உயிர்களும், பயிர்களும் உலகில் வாழ ஆதாரமாய்
இருப்பது சூரியன் என நம் முன்னோர்கள் நம்பினர்.
எனவே, அந்த கிரகத்தை கடவுளாக வழிபட ஆரம்பித்தனர்.
நெடுங் காலமாக பூமியைத்தான், சூரியன் சுற்றி
வருகிறது என்று வானியல் அறிஞர்களும், மக்களும்
நம்பினர். சூரியன், கிழக்கு திசையில் உதித்து,
மேற்கு திசை நோக்கி நகர்வது போல தெரிந்ததால்
இவ்வாறு நினைக்கவேண்டியதாயிற்று. ஆனால், அது ஒரே
இடத்தில் நிலைத்திருக்கும் கிரகம் என்பதும், ஒரு
வாகனத்தில் சென்றால் சாலையோரம் நிற்கும் மரங்கள்
எப்படி ஓடுவது போல காட்சி தருமோ அதுபோல, பூமி
சூரியனைச் சுற்றி வருவதால் சூரியன் நகர்வது போன்ற
தோற்றம் ஏற்பட்டதை 16ம் நூற்றாண்டில் நிக்கோலஸ்
கோபர்நிகஸ் என்பவர் கண்டுபிடித்தார். கலிலியோ
உள்ளிட்ட வானியல் அறிஞர்கள் கோபர்நிகசின் வாதத்தை
ஒப்புக்கொண்டனர். பிற்காலத்தில் இது உறுதி
செய்யப்பட்டது. சூரியனும் ஒரு நட்சத்திரம்தான்.
நமக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமும் அதுதான்.