05. ஞாபகம் வருதே...ஞாபகம்
வருதே... குதூகலமாக பொங்கல் கொண்டாடியது
பொங்கல் பண்டிகை... சங்ககாலம் தொட்டு தமிழர்களின்
உணர்வோடு ஒன்றியது. நன்றி உணர்வையும், கூட்டு
குடும்ப கலாச்சாரத்தையும் உலகிற்கு பிரதிபலிக்கும்
பண்டிகை இது. இந்த விழா விவசாயத்திற்கு ஒளி தந்த
சூரியனுக்கும், உழவுக்கு உதவிய மாடுகளுக்கும் நன்றி
மறவாமல் செய்து வந்த இயற்கை வழிபாடு ஆகும்.
மணப்பொங்கல்: தை முதல்நாளில் சுவாமி அறையில்
வைக்கப்பட்ட கண்ணுப்பிள்ளை ஆவாரம்பூ, மாவிலைக்
கொத்துகள் வீட்டின் தாழ்வாரத்தில் சொருகப்படும்.
நுழைவு வாயிலிலும், சுவாமி அறைகளிலும் கரும்புகள்
கட்டப்படும். பொங்கல் வைப்பதற்கு ஊரிலுள்ள "பொதுகுடிநீர்
ஊரணியில்' பெண்கள் தண்ணீர் எடுத்து வருவர். அன்று
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பே குடும்பத்தினர்
குளித்து புத்தாடை அணிந்து மாடுகளையும் அலங்கரித்து
வீட்டின் முன்வாயிலில் கிழக்கு திசை நோக்கி கூடுவர்.
புதிய மண்பானையில் மஞ்சள் கொத்து, மாவிலை கட்டி
பசும்பால், கைக்குத்தல் பச்சரிசி, வெல்லம்,
பாசிப்பருப்பு, ஏலக்காய், நெய் சேர்த்து இனிக்கும்
பொங்கல், வெண் பொங்கல் வைப்பர்.
|
|
பச்சை ஓலையில் சமையல்: பானை மண் அடுப்பில்
வைக்கப்பட்டு "பச்சை' பனை ஓலை மட்டுமே வைத்து
எரிக்கப்படும். அந்த ஓலையில் தீ பரவுவதற்கு பெண்கள்
ஊதி பற்ற வைப்பதற்குள் "கண் எரிச்சலையும்' இன்பமாக
ஏற்று சிரித்து பேசியவாறு பொங்கல் வைப்பர். பொங்கல்
பொங்கும் போது,"பொங்கலோ பொங்கல்' என்று
குடும்பத்துடன் கோஷமிட.. பெண்கள் குலவையிட அந்த
இடமே குதூகலமாக இருக்கும். ஏற்கனவே சமைத்து தயாராக
வைக்கப்பட்டுள்ள "பச்சை மொச்சை' பொறியலுடன்
சுவாமிக்கு படையல் வைக்கப்பட்டு...முதலில் மாடு,
ஆடுகளுக்கு பொங்கல் ஊட்டப்படும். பின்னர்
குடும்பத்தினர் வரிசையாக அமர்ந்து சுவைப்பர்.
நன்றாக பொங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும் என்ற ஐதீகம் உண்டு.
மாட்டு பொங்கல்: பொங்கல் திருவிழா என்பது
நகரங்களை பொறுத்த வரையில் அன்றைய தினம் விடுமுறை
என்பதும், 'டிவி' நிகழ்ச்சிகளில் மூழ்குவதும் தான்
முக்கியமாக இருக்கிறது. கிராமங்களில் பழமை மாறாமல்
பொங்கல் திருவிழா நடத்தப்பட்டு வருவது சற்று ஆறுதல்
அளிக்கும் விஷயம். பொங்கலுக்கு அடுத்த தினமான
மாட்டு பொங்கல் கொண்டாடுவது தற்போது குறைந்து
வருகிறது. ஆரம்பத்தில் வயலில் உழவு செய்வது, தொழி
அடிப்பது, நெல்லை சூடு அடிப்பது என்று பல பணிகள்
மாடுகளால் நடந்தன. காலப் போக்கில் இவை
அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்து விட்டதால், காளை
மாடு வளர்ப்பில் மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது.
பெரும்பாலான கிராம வீடுகளில் தற்போது பசு மாடுகளை
மட்டுமே வளர்க்கின்றனர். இவற்றிற்கு பொங்கல்
படைத்து, அந்த உணவை மாடுகளுக்கு ஊட்டி அவர்கள்
மகிழ்கின்றனர். ஏற்கனவே மாடுகளை வளர்த்து, அவற்றை
விற்றவர்கள் கிராமத்தில் உள்ள கோயில் மாட்டிற்கு
பொங்கல் வைத்து உண்ண கொடுக்கின்றனர்.எனினும் பல
வீடுகளில் மாடுகள் வளர்க்காததால் மாட்டு பொங்கல்
கொண்டாடும் உற்சாகம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
பொங்கலை முன்னிட்டு வீர விளையாட்டுகளான
ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், கல் தூக்குதல், கபடி,
பானை உறி அடிப்பது போன்றவைகள் ஆரம்பத்தில்
நடத்தப்பட்டு வந்துள்ளது. காலப் போக்கில் அவை
மறைந்து, சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், சைக்கிள்
பந்தயம் என்று மாறி வருகிறது. இத்துடன் கலை
நிகழ்ச்சிகளும் கிராமம் தோறும் நடத்தப்பட்டு
வருகிறது. தற்போது ஜல்லிக் கட்டு நடத்த தடை உள்ளது.
|