தலவரலாறு : கனடாவிலுள்ள மென்ட்ரியல் பகுதியில் அமைந்துள்ளது, அழகிய திருமுருகன் ஆலயம். 1983-ம் ஆண்டின் முற்பகுதியில், வட அமெரிக்க நகரங்களில்,தென்னிந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்த மக்கள் அதிகளவில் குடியேற துவங்கினர். எனவே, தமிழ் மொழியாளர்களுக்கென ஒரு நிலையான வழிபாட்டுத் தலம் அமைக்க முடிவு செய்தனர். 1984-ம் ஆண்டு, மென்ட்ரியலில் இருந்த தமிழ் சைவர்கள், பிற மொழி பக்தர்களுடன் இணைந்து, மென்ட்ரியல்-க்யூபெக் என்ற இடத்திலுள்ள, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயிலில், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தினர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், பிரார்த்தனை நடத்துவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய முற்பட்டனர். 1985-ம் ஆண்டு, இந்து சமய ஆர்வலர்களான, ரங்கநாத ஐயர், செல்லைய்யா ராஜரத்தினம் மற்றும் அப்புதுறை கனகலிங்கம் ஆகியோர்கள் மென்ட்ரியல்- க்யூபெக்கில் ஆலயம் ஒன்றை நிறுவினர். ஆரம்பத்தில், வெகு சில உறுப்பினர்களைக் கொண்டு, வாராந்திர பூஜைகள் துவங்கப்பட்ட இவ்வாலயத்திற்கு, சைவ நிறுவனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வரத் துவங்கினர். எனவே, ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட முருகன் ஆலயத்தை விரிவுபடுத்த திட்டமிட்டனர். 1986-ம் ஆண்டு, மார்ச்-11-ம் நாளன்று, இக்கோயில் முறைப்படி பதிவு செய்யப்பட்டதுடன், அவ்வாண்டின் விநாயகர் சதுர்த்தி நாளில், கிரானைட் கல்லால் ஆன கணபதி சிலை , தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1987-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று இக்கோயில் , சமய கூடமாகவும், தொண்டு மையமாகவும், கனடா அரசால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், சமூக கலாச்சார மையமாகவும் இக்கோயில் செயல்படுவதற்காக, இக்கோயிலில் சமூக மையமும், பாலாலயமும் அமைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு இக்கோயில் , விரிவுபடுத்தப்பட்டு, முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அத்துடன், காவடி சுமந்த பக்தர்கள் சூழ, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரால் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக கொண்õடாப்பட்டது. 1991-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு, முருகன் சன்னதியில் சுற்றுப்புறங்கள், வால்-மொரின் எனப்படும் அழகிய வேலைப்பாடுடனான மரத்தினால் வடிவமைக்கப்பட்டது. வருடந்தோறும் கோடைக் காலத்தில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவின் போது நடத்தப்படும் தேர் திருவிழாவில், டொரான்டோ, நியூயார்க் , நியூஜெர்ஸி மற்றும் கனடாவின் தொலை தூரப்பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்வது, குறிப்பிடத்தக்கதாகும் . முருகன் அடியார்களும்,தொண்டர்கள் பலரும் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்து , கோயிலில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் செய்து கோயிலின் கட்டிடப் பணிகள் நடத்தவும், கிரானைட் கல்லால் ஆன தெய்வ சிலைகள் பிரதிஷ்டை செய்யவும் ஆசிர்வாதம் செய்தனர். 1992-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 72,000 சதுரடி பரப்பளவில், 450,000 டாலர் செலவில், சைவ இயக்கத்தாரால் இக்கோயிலுக்கான நிலம் பெறப்பட்டது. பிப்ரவரி-28-ம் தேதி, நிரந்தர கட்டிடம் அமைப்பதற்காக, இக்கோயிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. 2003-ம் ஆண்டு, இந்திய வம்சாவழியினர் பலரால் இக்கோயிலுக்கான நன்கொடை வழங்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த, முருக பக்தர்கள் சிலரும் இக்கோயிலுக்காக நன்கொடை வழங்கினர். 2004-ம் ஆண்டு ஆர்வலர்கள் பலர் தானாக முன்வந்து,கோயில் கட்டும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். நாட்டியக் கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகள் பல நடத்தியும் இக்கோயிக்காக நிதி திரட்டித் தந்தனர். 2005-ம் ஆண்டு, ஜனவரி மாதம், கோயிலுக்கு அருகில் 52,000 சதுரடி நிலப்பரப்பில், 368,000 டாலர் செலவில், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கூடுதல் நிலம் பெறப்பட்டது. 2005-ம் ஆண்டின் இறுதியில் இக்கோயிலின் கட்டிடப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தன. 2006-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி,ஞாயிற்றுக் கிழமை இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவுடன் டொரண்டோ மட்டுமல்லாது, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா,டென்மார்க் மற்றும் ஐக்கிய கூட்டமைப்பு நாடுகளிலிருந்து, வரவழைக்கப்பட்ட குருக்கள்களைக் கொண்டு இக்கோயிலின் பூஜைகள் நடத்தப்பட்டன. வட அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக, இக்கோயிலின் முத்திரை பதிக்கப்பட்ட தபால் தலை, கோயில் கும்பாபிஷேக விழாவின் போது வெளியிடப்பட்டது,குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ்விழாவின் போது, சிறிய தங்கத்தேர் ஒன்று, சரவணாஸ் ஜெயராஜய்யா என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
முக்கிய தெய்வங்கள் : வள்ளி-தெய்வசேனா சமேத முருகன், விநாயகர், நடராஜர், சிவன்,பார்வதி,வெங்கடேஷ்வரர், லட்சுமி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் முதலியன இக்கோயிலின் முக்கிய தெய்வங்களாக போற்றப்படுகின்றன.
முக்கிய விழாக்கள்: மணவாளக் கோலவிழா, குபேர லட்சுமி பூஜை, பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி, திருவள்ளுவர் விழா, மாசி மகம்,சிவராத்திரி,தைப்பூசம், அபிராமி அந்தாதி விழா,திருக்கார்த்திகை விழா, வைகுண்ட ஏகாதேசி,விநாயகர் சதுர்த்தி,கந்த சஷ்டி விழா, கேதாரகௌரி பூஜை,நவராத்திரி பூஜை ஆகியன இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோயில் நேரங்கள்
காலை 8 மணி முதல் பகல் 1.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
பூஜை நேரங்கள் : காலை 9 மணி, பகல் 12 மணி மற்றும் மாலை 7 மணி.
கோயில் முகவரி:
Montreal Thirumurugan Temple - Saiva Mission of Quebec
1611 St.Regis Blvd, D.D.O,
Quebec H9B 3H7 - Canada
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் தக்சின், தினஜ்பூரில் இன்று அதிகாலை 2.24 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.2 அளவாக பதிவான இந்நிலநடுக்கத்தால் சேதங்கள் ...
ஏப்ரல் 27,2018 IST