எப்படி கொண்டாட வேண்டும்!
சித்திரை திருநாளைக் கொண்டாடுவதற்கென சில விதிமுறைகள்
உள்ளன. சித்திரை முதல் நாளில் வீட்டிலுள்ள பெண்கள்,
சிறுமிகள், தங்கள் வீட்டுப் பின் கதவைத் திறந்து வைக்க
வேண்டும். பின்னர் முன் பக்கம் வந்து, மூன்று கையளவு
தண்ணீரை முற்றத்தில் தெளிக்க வேண்டும்.
சூரிய பகவானிடம், "சூரிய பகவானே! உங்கள் உக்கிரத்தை
இம்மாதத்தில் அதிகமாகக் காட்டாதீர்கள்! உங்கள் தீவிரத்தைக்
குறைத்து எங்களைக் காப்பாற்றி, மழை பெய்யவும் அருள்புரிய
வேண்டும்' எனக் கூறி வணங்க வேண்டும். இதனால் வெப்பம்
குறையும் என்பது நம்பிக்கை. சித்திரைக்கு முதல் நாள்
மாலையில், பழ வகைகள் மற்றும் மஞ்சள் நிறப் பூக்களை ஒரு
மேஜையில் வைத்து விட வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்.
பழங்கள், பூக்கள் கண்ணில் படுவதன் மூலம் ஆண்டு முழுவதும்
இனிமையாக இருக்கும்.
பெண்மைப் போற்றுவோம்!
மாதங்களில் இரண்டை மட்டும் பெண்ணுக்கு ஒப்பிடுவர். "சித்திரையை
"சித்திரைப் பெண்' என்றும், தையை "தை மகள்' என்றும் சொல்வர்.
பூமி முதல் நதி, நாடு என்று எல்லா உயர்ந்ததும் பெண் என்றே
கருதப்படுகிறது. காரணம், ஆணைவிட பெண் உயர்ந்தவள். ஒரு
அம்மாவிற்கு இவ்வுலக ஆண்கள் அனைவரும் கூட ஈடாக முடியுமா?
பெண் - அது ஒரு சிறுமி முதல் பாட்டி வரை கணக்கு. அதனால்
பெண்மையை போற்றுங்கள்; மதியுங்கள். இயற்கையை கூட அன்னை
என்றுதானே அழைக்கிறோம்.
அதனால், இயற்கையை போற்றுவதும், காப்பாற்றுவதும் கூட நம்
கடமையாகும். நம் குடும்பப் பெண்களின் கருத்துகளுக்கு
தகுந்த மரியாதை கொடுக்க, சித்திரையில் ஒவ்வொரு ஆண் மகனும்
உறுதி எடுக்க வேண்டும். வீட்டு பெண்கள் மகிழ்வாய் இருந்தால்
தான் வீடு விளங்கும். ஒவ்வொரு வீடும் விளங்கினால் நாடும்
விளங்கும்.
தாய் மொழி கல்வி!
தாய் (தமிழ்) மொழிக் கல்வி மிகவும் அவசியமான ஒன்று.
விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கும் ஜப்பான் நாட்டில்
அனைத்துக் கல்விகளும், தொழில்நுட்பம், மருத்துவம் உட்பட
அனைத்தும் தாய் மொழியிலேயே பயிற்றுவிப்பதால் அந்த நாடும்,
நாட்டு மக்களும் சிறந்து விளங்குகின்றனர்.
ஏனெனில், இளம் குழந்தைகளுக்கு தாய் மொழிதான் பசுமரத்து
ஆணியாக பதியும். நமது குழந்தைகள் நமது பண்பாடு மற்றும் உலக
பொதுமறை நூலான திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம்
போன்றவைகளை உணர்வதற்கு தாய் மொழி கல்விதான் நல்ல வாய்ப்பாக
அமையும்.
பலர் அ, ஆ... கூட தெரியாமல் ஆங்கிலத்திலேயே படித்து
பட்டப்படிப்பு வரை சென்று விடுகின்றனர். இந்த அவல நிலை
தமிழ் நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
எந்த மொழியில் படித்தாலும் தவறில்லை. தாய் மொழியே தெரியாமல்
மற்ற மொழி மட்டுமே படிப்பதுதான் தவறு. தாய்ப்பால் எவ்வளவு
சிறந்ததோ அதைப் போன்று சிறந்ததுதான் தாய் மொழிக் கல்வி.
தாய்ப்பாலை புறந்தள்ளிவிட்டு புட்டிப்பால் மட்டுமே
குழந்தைக்கு கொடுப்பது குழந்தையின் உடல்நலத்திற்கு கேடு
விளைவிக்கக் கூடியதாகும்.
தாய், தாய்மொழி, தாய் நாடு, தாய் வழி உறவுகள், பண்பாடு
இவற்றை நாம் என்றுமே போற்ற வேண்டும்!
* * *