News Comment | Science News | TV Shows | Photo Album | Rasi Palan
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சிறப்பு பகுதிகள் : இது உங்கள் இடம்
இது உங்கள் இடம்
நவம்பர் 21,2009

அபாரசேவை செய்யும்"தினமலர்!' வ.ப.நாராயணன், கவுரிவாக்கத்திலிருந்து எழுதுகிறார்: "ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியின் மூலம், மாணவர்களுக்கு உயரிய சேவை செய்து வருகிறது தினமலர். "முயன்றால் முடியாதது இல்லை 'என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களுக்கு பல கல்வியாளர்கள் மூலமாக, நல்ல அறிவுரைகளை வழங்கி, ஊக்குவித்து வருகிறது தினமலர்.வேறு எந்த நாளிதழும் செய்யத் துணியாத சேவையை, தினமலர் தான் முதன் முதலில் துவக்கி வைத்தது. ஒட்டுமொத்த தமிழக மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடமிருந்தும் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது, "ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!'தினமலர் இதழின் இந்த சிறப்பான சமுதாயப் பணியை, தமிழறிஞர்களும், சான்றோர்களும் பாராட்ட வேண்டும். மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைப்பது, இக்கால "டிவி' சினிமா யுகத்தில் சாதாரண காரியமல்ல. தன்னை வருத்திக் கொண்டு, ஒரு சமுதாய அக்கறையுடன் தினமலர் ஆசிரியர், இந்த அரும்பெரும் சேவையை செய்து வருவதுடன், நாளிதழில் இதற்காகவே இரு முழு பக்கங்களை ஒதுக்கி, மாணவர்களுக்கான நல்ல விஷயங்களையும், கருத்துக்களையும் அளித்து வருகிறார்.இத்தகைய சமுதாயப் பணியை, எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் செய்து வரும் தினமலர் நாளிதழை, "நம்பர் ஒன்' நாளிதழ் என்று ஏன் அழைக்கக் கூடாது?



மதுகோடா என்ன ஆவார்?தினகரன் ராஜாமணி, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து எழுதுகிறார்: சி.பி.ஐ., விசாரணை என்றதுமே, வழக்கமான அரசியல்வாதிகளைப் போல, மருத்துவமனைக்கு சென்று அடைக்கலமானார் மதுகோடா. அவர் ஊழல் செய்த தொகையோ, நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.மருத்துவமனையிலிருந்து திரும்பியதும், கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டபோதும், ஏதோ சில அரசியல் தலையீடு காரணமாக, இன்னும் அது நடக்கவில்லை. சரி, இனி நமது இந்திய அரசியலின் நெடுங்கால ஒப்பீட்டுபடி, அவர் என்ன ஆவார் என பார்ப்போம்...இன்னும் ஓரிரு வாரங்களில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படும். ஒருவேளை அவர், கைது செய்யப்பட்டாலும், "ஏசி' அறை, மெத்தை, "டிவி' மற்றும் உயர்தர சாப்பாடு என, விருந்தாளி போல் கவனிக்கப்பட்டு, ஓரிரு மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்.அதன்பின் சில வருடங்கள் கழித்து, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முற்படும். இந்த இடைவெளியில், கோடாவிற்கு தெரியாமலா இருக்கும், நமது சட்டத்தின் ஓட்டைகளை எவ்வாறு பயன்படுத்துவதென்று?அதற்கு வழிகாட்டியாக, லாலு பிரசாத், மாயாவதி போன்ற அரசியல்வாதிகளும், பல சாமியார்களும், தாதாக்களும் இருக்கின்றனரே. ஊழல் குற்றச்சாட்டிற்காக, முழுமையான தண்டனை காலத்தை அனுபவித்த ஒரு இந்திய அரசியல்வாதியை நம்மால் காட்ட முடியுமா? பல நாடுகளில், ஊழல் குற்றத்திற்காக, அமைச்சர் முதல், அதிபர் வரை கடுமையாக தண்டிக்கப்படுவதை, நாம் பார்த்து வருகிறோம். நம்நாட்டில் மட்டும் ஏன் இப்படி?அத்தகைய ஊழல் பெருச்சாளிகளையும், மக்களே மீண்டும் வெற்றிபெறச் செய்து, சிம்மாசனத்தில் ஏற்றும் போது, யாரிடம் சென்று முறையிடுவது? ஏற்கனவே, அரசியல்வாதிகள், இந்தியாவில் பாதிக்கு மேல் சுவிட்சர்லாந்தில் அடகு வைத்து விட்டனர்.இன்னும் நாம், வலுவிழந்த சட்டங்களை செயல்பாட்டில் வைத்திருந்தால், இந்தியாவில் மீதியையும் கூறுபோட்டு, பங்கிட்டு கொள்வர், இந்த ஊழல் அரசியல்வாதிகள்.



பொதுத்தேர்வு:மத்திய அரசின்மெத்தன போக்கு!கோதை ஜெயராமன், மீஞ்சூரிலிருந்து எழுதுகிறார்: மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சர் கபில் சிபல், சில மாதங்களுக்கு முன், "சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கிரேடு முறையில் செயல்படும். அதற்குண்டான திட்டமும் வகுக்கப்பட்டு விட்டது' என்று, தெள்ளத் தெளிவாக தெரிவித்தார்.இந்த கிரேடு முறையால், முதல் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவர் என்று, பலமுனைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியும், அவர் தன் முடிவில் மாற்றம் காணவில்லை. இதற்கு உடன்பட்டு, இந்தியாவில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகள், குறிப்பாக, தமிழகத்தில் இயங்கும் பள்ளிகள், தங்களது மாணவ-மாணவியரின் பெற்றோரை அழைத்து, கல்விமுறை மாற்றம் குறித்து விளக்கங்களை அளித்து, அதற்குண்டான ஆயத்த வேலைகளை செய்தன.நேரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், "சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை; பழைய முறையே பின்பற்றப்படும்' என்று கூறியுள்ளார்.குழந்தைகள் பிறந்தநாள் விழாவில் மட்டும் தான், மாணவ-மாணவியரின் நினைப்பு, இதுபோன்ற மாபெரும் தலைவர்களுக்கு வருவது வியப்பாகவே உள்ளது.இவர்களின் முரண்பாடான அறிவிப்பால், சி.பி.எஸ்.இ., கல்வி நடத்தும் ஆசிரியர்களும், மாணவர்களும், செய்வதறியாது உள்ளனர். எந்த நேரத்தில், எந்த அறிவிப்பு வெளிவருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.



எத்தனால் கலப்பு சாத்தியமாகுமா? எஸ்.சண்முகநாதன், மங்கைநல்லூரிலிருந்து எழுதுகிறார்: "சர்க்கரை ஆலைகளில் இருந்து கிடைக்கும் எத்தனாலை, பெட்ரோலில் கலந்து விற்க வேண்டும்' என, 2006ம் ஆண்டு, மத்திய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், "உடனடியாக 5 சதவீதம் எத்தனாலை, பெட்ரோலில் கலந்து விற்க வேண்டும். 2007க்குப் பிறகு, கலப்பை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என்று தெரிவித்திருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு முடிவடைய உள்ள இன்றைய நிலை வரை, 5 சதவீதம் கலப்பு கூட சாத்தியமில்லை என்ற நிலைதான் தொடர்கிறது.அண்மையில், மத்திய அமைச்சரவை கூடி, பெட்ரோலில், எத்தனாலைக் கலந்து விற்பனை செய்வதைப் பற்றி ஆய்வு செய்தது. 2006ம் ஆண்டு, அரசு உத்தரவை நிறைவேற்ற முடியாமை பற்றி, அமைச்சரவை குழு கவலை தெரிவித்துள்ளது. "எதிர்காலத்தில், எத்தனால் கலந்த பெட்ரோலைத் தான் கண்டிப்பாக விற்பனை செய்ய வேண்டும்' என்று, பெட்ரோலியத் துறையை, அமைச்சரவை குழு வலியுறுத்தியுள்ளது.இன்று, 5 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டும் என்றால், அதற்கு 68 கோடி லிட்டர் எத்தனால் தேவை. சர்க்கரை ஆலைகளிடம் இருந்து, பெட்ரோலியத் துறைக்கு எத்தனால் சப்ளை செய்ய, இதுவரை 27.2 கோடி லிட்டருக்கு மட்டுமே டெண்டர் கிடைத்துள்ளது. சர்க்கரை ஆலைகளுக்கு, எரிசாராயம், மொலாசஸ் போன்ற உபபொருட்களின் மூலம், அதிக லாபம் கிடைக்கிறது.எத்தனாலுக்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலை, லிட்டருக்கு 21.50 ரூபாய் மட்டுமே! இந்திய சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்புத் தலைவர் நொபாணி, "எத்தனால் விலையை உயர்த்தி கொடுங்கள், நாங்கள் சப்ளை செய்கிறோம்' என்கிறார். அவர் வியாபாரி; அவரின் நோக்கம் லாபம். இந்த விஷயத்தில், அரசு என்ன செய்யப் போகிறது?

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்