போட்டூன்

10-Sep-2013
1 / 20
முதல்ல துண்டைப்போடு...: புதுக்கோட்டை வந்த மத்திய அமைச்சரும் காங்கிரஸ்காரருமான சுதர்சன நாச்சியப்பனுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட காரில் முதல்வர் படம் இருந்துள்ளது.முதலில் இதை அமைச்சர் கவனிக்கவில்லை, ஆனா பத்திரிகை போட்டோகிராபர்கள் ‘நாம கார்ல உட்கார்ந்திருக்கும் போதே வளைச்சு,வளைச்சு படம் எடுக்கிறாங்களே,என்ன விஷயம்’ என்று ஆராயும்போதுதான் முதல்வர் போட்டோ விஷயம் கவனத்திற்கு வந்துள்ளது. பதறிப்போய் கையில் இருந்த கட்சி துண்டால் படத்தை மூடுவது போல போட்டு மறைத்தார்.
2 / 20
பயணிகள்(இல்லா)நிழற்குடை: நம்மூர் எம்.பி.,க்களும்,எம்.எல்.ஏ.,க்களும் பயணிகளுக்கான நிழற்குடை கட்டித்தருவதே பெரிய காரியம்.அந்த நிழற்குடையும் இப்படி அம்மா உணவகமா மாறிப்போன என்ன அர்த்தம்.
3 / 20
ஐ பேட் இல்லையா?: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. எப்போதும் லேட்டஸ்ட் டிரண்டை பிரதிபலிக்கும் விதத்தில் விநாயகர் சிலைகள் இருக்கும். அந்த வகையில் விநாயகர் கையில் ஐ பேட் வைத்து ‘ட்விட்டரில் ’பதிவு போட்டுக் கொண்டு இருப்பார் என்று பார்த்தால் இன்னும் செஸ் தான் விளையாடிக் கொண்டு இருக்கிறார்.
4 / 20
போடா...: சேலத்தில் இருந்து கோவைக்கு ரயிலில் போய்க்கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒரு பிரச்னை தொடர்பாக திருப்பூர் காவல் நிலையத்திற்குள் புகுந்து அங்குள்ள பெண் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.இதில் இருதரப்பிலும் காயம்.வழக்கமாக இந்த மாணவர்களை எச்சரித்து அனுப்பிவிடுவார்கள்.போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து போலீசையே தாக்கும் அளவு நிலமை போனதால், திருப்பூர் எஸ்.பி.,சம்பந்தபட்ட மாணவர்களை கைது செய்து உள்ளே தள்ளிவிட்டார்.இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். சனி,ஞாயிறு பொது விடுமுறை,திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை , ஜாமீன் பற்றி செவ்வாய்கிழமைதான் யோசிக்கவே முடியும். பெற்றோர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
5 / 20
பெருமையுடன் எழுதுகிறோம்...: ஆசிரியர் தினத்தை தினமலர் பெருமையுடன் கொண்டாடியது.சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் வாசலில் பிரம்மாண்டமாக பேனர் வைத்து அதில் ஆசிரியரை வாழ்த்தி மாணவ,மாணவியரை எழுத வைத்தது. இதனால் மாணவ, மாணவியருக்கு மகிழ்ச்சியும்,ஆசிரியர்களுக்கு நெகிழ்ச்சியும் ஏற்பட்டது. இந்த மாணவி வெறும் கையெழுத்துடன் நிறுத்தாமல் கூடவே ஒரு அற்புதமான வாசகத்தை எழுதினார். அந்த வாசகத்தை தெரிந்து கொள்ள அப்படியே மேலே உள்ள ‘போஸ்டர்’ பகுதியில் பார்க்கவும்.
6 / 20
தாங்கமுடியல மிஸ்டர் ரமணன்...: சென்னையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று நீங்களும் கடந்த சில நாட்களாக நாள் தவறாமல் கூறிவருகிறீர்கள், இடியுடன் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை சும்மாவாவது மழை வரலாம்,ஆனால் வரமாட்டேங்குது.பங்குனி மாதம் போல வெயில் போட்டு தாக்குது,தாங்க முடியலை மிஸ்டர் ரமணன்.
7 / 20
சொல்லித்தராத பாடம்...: இவர்கள் எல்லாம் மாணவர்கள்தானா? என வெட்கித்தலை குனியும் வகையில் சென்னை மாணவர்கள் ‘பஸ் தினம்’ என்ற பெயரில் அட்டகாசம் செய்கின்றனர்.பொதுமக்கள் வாய்விட்டு அழாத குறையாக புகார் தந்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்காக போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். ரத்தத்தை பாலாக தந்து வளர்த்த தாய்மார்கள் பார்த்தால் பதறிபோவர். அந்த அளவிற்கு சாகசம் என்ற பெயரில் இந்த மாணவர்கள் ஒடும் பஸ்சில் நடத்தும் லீலைகள் எப்போதுதான் முடிவுக்கு வருமோ...
8 / 20
யாருக்கு யார் காவல்...: குரங்குகளை வைத்து வித்தைகாட்டி பிழைக்கக்கூடாது என்று சட்டம் இருந்தாலும் இன்னமும் குரங்கை ‘பாடாய்படுத்துபவர்கள்’ இருக்கத்தான் செய்கிறார்கள். குரங்கை காவலுக்கு வைத்துவிட்டு இந்த குரங்காட்டி நிம்மதியாக துõங்குகிறார்,இவரது நிம்மதியைவிட குரங்குக்கு கிடைக்கும் நிம்மதியே முக்கியம்.
9 / 20
போன் கிடைச்சுடுச்சுங்களா...: உஷ்...மேடத்துக்கிட்ட கேட்கிறதுக்கு வேற கேள்வியே இல்லையா!எங்கே போனாலும் எப்படி போன் தொலைஞ்சுதுன்னு கேட்டு படுத்துறீங்களே..
10 / 20
இப்ப இலையை மூடுவார் பாரேன்...: கல்யாண வீடு போன்ற பொதுச்சாப்பாடு சாப்பிடும் இடத்தில் சாப்பிடுபவர் முதுகிற்கு பின்னால் வந்து நின்று கொண்டு சாப்பிடுபவரை சங்கடப்படுத்தும் பழக்கம் இப்போது அதிகரித்து விட்டது. முதுகிற்கு பின்னால் நிற்பவர்கள் சும்மா நின்றாலும் பராவாயில்லை ,“இப்ப பாரேன், இவரு மோருகூட வாங்காம இலையை மூடுவாரு” என்று கமெண்ட் வேறு கொடுப்பார்கள். இந்த லட்சணத்தில் சாப்பாடு எப்படி உள்ளே போகும். சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க., பிரமுகர் இல்ல பாதுகாப்பிற்கு வந்த பெண் போலீசார்தான் இந்த அரிய திருப்பணியை மேற்கொண்டு இருந்தனர்.
11 / 20
நாங்க ரெடி, நீங்க ரெடியா...: வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கச் செய்யும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயராகி வருகிறது.
12 / 20
வெட்கத்தை பாரு...: உகாண்டா நாட்டு தேசிய பறவையான ‘கிரே கிரௌன்டு கிரேன்’ பறவைதான் இது. மூன்றரையடி உயரமும்,மூன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த பறவை தன் இருப்பிடத்தைவிட்டு எங்குமே மைகிரேட் ஆகாத பறவையாகும்.தனது இறகுக்குள் ஏற்பட்ட நமைச்சலை தீர்க்க தலையை உள்ளே கொண்டு போன போது கிளிக் செய்யப்பட்ட படம்.
13 / 20
கரீட்டாக்கீதா...: சென்னையில் உள்ள ஆட்டோக்கள் எல்லாம் மீட்டர் போட்டு ஓட்டப்படுகிறா என போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். மீட்டர் போட்டு ஓட்டுகின்றனர் ஆனால் இறங்கும் போது பார்த்து கொடு சார் என்று தவறாமல் கேட்கின்றனர்.இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் சில்லரை எல்லாம் கேட்டால் நீ எல்லாம் மனுஷனயா என்பது போல பார்க்கின்றனர்.
14 / 20
இதுதான் உரலாம்...: ஒரு காலத்தில் பெண்கள் இது போன்ற இட்லிக்கு மாவு அரைக்கும் கல் முன்பாக உட்கார்ந்துதான் இட்லி மாவு அரைத்தார்கள், அப்போது இட்லியும் நன்றாக இருந்தது, இட்லிமாவு அரைத்த பெண்களும் இடுப்பு வலி எதுவும் இல்லாமல் இருந்தார்கள், ஆனால் இப்போது உள்ள தலைமுறை பெண்களுக்கு இதுதான் இட்லி,தோசைக்கு மாவு அரைத்த கல் என்று பாடம் நடத்த வேண்டியிருக்கிறது.
15 / 20
நாங்க அப்படித்தான்...: ஆட்டோ ஒட்டுனர் சீட்டில் உட்கார்ந்து பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்று அறிவுறுத்தும் காவல் துறை,அப்படி மீறி பயணம் செய்பவர்களுக்கும்,பயணம் செய்ய அனுமதித்த ஆட்டோ ஒட்டுனருக்கும் அபாரதம் விதிக்கவும் செய்கிறது.அதே நேரம் இது போல தானே அந்த சட்டத்தை மீறி பயணிக்கவும் செய்கிறது.
16 / 20
பார்,பார், ‘திறந்தவெளி பார்’, பார்.: ‘டாஸ்மாக்’ தாராளமயமாக்கலுக்கு பிறகு இப்போது எல்லாம் பலர் வாய் கொப்பளிப்பதே ‘சரக்கில்’தான் என்றாகிவிட்டது. சரக் கு வாங்கும் போதும், பார்களின் உள்ளே போய் குடிக்கும் போதும் ஒரு காலத்தில் இருந்த தயக்கமெல்லாம் இப்போது போயே போச்சு. எங்கேயும் எப்போதும் குடிக்கலாம் என்றாகி விட்டது. பரபரப்பான சென்னையின் மையப்பகுதியில் நின்றபடி சரக்கு சாப்பிடும் குடிமகன்கள் இவர்கள். கூச்சமும், அச்சமும் இப்போது இவர்கள் குடிக்கும் பகுதியில் குடிக்காமல் நடமாடுபவர்களுக்கு மட்டும்தான்.
17 / 20
வாங்கண்ணா,வணக்குமுண்ணா...: சகோதரிகள் தங்கள் சகோதரர்களிடம் ரக்ஷா பந்தன் கயிறு கட்டிக்கொள்ளும் வடமாநில விழாவின் தொடர்ச்சியாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கையில் ரக்ஷாபந்தன் கயிறுகட்டும் சகோதரி இவர்.
18 / 20
ராகுலுக்கு மூட்டுவலியோ?: ராஜீவின் 69வது பிறந்த தினவிழாவினை முன்னிட்டு டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட காங்.பொதுச்செயலாளர் ராகுல்,தன்னைவிட வயதில் மூத்தவரும், ஜனாதிபதியுமான பிரணாப்முகர்ஜி தரையில் உட்கார்ந்து இருக்க, இவர் ஒரு திண்டின் மீது உட்கார்ந்து இருந்தார்,ஒரு வேளை தரையில் சம்மணமிட்டு உட்காரமுடியாத அளவிற்கு மூட்டுவலி போன்ற பிரச்னையாக இருக்குமோ?
19 / 20
இது இப்போ...: முன்னாடியெல்லாம் தியேட்டரில் சினிமா வரும் பிறகு விமர்சனம் வரும் பிறகு சி.டி.,வரும் அப்புறம் ஆன் லைனில் படம் வரும் ஆனால் தலைவ படத்தைப் பொறுத்தவரை ஆன் லைனில் வந்துவிட்டது,சி.டி.,வடிவில் குவிந்து விட்டது,விமர்சனங்களும் வந்து முடிந்துவிட்டது,ஆனால் படம் மட்டும் தமிழக தியேட்டருக்கு இன்னும் வரக்காணோம்.
20 / 20
பதை பதைக்காதீங்க...: திமுக தலைவர் கருணாநிதி தலைவா படத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க அனுமதியில்லையா,‘என்ன கொடுமை சரவணா’ என்ற பாணியில் வருத்தப்பட்டுவிட்டு தனது மனது பதைபதைப்பதாக சொல்லியுள்ளார்.தயாரிப்பாளர் நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரியில் இருப்பதால் ஒரு வேளை மனமிரங்கி படத்தை ஒடச்செய்ய ஆட்சியாளர்கள் முன்வந்தாலும் கருணாநிதியின் அறிக்கையால் எரிச்சலுற்று அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிடப்போறாங்க.
Advertisement