Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

பிரபஞ்சம் தோன்றியது ; பிரச்னைகளும் தோன்றின !

சக்தி விகடன் (27.11.2008)



02.  பிரபஞ்சம் தோன்றியது ; பிரச்னைகளும் தோன்றின !

உலக மக்களின் நன்மைக்காக சுக்ராச்சாரியார் அருளிய அஷ்டஸித்தாந்த சாரம் பற்றி கடந்த சில இதழ்களில் அறிந்தோம். சரி, உலகமும் உயிர்களும் எப்படித் தோன்றின ? இது பற்றியும் சில உண்மைகளை நாம் இங்கே அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
பிரளயத்தின்போது பிரபஞ்சம் அனைத்தும் ஒடுங்கிய நிலையில், எங்கு பார்த்தாலும் இருள்மயமாகத் திகழ்ந்தது. உலகமே இருள் சூழ்ந்து சூனியமாகக் காணப்பட்ட காலம்.  உலகம் மீண்டும் பழையபடி இயங்க வேண்டும் என்று பரம தயாள மூர்த்தியான பரமேஸ்வரன் திருவுள்ளம் கொண்டார்.
அவ்வேளையில் வானத்திலே ஒரு நெருப்புக்கோளம் வட்டமிட்டபடி இருந்தது.

அந்த நெருப்புக் கோளத்தின் பெயர் நெபுலா என்பதாகும்.நெபுலா என்னும் அந்நெருப்புக் கோளத்தை, பரமேஸ்வரன் சூரியன்,சந்திரன், அக்னி என்ற தமது மூன்று திருக்கண்களால் நோக்கினார். நெபுலாவை தம் மூவிழிகளால் நோக்கிய அண்ணல், அதே வேளையில் தம் இடப்பாகத்தே அமர்ந்திருந்த லோக சம்ரக்ஷண நாயகியாம் உமா தேவியைப் பார்த்து பொருள் பொதிந்த புன்னகை புரிய, புன்னகையின் பொருள் புரிந்தாற்போல், அம்பிகை தமக்கே உரித்தான ஜ்வாலா ( நெருப்பு ) சக்தியை நெபுலா என்கின்ற அந்தக் கோளுக்கு வழங்கினார். அதனால் நெபுலாவின் வெப்ப சக்தி உஷ்ண சக்தியாக மாறி, அதில் இருந்து ஒரு பகுதி பிளந்து வானவெளியில் விழுந்தது. விழுந்த நெபுலாவின் வெப்பம் கனன்ற பகுதியானது, தேவியின் அருளால் தொடர்ந்து பெய்த மழையினால் குளிர்ந்தது. அதுவே பூமியானது.


குளிரும், வெப்பமும் நிறைந்த தட்ப வெப்ப நிலையில் காற்றும் சேர்ந்தது.
மீன் முதலான உயிரினங்கள் தோன்றின. விலங்குகள் தோன்றின. படிப்படியான பரிணாம வளர்ச்சியில் மனித குலம் தோன்றியது. மனித குலம் வாழ்வதற்குத் தேவையான ஒளஷத மூலிகைகள், மரம், செடி, கொடிகள் போன்றனவெல்லாம் இறைவன் அருளால் தோன்றின. மனிதர்கள் விவசாயம் செய்ய அறிந்தனர். விவசாயம் செய்ய தண்ணீர் அவசியம் அல்லவா ?


எனவே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றங்கரைகளை நோக்கி மனிதர்கள் கூட்டம் கூட்டமாச் சென்றனர். இப்படியாக நதிக்கரை நாகரிகம் உருப்பெற்றது. நதிக்கரைகளில் வேளாண்மைத் தொழில் செய்து கூட்டம் கூட்டமாக வாழ்க்கை நடத்தி வந்த மனிதர்கள், தங்கள் தங்கள் கூட்டத்திற்கென்று ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், தங்களைச் சார்ந்திருக்கும் கூட்டத்தை ஓர் ஒழுங்கமைப்பில் நடத்திச் செல்ல ஆலோசனைக் குழு என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதுடன், எதிரிக் கூட்டத்தினரிடம் இருந்து தங்கள் பிரதேசத்தைக் காப்பாற்றி தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணத்தில் தங்களுக்கென்று ஒரு படையையும் உருவாக்கிக் கொண்டனர். இப்படியாக அரசன் அரசாங்கம் போன்ற அரசியல் அமைப்புகளும் தோன்றின.


தங்களைப் படைத்து நல்லபடியாக வாழ வைக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இறை வழிபாடும் தோன்றியது. இப்படியே ஒவ்வொரு கூட்டமும் தங்களுக்குள் ஒற்றுமையாகவும்,அன்பாகவும் வாழ்ந்திருந்தால் பிரபஞ்சமே ஆனந்த மயமாய் திகழ்ந்திருக்கும். ஆனால், நடந்தது என்ன ? ஒவ்வொரு கூட்டத் தலைவனும் அதாவது அரசனும், தன் பிரதேசத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருந்து மீறி, மற்றவர்களின் மண்ணிலும் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டதின் விளைவாக, எண்ணற்ற போர்கள் இந்த உலகத்தில் நடைபெறத் தொடங்கி விட்டன. ஐந்து வீடுகள் என்ன ஊசி முனையளவு இடமும் பாண்டவர்க்குக் கொடுக்க மாட்டேன் என்று துரியோதனன் கூறியதால்தானே குருஷேத்ரமே குருதியால் சிவந்தது ?! இப்படியாக நிகழ்ந்த யுத்தங்களின் விளைவு என்ன ? தர்மங்கள் மீறப்பட்டன ; அன்பு மறக்கப்பட்டது ; பண்பு நலன்கள் சிதைக்கப்பட்டன. அதர்மம் தழைத்துச் செழித்தது. இப்படியான சீர்கேடுகளில் இருந்து ஓரளவேனும் மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் என்ன வழி ?

- தரிசன உலா தொடரும்.

 

 

பிற இதழ்கள் முதல் பக்கம்
சக்தி விகடன் முதல் பக்கம்
NEXT
நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   | 



முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in