போட்டூன்

20-Apr-2013
1 / 20
ஒண்ணும் அவசரமில்லீங்க...: அதிமுக ஆட்சியில் நத்தம் விஸ்வநாதன் மின்சாரத்துறை அமைச்சரானதில் இருந்து சந்தித்துவரும் ஒரே பிரச்னை மின்வெட்டுதான்,அவர் சொல்லிவரும் ஒரே பதிலும் விரைவில் பிரச்னை தீர்க்கப்படும் என்பதுதான்.,இந்த ஜீன் மாதத்திற்குள் என்று அடித்து சொல்லிவந்தவர், நடந்துவரும் சட்டமன்ற தொடரின் போது ஜீன் மாதம் சிரமம்தான், அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்க்கப்படும் என்று இப்போது சொல்லிவருகிறார்.,பிள்ளைகளுக்கு தேர்வு முடிஞ்சு போச்சு இனி என்ன அவசரம் மெதுவாப்பார்த்து செய்யுங்கண்ணா...
2 / 20
வாங்க பாஸ் நாம அப்படியா பழகினோம்...: பல லட்சம் கோடி நாட்டுக்கு நஷ்டம் ஏற்படக்காரணமான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைதாகி சிறை சென்று, தற்போது ஜாமீனில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவே எல்லாவற்றுக்கும் பொறுப்பு.,நடந்த விஷயத்தில் பிரதமருக்கும்,அமைச்சர் சிதம்பரத்திற்கும் பொறுப்பு இல்லை என்று பார்லிமெண்ட கமிட்டி கூறியதை அடுத்து, இதுவரை கூட்டணி தர்மத்தை(!)முன்னிட்டு அமைதியாக இருந்த ராஜா தற்போது பொங்கியெழுந்துள்ளார்,நடந்த விஷயம் அனைத்தும் பிரதமருக்கும்,சிதம்பரத்திற்கும் தெரியும், இது தொடர்பான ஆதாரம் என்னிடம் உள்ளது,இதை கோர்ட்டில் தாக்கல் செய்வேன் என்று சொல்லியுள்ளார்.‘வின்னர்’ படத்தில் வடிவேலுவை மாட்டிவிடும் திருடன் ஒருவன் “வாங்க வாங்க பாஸ் நமக்கு அடிவாங்குறது புதுசா...நாம அப்படியா பழகிருக்கோம்...இப்ப விட்டுட்டு போறீங்களே” என்பான்... அந்த காமெடிதான் இப்போது நினைவிற்கு வருகிறது.
3 / 20
பஞ்சர் ஒட்ட எவ்வளவுணா?: படவிளக்கம்:சென்னை எழும்பூர் தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,வும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளவருமான நல்லதம்பி தனது பழைய சைக்கிள் கடையில் உட்கார்ந்து பஞ்சர் ஒட்டுவது,காற்று அடிப்பது,சைக்கிள் ரிப்பேர் செய்வது போன்ற பழைய வேலைகளை செய்துவருகிறார்.சஸ்பெண்ட் ஆனதால் சிபாரிசு கடிதம் கொடுத்தல் போன்ற மக்கள் பணியை செய்யமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கு...காசு வாங்க காத்து அடியுங்கண்ணா,அதுவும் மக்கள் தொண்டுதான்...
4 / 20
நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு...: மோடியே அடுத்த பிரதமர் என்ற ரேஞ்சுக்கு எங்கும் அவர் புகழ் பாடிக்கொண்டு இருக்கும் வேளையில், பா.ஜ.க.,வுடன் பல ஆண்டுகளாக கூட்டணி வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டத்தில் தற்போது ஒரு முடிவெடுத்துள்ளனர்,கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் சரியாக கடமையைச் செய்ய தவறியதால், மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கப்போவது இல்லையம் .,அப்புறம் அவரது கட்சியைச் சேர்ந்த பீகார் முதல்வரான நிதிஷ்குமாரையும் பிரதமராக பார்க்கும் எண்ணம் இல்லையாம்.,அப்புறம் யார்தான் உங்களுக்கு ஒகே என்றால், அப்புறம் பார்க்கலாம் அதுவரை அத்வானிக்கு ஒகே என்கின்றனர்.
5 / 20
உசுப்பேத்தாதீங்கப்பா...: மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் சும்மா ஊர் பக்கம் வந்தாக்கூட மேலிடத்தோட கோவிச்சுக்கிட்டு வந்துட்டாரு என்பதும், ஏதாவது பேசினால் கூட தமிழ் மாநில காங்கிரஸ் பற்றிதான் தீவிரமாக யோசிக்கிறார் என்று சொல்வதும் இப்போது வாடிக்கையாகி விட்டது. அவரும் அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லி, சொல்லி வெறுத்துப்போய் விட்டார். ஆனாலும் விடுவதாக இல்லை, த.மா.கா., சின்னமாக இருந்த சைக்கிளை அவர் போஸ்டர் மீது சாத்திவைப்பதே இப்போது சிலருக்கு வேலையாகிப் போய்விட்டது.
6 / 20
சென்னை குளியல்...: சென்னையில் மட்டும் இரண்டு மணி நேரம் தான் மின்வெட்டாமே? என்று வயிற்றெரிச்சல்படும் மற்ற ஊர்காரர்களுக்கான ஆறுதல் படம் இது. சென்னையில் தற்போது தண்ணீர் பிரச்னை கடுமையாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தண்ணீரை வீணாக்காமல் குளிப்பது எப்படி என்று கற்றுக்கொண்ட குழந்தைகள் இவர்கள். இதையே தான் பெரும்பாலான வீடுகளில் உள்ள பெரியவர்கள் முடிந்தவரை கடைபிடிக்கின்றனர். முடியாத பட்சத்தில் ‘அப்புறம்’ பார்த்துக்கொள்ளலாம் என்று குளியலை தள்ளிப்போட்டுக் கொள்கின்றனர்.
7 / 20
சித்தியானவர்...: கடந்த இரண்டு நாட்களாக சட்டசபை செய்திகள்,கிரிக்கெட் முடிவுகள் எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு, தமிழ்கூறும் நல்லுலகம் நடிகை அஞ்சலிக்கு என்னாச்சு? என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறது.,தன்னை இரண்டு பேர் கொடுமை படுத்துவதாக ஊடக நண்பர் ஒருவரிடம் அஞ்சலி விசும்பினாராம்.இதயம் வெடித்துப்போன அந்த ஊடகத்துக்காரர் கொளுத்திப்போட்டதால், இப்போது ஊரே அஞ்சலியை பார்த்தீங்களா என்று கேட்டுக்கொண்டு இருக்கிறது.அஞ்சலி சீக்கிரம் வாம்மா,நீ வந்தால்தான் மழையே வரும் போல.இந்த நிலையில் நேற்று வரை அம்மாவாக இருந்து இப்போது சித்தியாகியுள்ள பாரதிதேவியோ,‘ அஞ்சலி யார் கூட போனாரா?’ என்று தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்., ஆனாலும் பொன்முட்டையிடும் வாத்தை தேடித்தான் பார்ப்போமே என்று இப்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
8 / 20
உஷ்...அப்பாடா...: இன்னும் கொஞ்ச நாளைக்கு, அதாவது வெயில் காலம் முடியும் வரைக்கும்,சென்னையில் வாகன ஒட்டும் பெண்களின் தோற்றம் இப்படித்தான் இருக்கும்,இவர்கள் கூட கண்ணை விட்டுவிட்டார்கள்,பலர் கண்ணுக்கும் கண்ணாடி போட்டுக்கொள்வார்கள்.,அவ்வளவு வெயில், அவ்வளவு உஷ்ணம்.
9 / 20
பினிஷிங் சரியில்லையே...: கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்த்திட ‘அம்மா’வின் ஆணைக்கிணங்க நீர் மோர் பந்தல் வைத்தவர்கள் ,முதல் நாள் இளநீர் துவங்கி பழரசம் வரை கொடுத்து பரவசப்படுத்தினார்கள், கோடை முடியும்வரை இப்படியே இருப்பார்களா என்று நேற்றைய ‘போட்டூன்’ பகுதியில் கேட்டிருந்தோம்..,அந்த கேள்வியின் ஈரம்கூட இன்னும் காயவில்லை, இதோ இப்போதைய நிலை.நீர் மோர் பந்தலில் மோர் கூட இல்லை,வெறும் நீர்தான்.வெயிலை விட கொடுமையான இன்னோரு விஷயம் மக்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, டம்ளரை சங்கிலியால் கட்டிவைத்திருப்பது.
10 / 20
ஸ்டார்டிங் பலமாத்தான் இருக்கு...: இளநீர் என்ன,பழங்கள் என்ன,கேன் பழரசம் என்ன ,நீர்மோர் என்ன,தர்பூசணி என்ன என்று வாரி வாரி வழங்குவது எல்லாம் இலவமாக என்றால் நம்ப முடிகிறதா ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.கோடையை சாமாளிக்க அதிமுகவினர் நீர்மோர் பந்தல் அமையுங்கள் என்று முதல்வர் சொன்ன வார்த்தை எடுத்துக்கொண்டு, பொதுமக்களுக்கு சென்னை அதிமுகவினர் கொஞ்சம் அதிகப்படியாக கொடுத்தனர்.,ஆரம்பம் ஜோராத்தான் இருக்கும், அப்புறமில்ல இருக்கு இந்த நீர் மோர் பந்தலின் நிலை என்கின்றனர்...பார்க்கலாம்.
11 / 20
உங்களை நெருக்குவாங்களா...: திருமலை (திருப்பதி)யில் இப்போதெல்லாம் எப்போது பார்த்தாலும் திருவிழா கூட்டம் தான். முப்பது நிமிடத்தில் பார்த்து வருவதற்காக துவக்கப்பட்ட முன்னூறு ரூபாய் டிக்கெட் எடுத்தாலும் இப்போது ஆறு மணி நேரமாகி விடுகிறது. கூட்டமும் நெருக்கித்தள்ளுகிறது. பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள், அடிக்கடி பொறுமை இழந்து சத்தம் போடுகின்றனர். இதனால் திருமலைக்கு சாமிகும்பிட வந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார், வி.ஐ.பி., வழியாக செல்லாமல் பொதுமக்கள் செல்லும் வைகுந்த வாசல் வழியாக சென்று பார்த்துவிட்டு ஒண்ணும் பிரச்னை இல்லையே என்றாராம். முதல் அமைச்சராக இல்லாமல், சாதாரண பெருமாள் பக்தரா வந்து பாருங்கள் அப்ப தெரியும் நெரிசல் என்றால் என்னவென்று என்கிறார் பக்தர் ஒருவர்.
12 / 20
இது ‘ஒண்டிக்கு ஒண்டி’ கிரிக்கெட்: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன., ஏற்கனவே எழுதின விடைத்தாள்கள் ‘எங்கே?’ போகுமோ என்ற பதட்டத்துடன் தேர்வு எழுதம் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மிச்ச தேர்வுகளில் தோனியும்,சச்சினும் பாதிப்பு ஏற்படுத்தாது இருப்பார்களாக... இன்னும் கொஞ்ச நாளைக்கு வயது வித்தியாசமில்லாமல் ஆளாளுக்கு கிரிக்கெட் பேட்டை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தெரிந்த முறையில் கிரிக்கெட் விளையாடி (ரண)களம் காண இருக்கின்றனர். அதன் எதிரொலியே இந்த கார்ட்டூன்கார்ட்டூன்: விஷ்ணுநீங்களும் இது போன்ற கார்ட்டூன் வரைந்து கீழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நீங்கள் அனுப்பும் கார்ட்டூன் சுமாராக இருந்தால் கூட பராவாயில்லை ஆனால் உங்களுக்கு சொந்தமானதாக இருக்கட்டும். நன்றி!
13 / 20
இது ஐ.பி.எல்., கிரிக்கெட் கட்டிங்...: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதையொட்டி இங்குள்ள ரசிகர் ஒருவர் தனது தலைமுடியை ஐ.பி.எல்., கிரிக்கெட்டை வரவேற்கும் விதத்தில் வெட்டியுள்ளார். இதற்காக இவருக்கு சாதாரணமாக முடிவெட்டுவதை விட கூடுதலாக இரண்டு மணி நேரம் பிடித்ததாம். கிரிக்கெட் சீசன் முடியும் வரை இதில் அவ்வப்போது மாற்றம் இருக்கும் என்று வேறு பயமுறுத்துகிறார். ஐ.பி.எல்., கிரிக்கெட் விளையாடி பணத்தையும், புகழையும் அள்ளோ, அள்ளு என்று அள்ளப்போகும் எந்த நாட்டு விளையாட்டு வீரருக்கும் இல்லாத அளவு அக்கறை கொண்டுள்ள, இந்த தன்னிகரில்லாத்தமிழனை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் பாராட்டலாம். இந்த படத்தை நமக்கு மெயிலில் அனுப்பிய நண்பர் எஸ்.கனகராஜ்க்கு தனி பாராட்டுக்கள்.
14 / 20
கொலவெறிங்கிறது இதுதானோ...: அருள்வந்தால் குறைந்தபட்சமாக இரண்டு வார்த்தை சொல்லலாம், அதிக பட்சமாக திருநீறை எடுத்து வீசலாம்... ஆனால் இதென்ன, எல்லாரும் பார்க்கும் படியாக, குழந்தைகள் பயப்படும்படியாக, உயிருள்ள ஒரு ஆட்டை பிடிச்சு, அதன் குரல்வளையை கடிச்சு, ரத்தம் குடிச்சு...பார்க்க பெரியவகளான நமக்கே பயமாயிருக்கே...இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இந்த மாதிரி அருளாளிகளோட பார்வை பாய்ச்சல் எல்லாம் அப்பிராணிகளான ஆடு,கோழிகள் மீதுதான் இருக்கும்... காட்டுக்குள்ளே போயி கரடி, புலிகிட்ட இந்த வீரத்தை காண்பிச்சா பரவாயில்லை,செய்வாகளா?
15 / 20
அஜீத்தை பாத்துட்டேன்க்கா...: படவிளக்கம்: இலங்கை தமிழர் பிரச்னைக்காக எல்லாரும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், போராட்டம் பண்ணிட்டாங்க, நாம மட்டும் சும்மாயிருக்கக்கூடாது என்று எண்ணி சென்னையில் நடிகர், நடிகை உண்ணாவிரதம் இருந்தார்கள். நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருந்தால் அந்த விஷயம் பெரிதாக பேசப்பட வேண்டும் ஆனால் அப்படி நடந்தததாக தெரியவில்லை. எல்லோரும் வந்து வேடிக்கை பார்த்து சிரித்தனர், பதிலுக்கு நடிகர்களும் ரசிகர்களைப்பார்த்து கையாட்டி சிரித்தனர். பாதுகாப்பிற்கு வந்த பெண் போலீஸ் ஒருவர், நடிகர் அஜீத்தைப்பார்த்த சந்தோஷத்தில் மொபைலில் பகிர்ந்து கொள்கிறார்.
16 / 20
எங்கேய்யா போனீங்க...: பா.ஜ.,கவின் டில்லி முகாமில் இருந்து வரும் தகவல்கள் எல்லாம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கட்டியங்கூறுகின்றன.,நல்லது.அவர் ,முக்கிய முடிவுகளை எடுக்கும் பார்லிமெண்ட குழு உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.சந்தோஷம்.பிரதமர் வேட்பாளராக தடையின்றி முன்னேறி வருகிறார்,நடக்கட்டும்.,இவருக்கு பிறகு கொஞ்ச நாள் விலகியிருந்து பழையபடி சேர்ந்த உமாபாரதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.நாங்களும் நேரு குடும்பத்துல ஒரு ஆளை வச்சிருக்கிறோம்ல என்று அந்த பக்கம் ராகுல் என்றால் இந்த பக்கம் வருண் என்று அவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து உள்ளனர்.எல்லாம் சரி, ரொம்ப காலமா கட்சியின் சீனியரா இருக்கும் வெங்கய்யா நாயுடுவிற்கு சொல்லிக்கொள்ளும்படியா எதுவும் முக்கியவத்துவம் இல்லையா என்று சாமன்ய பார்வையாளர்கள் பக்கம் இருந்து கேள்வி வருகிறதே அதற்கு என்ன பதில்.
17 / 20
யார் எனத்தெரிகிறதா..: சவுக்கு கட்டைக்கு பின்னால்,நெருக்கி அடித்துக்கொண்டு,கலைந்த தலையுடன்,கசங்கிய உடையுடன் காணப்படும் இந்த இளைஞர்கள் யார் என நினைக்கிறீர்கள்?அம்மாவிற்கு உதவியாக நியாயவிலைக்கடையில் மண்ணெண்ணை,அரிசி வாங்க நிற்கிறார்கள் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள்,அப்படிப்பட்ட தப்பை(!)ஒரு காலத்திலும் இவர்கள் செய்யமாட்டார்கள்.நடக்குமா...நடக்காதா என்றே தெரியாத சென்னை ஐபிஎல் போட்டியைக்காண, ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலான டிக்கெட்டை எடுக்க போட்டிபோட்டுக்கொண்டு முதல் நாள் இரவிலிருந்தே வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள்.இவர்களை எங்கேயாவது ,எப்போதாவது பஸ் டிக்கெட் விலை உயர்வு,பால் விலை உயர்வு போன்றவைகளை கண்டித்து நடக்கும் போராட்டங்களில் பார்த்தால், அந்த இடத்திலேயே நிற்காதே ‘ஒடிப்போ’ என்று சொல்லி விரட்டிவிடுங்கள்.கருத்து:எம்ஆர்.நீங்களும் இது போல போட்டூன்,கார்ட்டூன் போன்றவைகளை கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
18 / 20
அம்புட்டு கோவாமாப்பு...: இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக அமைதியாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்கள், தற்போது காங்கிரஸ் மீது கடுமையான கோபம் கொண்டுள்ளனர்.இவர்களது கோபத்திற்கு திருச்சியில் காங். கொடிகள்,தோரணங்கள் முதல் பலியானது என்றால் அடுத்து சென்னை சத்யமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த தமிழக காங்.தலைவர் ஞானதேசிகன் படம் இரண்டவாதாக பலியாகி உள்ளது.பேனரில் உள்ள படத்தை இரண்டாக கிழித்திருப்பதைப் பார்த்தால் ,ரொம்பவே கோபமாக இருக்கிறார்கள் என்றே படுகிறது.கருத்து :எம்ஆர்.
19 / 20
இது தப்புங்கய்யா...: ரஜினி நடித்த சிவாஜி படத்தில்,நடுவர் பாப்பையா ஒரு டயலாக் விடுவார்,அங்க இல்லைன்னா என்னா?எங்கிட்ட இரண்டு பொண்ணு இருக்கு,வாங்க பழகிப்பாருங்க என்று கூப்பிடுவார்.அந்த பாணியில் சென்னையில் விளையாட முடியாட்டி என்னா? எங்க கேரள ஸ்டேட்ல இரண்டு மைதானம் ரெடியாயிருக்கு ,வந்து விளையாடுங்க என்று ஐபிஎல் கிரிக்கெட் அணியை கூப்பிட்டுள்ளார் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி.‘அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்ப ரெடியாகும்’ என்ற கதையா பக்கத்து மாநிலமா இருந்தும், தமிழ்நாட்டோட உணர்வு புரிஞ்சுக்கலீயே இந்த உம்மன் சாண்டிகடைசிக்கட்ட போரின் போது கொத்து,கொத்தாக அப்பாவி தமிழ் மக்களை சுட்டுக்கொன்ற இலங்கைக்கு தரும் கண்டனமாகத்தானே இங்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை உணரவேண்டாமா,சக மாநிலமாக அல்ல சக மனிதனின் சங்கடமாகவாவது உணர்ந்திருந்தால் நெருக்கம் கூடியிருக்குமே.அரசியல் போகும் போக்கை பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.கருத்து:எம்ஆர்.
20 / 20
நான் ‘சும்மா’தானே விளையாடுறேன்...: இலங்கை வீரர்கள் சென்னை ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட தடை விதித்து இருப்பதால் ரொம்பவும் கவலைப்பட்டு இருப்பவர் இலங்கை அணியைச் சேர்ந்த முரளிதரன்தான்.சென்னை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லையே என்று ரொம்பவே விசனப்பட்டு உள்ளாராம். இவரது கவலை எல்லாம் தமிழ்நாட்டில் விளையாடுவதன் மூலம் வரும் வருமானம் போய்விடுமே என்பதுதான்.,ஐயா முரளிதரன் அவர்களே, எத்தனை கோடி சம்பாதித்தாலும் அந்த சம்பாத்தியத்தில் இருந்து, பத்து சதவீதம் வீடிழந்த யாழ்ப்பாண தமிழர்களுக்கும்,பத்து சதவீதம் படிக்கமுடியாத வவுனியா தமிழ் மாணவர்களுக்கும் தரப்போறீங்களா? இல்லீயே...அப்புறம் எதுக்கு தமிழ்நாட்டில் விளையாட முடியவில்லையே என்று ‘சீன்’ போடுகிறீர்கள்..தமிழ் உணர்வு இருந்தால் இலங்கை அணியில் இருந்து விலகிகாட்டுங்கள் பிறகு உங்கள் பேச்சை செவிமடுக்கலாம்.கருத்து: எம்ஆர்.