போட்டூன்

31-Jul-2013
1 / 20
குடிக்கத்தான் தண்ணீர் இல்லை..:

படவிளக்கம்:


உத்தரகண்ட் மாநிலத்தில் ஆரம்பித்த மழை வெள்ளம் இன்னும் வட மாநிலங்களை விடுவதாக இல்லை. உ.பி., மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பல ஊர்களின் தெருக்களையும், வீடுகளையும் மூழ்கடித்தபடி ஓடிக்கொண்டு இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய ஒருவருக்கு தாளமுடியாத தண்ணீர்தாகம். வாட்டர் டேங்க் ஒன்றை தேடிப்பிடித்து தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக்கொள்கிறார்.


2 / 20
நான் உயிருடன்தான் இருக்கிறேன்...: முன்பெல்லாம் வதந்திக்கு கை கால் முளைத்துதான் நடக்கத்தான் செய்யும்,ஆனால் இப்போதெல்லாம் இறக்கை கட்டி பறக்கிறது.‘நடிகை கனகாவிற்கு என்னாச்சு?’ என்று யாரோ கேட்கப்போய், அவருக்கு புற்று நோய் என்றும் கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆதரவற்ற நோயாளியாக சாகும் தருவாயில் இருக்கிறார் என்றெல்லாம் வதந்தி கிளப்பியவர்கள் கடைசியில் அவர் இறந்ததாகவும் புரளி கிளப்பி விட்டனர். ஆனால் அது அத்தனையும் பொய், நான் நலமாக எந்த நோயும் இல்லாமல் உயிருடன் சென்னையில்தான் இருக்கிறேன் என்று வேதனையுடன் நடிகை கனகா பேட்டி கொடுத்துள்ளார், வதந்தி கிளப்பியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள், அது வேறு கனகா என்பார்களோ?
3 / 20
பச்சை நிற பூதமல்ல...: கரண்ட் இல்லாத தேசமாக இருந்த போது வளர்ந்த செடியா?அல்லது மின்துறை பராமரிப்பின் லட்சணமா?சென்னை அண்ணாநகர் பகுதியில்தான் இந்த கோலம்.
4 / 20
பார்லிமெண்டை நடத்தவிடுங்க...: ஆகஸ்ட் 5ல் பார்லிமெண்ட் நடக்க உள்ளது.இது பற்றி சபாநாயகர் மீராகுமார் பேசும் பொழுது, கடந்த பார்லிமெண்ட் பெரும்பாலும் அமளி துமளியாகவே நடந்து முடிந்தது.எந்த வித விவாதமும் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கிறது.545 உறுப்பினர்களில் இரண்டு பேர் இடையூறு செய்தாலே சபையை ஒத்திவைக்கவேண்டி உள்ளது என்று மனம் நொந்து கூறியுள்ளார்.கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் எம்பியாகி டெல்லி வரவேண்டியது, மேசையை தட்ட வேண்டியது,சந்தைக்கடை போல சத்தம் போடவேண்டியது பிறகு டெல்லியை சுற்றிபார்க்க போகவேண்டியது ,இதுவா எம்பிக்கு அழகு? என்று கோபமாக கேட்கவேண்டியதை மனதிற்குள் போட்டு பூட்டிக்கொண்டு நாசூக்காக சபையை நடத்த ஒத்துழையுங்கள் என்று சொல்லியுள்ளார்,பார்ப்போம்.
5 / 20
இதயத்துல இடம் இல்லீயா...: இப்தார் விருந்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி பேசும்போது, வரக்கூடிய லோக்சபா தேர்தலில், திமுகவுக்கு நிறைய தொகுதிகள் கிடைக்கும் வகையில் முஸ்லிம் லீக் குறைவான இடமே கேட்கவேண்டும் என்ற அர்த்தத்தில் பேசியுள்ளார்.குறைவான இடம் கொடுக்கப்போறீங்களா இல்லை இதயத்துல இடம் ஒதுக்கப்போறீங்களான்னு தேர்தல் வரும்போதுதானே தெரியும்.
6 / 20
‘ஆடி’ ஆத்தி: ஓரு காலத்தில் ஆடி மாதம் ஆகாத மாதமாக கருதப்பட்டு எந்த வியாபாரமும் நடக்காது,ஆனால் இப்போது தீபாவளி,பொங்கல்,புத்தாண்டை மிஞ்சும் வகையில் வியாபாரம் பிரமாதப்படுகிறது. எல்லாம் ஆடி தள்ளுபடி செய்யும் மாயம்.சென்னை ரங்கநாதன் தெருவில் பகல் வேளையிலேயே கூடியுள்ள இந்த கூட்டத்திற்குள் போய் சேதாராமில்லாமல் எப்படி திரும்புகிறார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்தான்.
7 / 20
ஒண்ணும் முடியல...: பேசாம உங்கள மாதிரி வருவேன், வருவேன்னு சொல்லிட்டே இருந்திருக்கலாம், ஊர்ல எத்தனை கோர்ட் ஏறி இறங்க வேண்டியிருக்கு...
8 / 20
இவரு இந்த மாசம்...: இப்போது அதிமுகவினரால் பரிதி இளம்வழுதியை வைத்து நிறைய பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.அவரும் சென்னைத் தமிழில் கருணாநிதி குடும்பத்தை திட்டி அதிமுக விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகிறார்,ஆனால் இதைவிட ஆவேசமாக,கோர்வையாக,போன மாசம் வரை நாஞ்சில் சம்பத் என்பவர் பொங்கி எழுந்தாரே இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
9 / 20
பைக்கும் படகாகும்...: பின்னாடி உட்கார்ந்திருக்கிற ஆளைப்பொறுத்து வீரம் காட்டும் இளைஞர்கள் இங்கே சென்னை இசிஆர் ரோட்டில் மட்டுமல்ல, வடமாநிலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.என்ஜீனில் தண்ணீர் புகுந்தாலும் பரவாயில்லை என்று மோட்டார் பைக்கை, படகு போல தண்ணீரில் ஒட்டிச் செல்லும் இளைஞர் இவர்.அப்பா காசில் வாங்கிய பைக்காக இருக்கும் அதுதான் அருமை தெரியவில்லை.
10 / 20
துரத்தாதீங்க...திருத்தப்பாருங்க...: சென்னையில் உள்ள சுமார் 2ஆயிரத்து 500 ரவுடிகளை சென்னையை விட்டு வெளியூருக்கு துரத்தப்போறாங்களாம்,இது என்ன நியாயம்.துரத்தப்பட்டவர்கள் வெளியூரில் போய் அராஜகம் செய்தால் அது தப்பில்லையா?ஒண்ணு ரவுடிகளை திருத்தப்பாருங்க,இல்லைன்னா பிடிச்சு உள்ளே போடுங்க. உங்க விசேஷ அதிகாரத்தை வைச்சு நாலு பேரை போட்டுத்தள்ளினீங்கன்னா மத்தவங்க எல்லாரும் தண்ணாலே திருந்திட்டு போறாங்க.அதைவிட்டுவிட்டு வெளியூர் துரத்தற வேலை எல்லாம் பிரயோசனப்படாது.
11 / 20
சல்யூட் நம் ராணுவத்தினருக்கு...: உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட நாள் முதல் ஊன்,உறக்கம் பாராது உழைத்து பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றியவர்கள் நமது ராணுவத்தினரே. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இவர்களில் 19 பேர் இன்னுயிரான தங்கள் தன்னுயிரையும் கூட தந்திருக்கிறார்கள்.அவர்களது செயலை பாராட்டி பல கார்ட்டூன்கள் வந்தாலும் நெஞ்சைத்தொட்ட கார்ட்டூன் இதை வரைந்தவருக்கும், அனுப்பியவருக்கும் நன்றி!
12 / 20
அந்த 99 ரூபாய் என்னாச்சு...: சமீபத்தில் காங்.தலைவர் சோனியா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஒரு கதை சொன்னார்,ஒரு அப்பா தனது மூன்று மகன்களை அழைத்து ஒவ்வொருவருவர் கையிலும் நூறு ரூபாய் கொடுத்தார்,இந்த பணத்தைக் கொண்டு இந்த அறையை நீங்கள் முழுமையாக நிறைக்கவேண்டும் என்று சொன்னார்.முதல் மகன் நூறு ரூபாய்க்கு மரப்பலகைகளை வாங்கிவந்து அறையில் போட்டார்,ஆனாலும் அறை முழுமையடையவில்லை,இரண்டாவது மகன் நூறு ரூபாய்க்கு பஞ்சு வாங்கிவந்து அறையை நிரப்பினார்,ஆனாலும் அறையானது நிரம்பவில்லை,மூன்றாவது மகன் ஒரே ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுதிரி வாங்கிவந்து, அதனை கொளுத்தி அறையின் நடுவே வைத்தார்,அறை முழுவதும் வெளிச்சம் பரவி நிரம்பியது,அறை முழுமையடைந்தது.என் மகன் ராகுல் மூன்றாவது மகன் போல,அவரது புத்திசாலித்தனத்தால் இந்த நாடு விரைவில் ஒளிமயமாயமாகும்,சுபிட்சம் பொங்கும்,செழுமை பெறும் என்று சொல்லியிருக்கிறார்.இதைக்கேட்ட குஜராத் முதல்வர் மோடி எல்லாம் சரி,மூன்றாவது மகனிடம் செலவழிக்க கொடுத்தததில் மீதமான 99 ரூபாயின் கதி என்னாச்சு? அதே நிலமைதான் இங்கேயும் நடக்குமா?என்று கிண்டலாக கேட்டுள்ளார்.
13 / 20
காரு எப்ப தருவீங்க...: பா.ம.க., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி பா.ம.க.,வில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்.அவருக்கும் செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் பதவியே வகித்தவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி ஒரு பெரிய விஷயமாக இருக்கப்போவது இல்லை.மற்றபடி கட்சி மாறி வந்தா காரு கொடுப்பாங்கன்னு சொல்றாங்களே, இவருக்கு என்ன காரு ரெடியாயிருக்குன்னு தெரியலையே.
14 / 20
அது நான் அப்ப சொன்னது...: மகாபாரதத்தில் அபிமன்யு போல என் ஓருவனின் முதுகில் மொத்த பாரத்தையும் கொடுத்து சட்டசபையில் சுற்றி சுழன்று வார்த்தைகளால் வாள் வீச அனுமதி கொடுத்த டாக்டர் கலைஞர் இதோ இன்று கழக கொடியினை ஏற்றிவைக்கும் பாக்கியத்தை கொடுத்துள்ளார்,இந்த ஒரு பாக்கியம் போதாதா? இந்த பரிதி இளம்வழுதி வாழ்நாளல்லாம் நன்றிக்கடன் பட்டுக்கிடக்க, எனக்குள்ள ஆசை,வேண்டுகோள்,விருப்பம் எல்லாம் ஒன்றுதான்,அது , கழக கொடியினால் போர்த்தப்பட்ட நிலையில்தான் என் உடல் மயானத்திற்கு கொண்டு போகப்படவேண்டும்”.. இப்படி தன் வாழ்நாளல்லாம் தி.மு கழகத்திற்கு கடமைப்பட்டவன் என்று சொல்லி, திமுகவின் அமைச்சராக,துணைப்பொதுச் செயலாளராக இருந்த பரிதி இளம் வழுதி இன்று காலை போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
15 / 20
இது கனிமொழிக்கு கிடைத்த ஆதரவு: ஆக கடைசியில் கனிமொழி எம்.பி.,ஆவதற்கு காங்கிரசின் தயவு கிடைத்துவிட்டது.இதற்காக தமிழக காங்கிரசாரை பார்த்து கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.இது காங்கிரஸ், கனிமொழிக்கு தந்த ஆதரவு தானே தவிர திமுகவிற்கு தந்த ஆதரவு இல்லை என்று முத்தமிழ் காவலர் ஏதாவது கல்யாண வீட்டில் பேசி குழப்பாமல் இருந்தால் சரி.
16 / 20
நாம ஆட்டையில இல்லீயா...: பிரதமர் பெயருக்கு எல்லார் பெயரும் அடிபடுது,முலாயம் கூட நாற்பது சீட் இருந்தா போதும் நான் பிரதமராகிவிடுவேன் என்கிறார்,நாடறிந்த நம்ம பெயரை ஏன் பிரதமர் ரேஞ்சுக்கு யாரும் சிந்திக்கமாட்டேங்குறாங்க...
17 / 20
வருடம் முழுவதும் ஷாப்பிங்...: சென்னை திநகரில் மக்கள் அப்படி என்னதான் வாங்குவார்களோ. வருடம் முழுவதும் ஷாப்பிங் செய்கிறார்கள்,வாழ்க்கை முழுவதும் ஷாப்பிங் செய்கிறார்கள்.செய்துவிட்டு போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா தெரியாத்தனமாக வாகனத்தில் இந்த கூட்டத்திற்குள் போய் சிக்கிவிட்டால் அப்புறம் வெளியேறுவது என்பது நம் கையில் இல்லை,இந்த வழியாக 108 வந்தால் கூட இடம் கிடைக்காது அப்பிடி ஓரு கூட்டம் அப்பியபடியே இருக்கிறது.
18 / 20
இப்ப நாம என்ன செய்யலாம்...: வயசாயிடுச்சு ஆளவிடுங்கப்பான்னாலும் கேட்காம பழையபடி பொறுப்புல கொண்டுவந்து விட்டுட்டாங்க,ஆன என்ன சொன்னாலும் மோடி பேச்சைத்தான் கேட்கிறாங்க நாம இப்ப என்ன செய்யலாம்னு பா.ஜ.க.,மூத்த தலைவர் இப்பல்லாம் ரொம்பவே யோசிக்கிறாரராம்.வெள்ளம் பாதித்த உத்தர்கண்ட் மாநில நிலமைதான் இப்ப படு மோசமா இருக்கு. அறிக்கை கதை கட்டுரைன்னு வாசிக்காம ‘டக்குனு’ எங்க ஊரு கேப்டன் பத்து லட்சத்தை எடுத்து நிவாரணநிதியா கொடுத்துட்டாரு. நீங்க ரொம்ப யோசிக்காம நிவாரணநிதியா பெருந்தொகையை கட்சி சார்பா அறிவிச்சுடுங்க,அப்புறம் தொண்டர்களை களம் இறக்கிவிடுங்க பிறகு பாருங்க உங்க மரியாதை எவ்வளவு கூடுதுன்னுட்டு.
19 / 20
எதுக்கு நிக்கிறாங்கன்னே தெரியலை...: எந்த கடை வைக்க இடம் கிடைக்காதோ,இல்லீயோ? டாஸ்மாக் கடை வைக்கமட்டும் எப்படியும், எங்கேயும் இடம் கிடைத்துவிடுகிறது.சென்னை பாரதி சாலையில் நியாயவிலைக்கடை பக்கத்திலேயே டாஸ்மாக் கடைவைத்துள்ளனர்.இரண்டுக்குமே கூட்டம் அப்புகிறது.மக்கள் எந்த கடைக்கு போறதுக்கு கூட்டமா நிக்கிறாங்கன்னே தெரியமாட்டேங்குது.நியாயவிலை கடைக்கு சரக்கு வாங்க போன மனுஷன் அந்த காசுல ‘சரக்கு’ அடிச்சுட்டு வந்துடுவாரோங்ற பயம் இந்த பகுதி தாய்மார்களுக்கு கொஞ்சம் அதிகம்தான்.
20 / 20
முயற்சி திருவினையாகட்டும்...: நான் எனது அமைச்சரவை சகாக்களிடம் சொல்லிவிட்டேன்,உங்களது சொல்லும்,செயலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று”,‘வீட்டில் இருந்தே தூய்மையான நிர்வாகத்தை துவங்க வேண்டும் என்றும்’ கேட்டுக்கொண்டுள்ளேன், வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகத்தை அளிப்பேன் என்றெல்லாம் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடைசியாக சொன்னதுதான் ஹைலைட்,நேர்மையான ஆட்சி நடத்தவே நாங்கள் முயற்சி செய்கிறோம் என்பதுதான் அது.,உங்கள் முயற்சியை திருவினையாகட்டும்.
Advertisement