டீ கடை பெஞ்ச்

பதிவு செய்த நாள் : ஏப் 22, 2018
Advertisement
 டீ கடை பெஞ்ச்

தினகரன் கட்சிக்கு தாவும், 'மாஜி' மந்திரி!

''முதல் முறையா, அழைச்சு பேசியிருக்காங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எதுக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''மின் இணைப்பு வழங்குறதுல தாமதம், மின் தடை புகார் மீது நடவடிக்கை எடுக்கலைன்னு, சில உதவி பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் மேல புகார்கள் குவியுது... வழக்கமா, இந்த மாதிரி புகார்களை, கண்காணிப்பு பொறியாளர் அளவோட விசாரிச்சு, முடிச்சிடுவாங்க பா...
''சமீபத்துல, முதல் முறையா, மின் பகிர்மான உயர் அதிகாரிகள், ஒவ்வொரு வட்டத்துலயும் இருக்குற எல்லா பொறியாளர்களையும், மின் வாரிய தலைமை அலுவலகத்துக்கு அழைச்சு, ஆலோசனை நடத்துனாங்க...
''அப்ப, பொறியாளர்கள், 'மின் வினியோக பெட்டிகள் பொருத்தி நாளாயிடுச்சு... எங்களுக்கு தளவாட பொருட்கள் வாங்க, பணம் வர மாட்டேங்குது'ன்னு புகார்களை அடுக்கியிருக்காங்க பா...
''அதிர்ச்சியான உயர் அதிகாரிகள், இதை எல்லாம் சீக்கிரமே நிவர்த்தி பண்றதா, உறுதி குடுத்திருக்காங்க... கூட்டத்துக்கு போயிட்டு வந்த பொறியாளர்கள், 'இந்த மாதிரி, அடிக்கடி நம்மை அழைச்சு பேசினா தான், பிரச்னைகளை தீர்க்க முடியும்'னு சொல்றாங்க பா...'' என்றார்
அன்வர்பாய்.
''மாற்றாந்தாய் மனப்பான்மையில இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருநெல்வேலி, பாளையங்கோட்டையில, மாவட்ட ஆயுதப்படை, மாநகர ஆயுதப்படை இருக்கு... ரெண்டுக்கும் தனித்தனியா ஆபீஸ், போலீஸ்காரங்க இருக்காவ வே...
''மாவட்ட ஆயுதப்படை, எஸ்.பி., கட்டுப்பாட்டுலயும், மாநகரம், கமிஷனர் கன்ட்ரோல்லயும் இருக்கு... நெல்லை கமிஷனர் பணியிடம், மூணு வருஷமாவே காலியா கெடக்கு வே...
''அதனால, மாநகர ஆயுதப்படை, சவலை பிள்ளை மாதிரி கெடக்கு... அதே நேரம், மாவட்ட ஆயுதப்படை மைதானத்துல, 20 லட்சம் ரூபாய் செலவுல, ஓடுதளம், இறகு பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், கபடி மைதானங்களை எல்லாம் சமீபத்துல புதுப்பிச்சிருக்காவ...
''இதை பார்த்துட்டு, மாநகர ஆயுதப்படை போலீசார், ஏக்க பெருமூச்சு விடுதாவ வே...''
என்றார் அண்ணாச்சி.
''இடத்தை காலி செய்ய, முடிவு பண்ணிட்டாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''யாரைச் சொல்றீர் ஓய்...'' என்றார்குப்பண்ணா.
''அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர், கிணத்துக்கடவு தாமோதரன், பன்னீர் ஆதரவாளரா இருந்தார்... ரெண்டு அணிகளும் இணைஞ்சதும், கட்சியில, ஏதாவது முக்கிய பொறுப்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தாருங்க...
''ஆனா, யாருமே அவரைக் கண்டுக்கலை... இதனால, வெறுப்புல இருக்குறவர், தினகரன் கட்சிக்கு தாவ தயாராகிட்டாராம்... கோவை புறநகர் மாவட்டத்துல இருக்குற தன் ஆதரவாளர்களோட, தினகரன் கட்சியில இணைய, தேதி கேட்டிருக்காருங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.
டீ குடித்த நண்பர்கள், நடையைக்கட்டினர்.

அக் ஷய திரிதியையில், 'அள்ளி விட்ட' எம்.எல்.ஏ.,

''இலவச வீடுன்னு வசூல் வேட்டை நடக்கு வே...'' என்ற எச்சரிக்கை தகவலுடன், அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''சென்னை, திருவொற்றியூர் மேற்கு பகுதியில, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்காவ... பெரும்பாலும், தினக்கூலிகள்... வாடகை வீடுகள்ல தான் இருக்காவ வே...
''தனியார் அமைப்பு ஒண்ணு, 'ஏழைகளுக்கு, இலவச வீடுன்னு சொல்லி, 600 பேரை சேர்த்து, வீடுகளுக்கான டோக்கனும் குடுத்திருக்கு... டோக்கன்ல எந்த முகவரியும் இல்ல வே...
''எண்ணுார், திருவொற்றியூர்ல வீடுகள் தர்றதா சொல்லியிருக்காவ... வீட்டை சுத்தி காம்பவுண்ட் சுவர், கேமரா, வாட்ச்மேன்னு பல வசதிகள் உண்டுன்னும் சொல்லியிருக்காவ வே...
''இதுக்காக, ஒவ்வொருவரிடமும், 5,000 முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்தாவ... இதுக்கு, ரசீதும் தரலை வே...
''இதுல, லோக்கல் அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருக்காம்... 'புகார் வந்தா, நடவடிக்கை எடுக்கலாம்'னு, போலீஸ்காரங்க கையை கட்டிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''எங்க இருந்து, தேடி பிடிச்சார்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''யாரைச் சொல்றீர் ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.
''அருப்புக்கோட்டை கல்லுாரி பேராசிரியை, நிர்மலா தேவி விவகாரம் சம்பந்தமா, சந்தானம் கமிஷனை, கவர்னர் நியமிச்சிருக்காரே... இவர், 12 வருஷத்துக்கு முன்னாடியே, 'ரிடையர்' ஆன, ஐ.ஏ.எஸ்., அதிகாரிங்க...
''இவரை எப்படி கவர்னர் தேடி கண்டுபிடிச்சார்னு, மாநில அரசுக்கே ஆச்சரியம்... கவர்னரின் செயலர் ராஜகோபால், நாலு அதிகாரிகள் பெயர்களை குறிச்சு குடுத்திருக்கார்... அதுல இருந்து, நேர்மையானவரான சந்தானம் பெயரை, கவர்னர், 'டிக்' அடிச்சிருக்காருங்க...'' என்றார்
அந்தோணிசாமி.
''வரவா, போரவா எல்லாருக்கும் பணம் குடுத்து அசத்தியிருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''யாருங்க அந்த வள்ளல்...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''சமீபத்துல, அக் ஷய திரிதியை வந்துச்சே... அன்னைக்கு தானம் குடுத்தா, அதே மாதிரி பல மடங்கு திரும்ப கிடைக்கும்கறது ஐதீகம் ஓய்...
''மதுரை வடக்கு தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, அன்னைக்கு, கட்சி அலுவலகத்துக்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாருக்கும், தலா, 100 ரூபாய் குடுத்து அசத்தியிருக்கார்...
''இந்த தகவல் பரவி, அக்கம் பக்கம் இருந்த பொதுமக்களும் திரண்டு வந்துட்டா... இல்லேன்னு சொல்லாம, காலையில இருந்து, மதியம் வரைக்கும், 100 ரூபாய் குடுத்து அனுப்பியிருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை