ஆய்வுக்கு 30 அரங்கம்
கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தொடர்பான நிகழ்ச்சிகள், ஆய்வரங்கம், கண்காட்சி மற்றும் மாநாடு என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை உலக அரங்கிற்கு உரக்கச் சொல்லும் வகையில் 30 ஆய்வரங்கங்கள் நடத்தப்படுகின்றன. ஓர் அரங்கத்தில் 5000 பேரும், மற்றொரு அரங்கத்தில் 2000 பேரும் அமரும் வகையில் இரண்டு பெரிய அரங்கங்கள் அமையவுள்ளன; இவற்றைத் தவிர்த்து 28 அரங்கங்கள் அமைக்கப்படும்.
மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே, கொடிசியா தொழிற்காட்சி வளாகம் அமைக்கப்படும் பகுதியிலேயே நடக்கவுள்ளது. இந்த தொழிற்காட்சி வளாகத்துக்கு எதிரில், 69.68 ஏக்கர் பரப்பில் 1500 அடி நீளத்திலும், 550 அடி அகலத்திலும் பிரமாண்டமான மாநாட்டுப் பந்தல் அமைக்கப்படும். பந்தலில் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும். நெருக்கடியின்றி உள்ளே நுழைய ஏழு நுழைவாயில்கள் அமைக்கப்படும். மாநாட்டுப் பந்தலுக்கு அருகில் உணவுக் கூடம் அமைக்க 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி.,க்கள் வாகனங்களை நிறுத்த 4.70 ஏக்கர், மக்கள் வாகனங்களை நிறுத்த 45 ஏக்கர் என "பார்க்கிங்'கிற்கு மட்டும் 50 ஏக்கர் இடம் ஒதுக்கப்படுகிறது.
அறிவோம்... உயர்தனிச் செம்மொழி
அறிஞர் ராபர்ட் கால்டுவெல், வடமொழியிலிருந்து, தென் மொழிகள் தனித்து நிற்கக் கூடியவை என்று நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் எழுதிய " தமிழ் மொழியின் வரலாறு' எனும் நூலில் தமிழ் மொழி உயர் தனிச் செம்மொழி கருத்தினை வலியுறுத்தவும் காரணமாக அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து மறைமலை அடிகளார் தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார்.