கோலத்தில் நகர் வலமாய் வந்து, பினாங்கு நகரின் முக்கிய சாலைகள் முழுவதும் உலா வருவார்.1894 ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் நாட்டில், செட்டி நாட்டுப் பகுதியான காரைக்குடி நகரிலிருந்து இந்த வெள்ளி ரதம் செய்யப்பட்டு பினாங்கு நகருக்கு கொண்டு வரப்பட்டது. பினாங்கு நகரில் தைப்பூச திருநாளுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக நடைபெறும் கந்த சஷ்டி திருநாள், தண்ணீர்மலையானின் தனிப்பெறும் விழாக்களிலே சிறப்பு வாய்ந்தது. இந்த கந்த சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் இரவிலும் அருள்மிகு தண்ணீர்மலையான் முறையே பால சுப்பிரமணியன், சுவாமிநாதன், வேலன், வேடன், விருத்தன், தெய்வாணை திருமணம், வள்ளியம்மை திருமணம் ஆகிய ஏழு திருவேடங்களில் காட்சி தந்து மக்களுக்கு அருள்புரிகின்றார். ஒவ்வொரு தமிழ் ஆண்டுப் பிறப்பான சித்திரை முதல் நாளில் சித்திரைப் பூசை விழா அதை அடுத்து சித்ரா பவுர்ணமி பூஜை விழாவும் (மகேஸ்வர பூசை) சிறப்பாக நடைபெற்று எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அடுத்து ஆடி அமாவாசையிலும் மகேஸ்வர பூஜை செய்யப்பெற்று அன்னதானம் வழங்கப்பெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்களில் சங்கு நீராட்டும் சண்முக அர்ச்சனையும் நடைபெறும். காலையில் காலசந்தி பூசையும், மதியம் உச்சிக்கால பூசையும், மாலையில் சாயரட்டை பூசையும், இரவு அர்த்தசாம பூசைகளும் நாள் வழிபாடுகளாக நடைபெறுகின்றன.
கோயில் நேரங்கள்: காலை 6.15 மணி முதல் பகல் 12.30 மணி வரை; மாலை 4.15 மணி முதல் இரவு 8.45 மணி வரை.
சிறப்பு நாட்கள்: தைப்பூசம் (3 நாள் உபயம்), பங்குனி உத்திரம், தமிழ் வருட பிறப்பு, சித்ரா பவுர்ணமி, ஆடி பூஜை, திருக்கார்த்திகை, கந்த சஷ்டி
கோயில் முகவரி: Sri Thandayuthapani Koil,
Waterfall Road, Jalan Kebun Bunga,
10350 Penang,
Pulau Pinang, Malaysia
தகவல் தொடர்பு: கோயில் மேனேஜர் ஆறுமுகம்-(6) 04-2271322 ; புரோகிதர் சுரேஷ் பண்டாரம்-(6) 012-406 3784.
மாதவி இலக்கிய மன்றத்தின் தமிழ் மாத-தமிழர் திருநாள்!...
திருவள்ளூர் : திரவுபதியம்மன், தீமிதி திருவிழாவில், உச்சக்கட்ட நிகழ்வான துரியோதனன் படுகளமும், அக்னி பிரவேசமும், இன்று நடைபெற உள்ளது.
ஏப்ரல் 22,2018 IST