போட்டூன்

18-Dec-2012
1 / 19
மொபைலு வாங்கலியோ மொபைலு...: எல்லா விலைவாசிகளும் ஏறிக்கொண்டே போகிறது என்று கவலைப்படும் மகாஜனங்களுக்கு ஒரே ஆறுதல், இப்போது வித,விதமான மொபைல் போன்கள் எல்லாம் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.பேசுவதற்கும்,பேசுவதை கேட்பதற்கும் என்று இருந்த மொபைல் போன்களில், இப்போது அனைத்து வசதிகளும் வந்துவிட்டதால்‘மொபைல் இல்லார்க்கு இவ்வுலகும் இல்லை’ என்ற நிலை நிலவுகிறது,போகிற போக்கில் தக்காளி,உருளைக்கிழங்கு போன்று தள்ளுவண்டியில் வைத்து கிலோ கணக்கில் மொபைலை விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதையே இந்த கார்ட்டூன் விளக்குகிறது.கார்ட்டூன்:விஷ்ணு.நீங்களும் இது போன்ற கார்ட்டூன்களை வரைந்து அனுப்பலாம்.,கார்ட்டூன் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் சொந்த சரக்காக இருக்கட்டும்.நன்றி!
2 / 19
விட்டு வைக்கவில்லை...: தென் கொரியாவைச் சேர்ந்த பாப் பாடகர் ஜே சாங்க் என்ற பாடகரால் சமீபத்தில் பாடப்பட்டு மிகவும் பிரபலமாகி வரும் பாடல் இது. இதுவரை யூ ட்யூப்பில் மட்டும் இந்த பாடலை 120 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) மக்கள் ரசித்து உள்ளார்கள் என்கிறது புள்ளிவிவரம். அநேகமாக இதுவரை அதிகம் பேரால் உலகம் முழுவதும் பார்த்து ரசிக்கப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும். இந்த பாடலின் வீச்சானது யாரையும் விட்டு வைக்கவில்லை என்பதைத்தான் இந்த கார்ட்டூன் நகைச்சுவையாக சொல்கிறது. கார்ட்டூன்: விஷ்ணு.
3 / 19
சௌக்கியமா ‘பாதர்’.,?: அடியாத பிள்ளை படியாது என்பது அந்தக்காலம். இப்போது பிள்ளையை அடிக்க வேண்டாம் லேசாக திட்டினாலே கோர்ட்டிற்கு போய்விடுவார்கள் போல. நார்வே நாட்டில் அப்பா அடிக்கிறார் என்று கோர்ட்டிற்கு போன பள்ளிக்குழந்தைக்கு ஆதரவாக, இந்தியாவைச் சேர்ந்த பெற்றோரை ஒன்றரை வருடம் ஜெயிலில் தள்ளிவிட்டது அந்நாட்டு அரசாங்கம். நிலைமை இப்படியே போனால் பெற்றோர்களைக்கண்டு பிள்ளைகளை பயந்த காலம் போய், பிள்ளைகளைக்கண்டு பெற்றோர் பயப்படும் காலம் வந்துவிடும் என்பதையே இந்த கார்ட்டூன் சுட்டிக்காட்டுகிறது. கார்ட்டூன்: விஷ்ணு.வாசகர்களே, கார்ட்டூன் வரையும் ஆர்வலர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த தளத்தில் உங்களது கார்ட்டூன்களை மட்டுமே அனுப்பி வைக்கவும். வேறொரு இதழில் வெளி வந்த கார்டூனை பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் தனது கார்ட்டூன் போல தீனா என்ற பெயரில் அனுப்ப அது பிரசுரமும் ஆகிவிட்டது. இது குறித்து நமது கவனத்திற்கு வந்த போது வருத்தம் ஏற்பட்டுவிட்டது. மற்றவர்களின் உழைப்பை திருடியதற்கு சமமான விஷயமே இது. ஆகவே இது போன்ற திருட்டை ஒரு போதும் எந்த வாசகரும் செய்ய வேண்டாம். சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை. ஆனால் அந்த கார்ட்டூன் உங்கள் சொந்த சரக்காக இருக்கட்டும். நன்றி!
4 / 19
அப்புறம் எதுக்கு ரயில்ல வரணும்.?: எப்போதுமே முதியவர்களுக்கும்,எளியவர்களுக்கும் ரயில் பயணமே ஏற்றதானது.,ஆனால் இப்போது கட்டாய அடையாள அட்டையால் ரயில் பயணம் எளியவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடுமோ? என்ற நிலை ஏற்பட்டுள்ளதை நகைச்சுவையாக சொல்லும் கார்ட்டூன் இது.ரயில் பரிசோதகர் டிக்கெட் இல்லாவிட்டால் கூட விட்டுவிடுவார் ,ஆனால் அடையாள அட்டை இல்லாவிட்டால் விடமாட்டார் போல அடையாள அட்டை இல்லாமல் முன் பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணி கிடைத்துவிட்டால், இப்போது எல்லாம் பரிசோதகர்களுக்கு ‘கொண்டாட்டம்’ என்கின்றனர் திண்டாடிப்போன பயணிகள்.கார்ட்டூன்:விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து அனுப்பலாம்.கடந்த முறை இடம் பெற்ற கார்ட்டூன் ஏற்கனவே வேறு ஒரு இதழில் பிரசுரமாகியுள்ளது என்று ஓரு வாசகர் குறிப்பிட்டு இருந்தார்.ஆகவே ஏற்கனவே பிரசுரமான கார்ட்டூன்களை திரும்ப அனுப்ப வேண்டாம்.இந்த பகுதிக்கு என பிரேத்யேகமாக வரைந்து அனுப்பவும்.நன்றி!
5 / 19
சுவிட்ச் பாக்ஸ்க்கு அஞ்சலி?: தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டை கிண்டலடிப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட்,அதை வாசகர் சசிகுமார் அவருக்கு தெரிந்த மொழியில் இங்கே கார்ட்டூனாக வெளிப்படுத்தி உள்ளார்.கார்ட்டூன்:பி.சசிக்குமார்.கார்ட்டூன் வரைவது என்பது தனிக்கலை அவ்வளவு சீக்கிரம் யாருக்கு கைவந்துவிடாது,இதனால் வாசகர்கள் அனுப்பும் கார்ட்டூன்கள் சுமாராகவே இருந்தாலும் ,அவர்களது முயற்சியை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பகுதியில் சுமாரான கார்ட்டூன்களும் பிரசுரமாகிறது.ஆகவே வாசகர்கள் தங்களது கார்ட்டூன் வரையும் திறமையை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும், இல்லையெனில் தகுதி அடிப்படையில் கார்ட்டூன்கள் இடம் பெறுவது தவிர்க்கப்பட்டுவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.நன்றி!
6 / 19
எதில் வளர்ச்சி: காங்., பொதுச்செயலாளர் ராகுல் தற்போது போகும் இடங்களில் எல்லாம் காங்., ஆட்சியில் நாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்று பேசி வருகிறார். எதில் வளர்ச்சி கண்டுள்ளது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. அது அவரவர் கருத்து சுதந்திரம். நமது வாசகர் ஒருவருக்கு தோன்றிய கருத்து இங்கே கார்ட்டூனாகியுள்ளது.கார்ட்டூன்: வீரா
7 / 19
நல்லவன்: மும்பையில் பால் தாக்கரே இறந்ததையொட்டி கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டிருந்ததால் வெறுப்படைந்த ஒரு பெண் அதை விமர்சனம் செய்திருந்தார்.,அந்த விமர்சனத்தை அவரது தோழி ‘லைக்’ கொடுத்திருந்தார்.இதற்காக இருவரையும் போலீசார் கைது செய்து ரொம்பவே கேவலப்படுத்திவிட்டனர்.இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்ற குரல் நாடு முழுவதும் எதிரொலித்ததுடன்,கைது சம்பவத்தைக் கண்டித்தும் களத்தில் குதித்தனர்.பெண்களை தேவையின்றி கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை என்று ஆறுதலாக செய்தி வந்துகொண்டிருந்தாலும், அந்த பெண்கள் பட்ட அவமானத்திற்கு ஈடேது.இனியாவது உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் போலீசார் இருந்தால் சரி.
8 / 19
இது ‘மெகா’ தீபமுங்க...: நாட்டு நடப்பை எதிரொலிக்கும் வகையில் வரையப்படும் கார்ட்டூனில் எப்போதுமே கிண்டலும், கேலியும் தூக்கி நிற்கும். கொஞ்சம் வார்த்தைகளையும் அழகாக கையாண்டு விட்டால் அருமையான நகைச்சுவைமிக்க கார்ட்டூன் தயாராகிவிடும். கார்ட்டூன்: சசி. நீங்களும் இதுபோன்ற கார்ட்டூன் வரைந்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
9 / 19
துண்டக்காணோம்... துணியக்காணோம்...: இந்தியாவில் தூக்கு தண்டனை கொடுப்பது என்பதே மிகவும் அரிதான விஷயம். அனைத்து கோர்ட்டுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டு பின் ஜனாதிபதி வரை சென்று தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அதற்குள் கைதி வயதாகி தானே செத்துவிடக்கூடிய நிலையும் உண்டு. இருந்தாலும் தூக்கு தண்டனை கூடாது என்று அவ்வப்போது மனித ஆர்வலர்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் மும்பை சம்பவம் தொடர்பாக கசாப்பிற்கு தூக்கு தண்டனை கொடுத்ததைக் கண்டித்து, இந்தியர்களை கொல்வோம் என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இங்குள்ள மனித ஆர்வலர்களின் தூக்கு தண்டனை எதிர்ப்பு கோஷம் வலுவிழந்துள்ளது என்பதை விளக்கும் வகையில் அழகாக இந்த கார்ட்டூன் வரையப்பட்டு உள்ளது. கார்ட்டூன்: நீச்சல்காரன்.
10 / 19
முடியாது...முடியவே முடியாது...: தமிழகம் தன்னைச் சுற்றியுள்ள மாநிலங்களை நம்பியே உள்ளது.,இது தெரிந்தும் அரசியல் காரணமாக பக்கத்து மாநிலங்களை வஞ்சிப்பதை, அமெரிக்காவின் கலிபோர்னியா வாழ் தமிழர் ரவிக்குமார் இங்கே கடுமையான மனவலியுடன் கார்ட்டூனாக்கியுள்ளார். கார்ட்டூன்:கலிபோர்னியா,ரவிக்குமார்.
11 / 19
நாம எவ்வளவோ தேவலாம்..: பஸ்ஸில் பயணம் செய்வதே இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பில்லாத பயணமாகிவிட்டது.இந்த நிலையில் பஸ் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்பவர்களை என்னவென்று சொல்வது.,பக்கத்து மரத்தில் தொங்கும் குரங்கு நாமே எவ்வளவோ தேவலாம் என்று எண்ணும் நிலை உண்டாகிவிட்டது. கார்ட்டூன்:நீச்சல்காரன்.
12 / 19
கவனியுங்க கேப்டன்...: ஏக மெஜாரிட்டியுடன் அதிமுக ஆட்சியில் அமர்ந்துள்ளதை அடுத்து அரசியலில் பெரிதாக சுவராசியம் ஏதுமில்லாமல் இருந்தது.,திடீரென தேமுதிக எம்எல்ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததை அடுத்து அரசியல் கொஞ்சம் சூடுபிடித்துள்ளது.இவர்கள் போய் சேர்ந்து அதிமுகவிற்கு ஏதும் ஆகப்போவதில்லை,ஆனாலும் எதிராளி பலவீனமானல் சந்தோஷம் என்ற நிலைதான் இங்கே.கார்ட்டூன்:புதுவை மலர்சூர்யா.
13 / 19
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...: தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போது மின்சாரம் கொடுத்த மத்திய அரசு, தற்போது தர மறுக்கும் அரசியலை நையாண்டி செய்து வரையப்பட்ட கார்ட்டூன். கார்ட்டூன்: சந்தோஷ் கோபால்
14 / 19
இது நல்லாயிருக்கே....: கார்ட்டூன்:பி.சசிகுமார்: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு மக்களை எப்படியெல்லாம் யோசிக்கவைத்துள்ளது என்பதற்கு இந்த கார்ட்டூன் ஒரு உதாரணம்;எல்லாம் சரி இந்த சிஸ்டப்படி விளக்கு எரியவிட்டால் பெட்ரோல் பட்ஜெட் எகிறுமே,அதுனாலே சைக்கிள் டைனமோ விளக்கு வெளிச்சத்தில் சாப்பிடுவது போல அடுத்த படத்தை போடுங்க மிஸ்டர் சசிகுமார்.
15 / 19
இருட்டா இருக்க இடத்துல இறக்கு...: கார்ட்டூன்: ஆ.பூபதிராஜா.: துன்பம் வரும் வேளையில சிரியுங்க என்றார் வள்ளுவர் பெருந்தகை,அது இந்த மின்வெட்டு நேரத்தில்தான் சரியாக இருக்கிறது.எவ்வளவு நாள்தான் புலம்புவது.இப்போது இதை நகைச்சுவையாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.அதன் ஒரு வடிவம்தான் ஆ.பூபதிராஜாவின் கார்ட்டூன்.
16 / 19
பேப்பர்லதான் சட்டம் இருக்கு... வாசகர் கார்ட்டூன்: முனி ஆதித்யா : ஏழை,எளிய மக்களுக்கு எத்னையோ சட்ட திட்டங்களை மத்திய,மாநில அரசுகள் அறிவித்துக்கொண்டுதான் உள்ளன.,ஆனால் அவைகள் எல்லாம் பேப்பரில் மட்டுமே இருக்கின்றது என்ற வேதனையை பிரபல கார்ட்டூனிஸ்ட் முனி ஆதித்யா கார்ட்டூனாக்கி அனுப்பியுள்ளார்.
17 / 19
நல்லதா போச்சு...: கார்ட்டூன்:ரவிகுமார்: திமுக தலைவர் கருணாநிதி எது செஞ்சாலும் அது சிக்கலில்தான் போய்முடிகிறது.,“திராவிட இயக்கத்தினர் சிலரே என் முன் குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு வருகின்றனர்” என மறைந்து போன முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனை ஒரு முறை ஜாடையாக கிண்டலடித்தார்,அவருக்கு பக்கத்திலேயே பெரிய குங்குமப்பொட்டுடன் நின்ற கருணாநிதியின் மணைவி தயாளு,‘ அப்ப நாம திராவிடப்பராம்பரியம் இல்லையா?’ என திகைத்துப்போய் நின்றார்“நான் நிறைய உழைத்துவிட்டதன் காரணமாக நின்றுகொண்டு பேசமுடியவில்லை உட்கார்ந்துகொண்டு பேசுகிறேன்” என்றார் ஒரு மேடையில், அவரைவிட வயதான அன்பழகனோ, அப்ப நாம உழைக்கலைபோலும் என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு நின்றுகொண்டு பேசினார். அதே போல மஞ்சள் துண்டு போடும்போது எனக்கு பிடிச்சுருக்கு போட்டுக்கிறேன் என தைரியமாக சொல்லாமல் கழுத்துவலிக்கு டாக்டர் சொன்னார் அதுனால போட்டுக்கிறேன் என்றார்,ஊரில் உள்ள எந்த டாக்டரை கேட்டாலும் கழுத்து வலிக்கு இப்படி ஒரு மருந்து அதுவும் மஞ்சள் கலரில் இருப்பதாக தெரியவில்லை என்றனர். இப்போது கருப்பு சட்டை அணிந்து கொண்டுள்ளார்.,நியாயப்படி பார்த்தால் கருப்பு சட்டை அணிந்த நிலையில் பரிதாபம் வரவேண்டும் ஆனால் வாசகர்களுக்கும்,பொதுமக்களுக்கும் கேலியும் கிண்டலும்தான் பொங்கிவருகிறது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஐ.டி.,என்ஜீனியர் ரவிகுமாருக்கு தோன்றிய காமெடி இங்கே நல்ல கார்ட்டூனாகியுள்ளது. கார்ட்டூன்:ரவிகுமார்.
18 / 19
விளங்கவேண்டியவர்களுக்கு விளங்குமா?- கார்ட்டூன்: மதுரை ஜெயராமன்: விளங்கவேண்டியவர்களுக்கு விளங்குமா?- கார்ட்டூன்: மதுரை ஜெயராமன்

நமது உயிர் ஆதாரமான நீர் நிலைகளை எல்லாம் ‘பிளாட்’ போட்டு விற்றுவிட்டோம், மணலை சுரண்டி, சுரண்டியே ஈரப்பதம் தங்காமல் செய்துவிட்டோம், கழிவு நீரைக் கலந்து ஆறுகளை சாக்கடையாக்கிவிட்டோம், குப்பைகளை கொட்டி நகரின் மிகப்பெரும் திறந்தவெளி குப்பைக்கிடங்காக மாற்றிவிட்டோம்


இப்படி நமது ஆறுகளுக்கு எதிராக எவ்வளவு கேடுகளை ஏற்படுத்த முடியுமோ, அவ்வளவு கேடுகளையும் ஏற்படுத்திவிட்டு, நீர் நிலைகளை கெடுத்து குட்டி சுவராக்கிவிட்டு, பிறகு நீர் ஆதாரம் கெட்டுவிட்டது என்று புலம்புவதும்,அண்டை மாநிலத்தில் தண்ணீர் தர கெஞ்சுவதும் உண்மையில் அவலமான நிலையே என்பதை தனது கார்ட்டூன் மூலம் விளக்கியுள்ளார் இவர்.

விளங்க வேண்டியவர்களுக்கு விளங்குமா?


19 / 19
வா...! ஒன்னும் பண்ணாது...! : கார்ட்டூன்: ஸ்ரீராம் ராகவன்: துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று வள்ளுவர் பெருந்தகை சொல்லி வைத்திருக்கிறார். இன்றைய தேதிக்கு தமிழகத்தில் அதிகபட்ச துன்பம் என்பது மின்வெட்டுதான்.துணி துவைக்க வேண்டும் என்றாலும், தூக்கம் வரவேண்டும் என்றாலும் மின்சாரத்தின் துணை இல்லாமல் நடக்காது என்ற நிலைக்கு பழகிவிட்டோம். இந்த நிலையில் மின்சாரம் எப்போது போகும் என்ற நிலை மாறி,எப்போதாவது வரும் என்ற நிலை உள்ளது.இந்த நிலமையை அழகாக இந்த காக்கைகளை வைத்து வரைந்து அனுப்பியுள்ளவரை பாராட்டத்தான் வேண்டும்.
Advertisement