* கமிஷனின் இந்த அறிக்கை 2008ம் ஆண்டு மார்ச் 24ம்
தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது
* சராசரியாக 40 சதவீத சம்பள உயர்வு அளிக்க வேண்டும்.
* புதிய சம்பளத்தை 2006 ஜனவரி 1ம் தேதி முதல் வழங்க
வேண்டும்.
* குறைந்த பட்ச சம்பளம் ரூ. ஆறாயிரத்து 660 ஆகவும்,
அதிகபட்சமாக ரூ.90 ஆயிரமாகவும் இருக்கும்.
* உயர் தொழில் திறன் வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட
பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்கலாம்.
* ஓய்வு வயது 60 என்பது தொடர வேண்டும்.
* மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர வேறு
யாருக்கும் ஓய்வு வயதில் தளர்வு தரக்கூடாது.
* தற்போது 35 கிரேடுகள் என உள்ளதை 20 ஆக குறைக்க
வேண்டும்.
* ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு இடையே
தற்போதுள்ள சம்பள ஒற்றுமை தொடர வேண்டும்.
* ராணுவத்தில் உள்ளவர்களுக்கும் சிவில் பணியாளர்களைப்
போல சம்பளம் வழங்க வேண்டும்.
* வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பது தொடர வேண்டும்.
மூன்று நாட்கள் மட்டுமே தேசிய விடுமுறை நாட்களாக
இருக்க வேண்டும்.
* கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற விடுமுறை நாட்களை
ரத்து செய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை
நாட்களிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.
* திறமையாக பணியாற்றுவோருக்கு, தற்போது வழங்கப்படும்
2.5 சதவீத சம்பள உயர்வுக்கு பதிலாக 3.5 சதவீத சம்பள
உயர்வு வழங்கலாம்.
* நர்சுகள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்க்காவல்
படையினருக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
* குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர கல்வி அலவன்ஸ்
ரூ.50 என்பதை ரூ. ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
* விடுதி மானியத்தை 10 மடங்கு அதிகரித்து ரூ.
மூன்றாயிரமாக வழங்க வேண்டும்.
* செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டம்
அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
* தேசிய விடுமுறை நாட்களான மூன்று நாட்களில் மட்டும்
அரசு அலுவலகங்களை மூட வேண்டும்' என, ஆறாவது சம்பள
கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் வாரத்தில்
ஐந்துநாள் வேலை என்பதில் மாற்றம் இல்லை.பொது விடுமுறை
நாட்கள் என்ற பெயரில், மத்திய அரசு ஊழியர்கள் இதுவரை
ஏராளமான நாட்களை, விடுமுறை நாட்களாக எடுத்து வந்தனர்.
அதற்கு தற்போது "செக்' வைக்கப் பட்டுள்ளது. நாட்டின்
நலன் கருதி, விடுமுறை நாட்களை துறக்க மத்திய அரசு
ஊழியர்கள் முன்வரவேண்டும் என ஆறாவது சம்பள கமிஷன்
தெரிவித்துள்ளது.
* மத்திய அரசு விடுமுறை நாட்களாக கெஜட்டில் 14 நாட்கள்
அறிவிக்கப் பட்டுள்ளன. அவற்றை ரத்து செய்ய வேண்டும்.
குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி
ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே, அரசு அலுவலகங்கள்
மூடியிருக்க வேண்டும். மற்ற நாட்களில் திறந்திருக்க
வேண்டும். மாறாக , மத, பண்டிகை விடுமுறை நாட்கள்
தற்போதுள்ள இரண்டிலிருந்து, எட்டாக அதிகரிக்கலாம் என
தெரிவிக்கப் பட்டுள்ளது.
* ஆறாவது சம்பள கமிஷனின் தலைவர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா
இதுதொடர்பாக கூறுகையில், ""கெஜட்டில் அறிவிக்கப்பட்ட
விடுமுறை நாட்களை எல்லாம் நீக்கி விட வேண்டும் என
தெரிவித்துள்ளேன். இந்த விவகாரத்தில் ஒரு நியாயமான
நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. உலக அரங்கில்
முதலிடத்தை பிடிக்க வேண்டும் எனில், நாம் சில விஷயங்களை
தியாகம் செய்ய வேண்டும்,'' என்றார்.
* ராணுவத்தினருக்குஇரு மடங்கு உயர்வு: ஆறாவது ஊதிய குழு
அளித்துள்ள பரிந்துரையில், ராணுவத்தினருக்கான சம்பளத்தை
இரண்டு மடங்கு அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ராணுவ, கடற்படை, விமானப் படை தளபதிகளுக்கான
மாத சம்பளத்தை ரூ.90 ஆயிரமாக அதிகரிக்க பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. இது, கேபினட் செயலர்களுக்கு
வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையாகும்.
அதிகாரிகள் பிரிவை பொறுத்தவரை, லெப்டினென்ட்,
சப்-லெப்டினென்ட், பிளையிங் ஆபீசர் ஆகியோரை பொறுத்தவரை,
தற்போது ரூ.15 ஆயிரத்து 600 சம்பளம் பெறுவோர், மற்ற
அகவிலைப் படிகளோடு சேர்த்து, இனி ரூ.25 ஆயிரத்து 760ல்
இருந்து ரூ.28 ஆயிரத்து 890 வரை மாத சம்பளம் பெறுவர்.
மேஜர் ஜெனரல், ரியர் அட்மிரல், விமானப் படை துணை
மார்ஷல் பதவியில் உள்ளவர்களை பொறுத்தவரை ரூ.39 ஆயிரத்து
200 சம்பளம் பெறுவோர், இனி ரூ.52 ஆயிரத்து 280ல்
இருந்து ரூ. 54 ஆயிரத்து 480 வரை சம்பளம்
பெறுவர்.ராணுவத்தில் உள்ள சிப்பாய்களுக்கு மாத சம்பளம்
குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்து 670 ஆக இருக்கும்.
ஹவில்தார் பதவியெனில் குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரத்திற்கு
அதிகமாக இருக்கும்.
* குறைந்த பட்ச உயர்வுமாதத்திற்கு ரூ.1,800: ஆறாவது
சம்பளக்கமிஷன் சிபாரிசை அச்சுப்படியே மத்திய அரசு
அறிவிக்கும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு
குறைந்த பட்ச சம்பள உயர்வு ரூ1,800 இருக்கும்.
தற்போதுள்ள 35 பணிப் பிரிவுகள் 20 ஆகக்
குறைகிறது.குறிப்பாக "சி' பிரிவு ஊழியர்கள் "டி' பிரிவு
என்று பணி உயர்த்தப்படுவர். அவர்களுக்கு "பிபி 1' என்ற
சம்பள கிரேடு தரப்படும். இவர்களுக்கு மாதசம்பளம் ரூபாய்
6,600. அதில் இருந்து அடுத்தடுத்த படியாக ஊழியர்
தகுதிக்கும் பொறுப்புக்கும் ஏற்ப "பிபி4 ' வரை சம்பளம்
அமையும். இதில், "பிபி2' பிரிவுக்கு குறைந்த பட்ச
சம்பளம் ரூபாய் 12 ஆயிரம். அடுத்த பிரிவுக்கு குறைந்த
பட்ச சம்பளம் ரூபாய் 21 ஆயிரம். கடைசியாக "பிபி4'
பிரிவுக்கு மாதத்திற்கு ரூபாய் 48 ஆயிரத்து 200
கிடைக்கும். இதிலும் பல்வேறு உட்பிரிவுகள்
உள்ளன.வீட்டுவசதிப்படி, நகர ஈட்டுப்படி ஆகியவையும்
கணிசமாக உயர்த்தப் பட்டிருக்கின்றன.அதைவிட பணியாற்றும்
தகுதிக்கு ஏற்ப ஊக்கத்தொகை அளிப்பது, இளம்
விஞ்ஞானிகளாகப் பதவிக்கு வந்தால், அவர்கள் திறமைக்கு
ஏற்ப கூடுதல் சம்பளம் தரவும் சிபாரிசு செய்யப்
பட்டிருக்கிறது.