நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன

|

Details:

இது போராட்டமல்ல. இது ஆர்ப்பாட்டமல்ல. நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க வேண்டும்.- சத்குருஇந்திய நதிகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையினாலும் அதன் வளர்ச்சி தேவைகளினாலும் நம்முடைய வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இப்போது பருவகால நதிகளாய் மாறிவிட்டன. பல சிறிய நதிகள் மறைந்தேவிட்டன. பருவமழை காலங்களில் நதிகள் கட்டுக்கடங்காமல் ஓடி மழைக்காலம் முடியும்போது மறைந்து போகின்றன. இதனால், வெள்ளம் மற்றும் வறட்சி அடிக்கடி நிகழ்கிறது.

அதிர்ச்சிகரமான உண்மை

25% இந்தியா பாலைவனமாய் மாறிக்கொண்டு இருக்கிறது.

இன்னும் 15 ஆண்டுகளில், உயிர்வாழ தேவையான நீரில் 50% மட்டுமே நமக்கு இருக்கும்

உலகில் அழிந்து வரும் நதிகளில் முதன்மையானதாக கங்கை இருக்கிறது

கடந்த வருடத்தின் பெரும்பாலான காலம் கோதாவரி வற்றியே இருந்தது

காவேரியின் ஓட்டம் 40% குறைந்துவிட்டது. கிருஷ்ணா, நர்மதா ஆறுகள், 60% வற்றிவிட்டது


ஒவ்வொரு மாநிலத்திலும் வற்றாத நதிகள் அனைத்தும், ஒன்று பருவகால நதிகளாக மாறி வருகின்றன அல்லது அழிந்தே விட்டன. கேரளத்தின் பாரத்புழா, கர்நாடகத்தின் கபினி, தமிழகத்தின் காவிரி பாலாறு மற்றும் வைகை, ஒடிசாவின் முசல், மத்தியப்பிரதேசத்தின் க்ஷிப்ரா இவற்றில் சில. பல சிறிய நதிகள் மறைந்தேவிட்டன.

பல பேராறுகள் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறில் உட்படுத்தப்படுகின்றன.

இது உங்களை எவ்வாறு பாதிக்கும்?

புள்ளி விவரப்படி நமது தண்ணீர் தேவையின் 65% ஆறுகளாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்திய பெருநகரங்களில், மூன்றில் இரண்டு நகரங்கள், தினசரி தண்ணீர் பற்றாகுறையால் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நகரவாசிகள் ஒரு கேன் தண்ணீருக்கு பத்து மடங்கு அதிக விலை கொடுக்கின்றனர்.

அருந்துவதற்கு, வீட்டு உபயோகத்திற்கு மட்டும் நாம் நீரை செலவழிப்பதில்லை. சுமார் 80% நீரை நாம் உண்ணும் உணவினை வளர்க்க பயன்படுத்துகிறோம். ஒரு ஆண்டுக்கு, சராசரி மனிதனது தண்ணீர் தேவை சுமார் 11 லட்சம் லிட்டர்.

வெள்ளம், வறட்சி மற்றும் நீர்நிலைகள் பருவகாலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளும் சூழல், இவைகளால் தொடர்ந்து நாடு முழுவதும் பயிர்கள் பொய்த்து போகின்றன.

தட்பவெட்பத்தில் நிகழும் மாற்றங்கள் அடுத்த 25-50 வருடங்களில் மேலும் மோசமான வெள்ளம் மற்றும் வறட்சிக்கு காரணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குரிய அறிகுறி இப்பொழுதே தெரியத் துவங்கிவிட்டது.

நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?

இந்த நெருக்கடி நிலை, நம் நாட்டை முழுமையாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. சில உதாரணங்கள் இங்கே:

கேரளம்: கடந்த 115 வருடங்களில் கண்டிராத ஒரு வறட்சியை 2017-ஆம் ஆண்டில் கண்டது. நதிகள் வற்றிப்போனதால் பயிர்கள் பொய்த்து விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

தமிழ்நாடு: கடந்த 140 ஆண்டுகளில் கண்டிராத ஒரு வறட்சியை 2017-ஆம் ஆண்டு கண்டது. பயிர்கள் பொய்த்து போயின.

ஆந்திர பிரதேசம்: 2009 அக்டோபரில் இந்த நூற்றாண்டிலேயே அதிக அளவான வெள்ளப்பெருக்கை கிருஷ்ணா நதி கண்டபோது வறட்சியில் இருந்த ஆந்திர மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. 350 கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்ததால், தீவுகளாக மாறிப் போயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.

தெலுங்கானா: 2015-ஆம் ஆண்டு மஞ்சீரா நதி வற்றியதால் தண்ணீர் தேடி முதலைகள் கிராமங்களுக்குள் புகுந்தன.

கர்நாடகம்: மழைப்பொழிவு 40 முதல் 70 சதவிகிதம் குறைந்ததால் காவிரி, அதன் நதிமூலத்திலேயே வற்றிப் போனது. இதனால், பயிர் உற்பத்தி பாதியாக குறைந்தது.

மகாராஷ்டிரம்: 2016-ஆம் ஆண்டில் நம் நாட்டின் மற்ற பெரிய நதிகளை போல் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளும் மூலத்திலேயே வற்றி போயின.

மத்திய பிரதேசம்: நர்மதா நதியின் 101 கிளைகளில் 60 கிளைகள் முற்றிலுமாக வற்றி போயின.

குஜராத்: நர்மதா நதி ஆண்டின் பெரும் பகுதி கடலில் கலக்காததால் கடல் உட்புகுந்தது. இது நிலத்தின் உப்புத்தன்மையை அதிகரித்து மண் வளத்தை குன்றச்செய்தது. பல தொழில்கள் பாதிப்பு அடைந்தன.

உத்ரகாண்ட்: 800 வற்றாத நீரோடைகள் கொண்டிருந்த இந்த மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு மறைந்துவிட்டது அல்லது பருவகால ஓடைகளாய் மாறிவிட்டது. நீரின் அளவும் 65% சுருங்கிவிட்டது.

உத்திரப்பிரதேசம்: யமுனை நதி முற்றிலுமாக வற்றி போனதால் அடித்தளம் ஈரப்பதம் இழந்த நிலையில் தாஜ்மஹால் மண்ணுக்குள் புதையும் அபாயம் உள்ளது.

பீகார்: மே, 2016-ல் கங்கை முழுமையாக வற்றிய நிலையில் மக்கள் ஆற்றுப்படுகையில் அங்கும் இங்குமாக நடந்தனர். மூன்று மாதங்கள் கழித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தில் பல இடங்கள் நீரில் மூழ்கியது.

மணிப்பூர்: 2014-ஆம் ஆண்டில் மாநிலம் எங்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் வறட்சி நிலை நிலவியது. 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் நதிகள் வற்றின.

இந்த நிலைமை சற்று கொடூரமானது. ஆனால், அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தினாலும் உறுதியான செயல்பாட்டினாலும் நம் நதிகளை பேணி காக்க முடியும். நம் வருங்கால தலைமுறையையும் நன்முறையில் காப்பாற்றிவிட முடியும்.

------


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் செய்திகள்