அறிமுகம்
ஒரு யுனானி மருத்துவன் போலிருக்கும்
அவனை எங்கோ பார்த்திருக்கிறேன்
திரையரங்க இடைவேளையில்
சிறுநீர் கழிக்கும்போதோ
மாநகர பேருந்தில் உரசிச் சென்றவனாகவோ
நெடுஞ்சாலை உணவகமொன்றில்
எதிரமர்ந்து உண்டவனாகவோ
இரண்டாம் சந்திப்புக்கு நிச்சயமற்ற
ஏதோ ஓர் இடத்தில் தான்
பார்த்திருக்கக்கூடும்
யாரென கேட்கவும் அச்சம்
எங்கோ பார்த்த மாதிரியிருக்கும் முகத்தோடு
எப்போதும் பார்த்திராத சிலரை
பார்த்திருக்கிறேன்.
மேலும்
பார்த்த மாதிரி இருக்கிறதே என்பது
சிறந்த உரையாடலுக்கான துவக்கமான
முன் அனுபவம் இல்லை.
பார்த்தும் பார்க்காதது மாதிரி போகிற
நண்பர்களை உடைய எளியவன்
எப்படி பார்த்தது போல் இருப்பதாக கூறி
நட்பு கொள்ளக்கூடும்!
சீட்டாடும் உலகம்
எல்லோரையும்
சீட்டாடிக்கொண்டிருக்கிறது உலகம்.
தேவைப்பட்டால்
ரம்மிக்குள் வைத்து போஷிக்கவும்
பக்கபலமற்ற உதிரியெனில்
வெளிவீசவும் தயங்குவதில்லை.
தனதெதிர் உள்ள ராஜாவோ ராணியோ கூட
ஜோக்கராகி விட்டால்
கும்மாளமிடுகிறது.
தேவையில்லை எனில்
இதயங்களை தூக்கி எறிந்து விட்டு
வைரங்களை பொறுக்கும் வழக்கமுடையது.
யாரோ ஒருவரை கவிழ்த்து தான்
ஒரு வெற்றி காட்டப்படுகிறது.
-விவேகா |
|