Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

'டவுட்' தனபாலு

பதிவு செய்த நாள் : ஏப் 22, 2018
Advertisement
'டவுட்' தனபாலு

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: ஜெயலலிதாவின் பாதையில், முதல்வர் பழனிசாமியும், சிறு தொழில் முனைவோரை ஊக்குவிப்பவராக உள்ளார்.

டவுட் தனபாலு: 'பழனியும், பன்னீரும், எலியும், பூனையுமா இருக்காங்க'ன்னு சில நாட்களுக்கு முன், தகவல் வெளியாச்சு... அதைச் சரிகட்ட தான், பரஸ்பர பாராட்டுங்கற கொள்கையில, ரெண்டு பேரும் தீவிரமா இறங்க முடிவு பண்றீங்களோன்னு மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை: நடப்பு நிதியாண்டில், தமிழக அரசுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மத்திய நிதிக் குழுவிடம் மனு வழங்கியுள்ளார். எனவே, அதிக நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

டவுட் தனபாலு: 'பல்வேறு விவகாரங்களில், பா.ஜ.,வின் கூட்டணிக் கட்சிகள் கூட, மத்திய அரசை எதிர்க்கும் சூழலிலும், மாநில நலனுக்காக நாங்கள் மிக இணக்கமா இருந்திருக்கோம்... அதைப் பலமுறை, பகிரங்கமாக தெரிவித்தும் இருக்கோம்'கற, தமிழக அரசின் நிலைப்பாட்டையும், அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தாரா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

பத்திரிகை செய்தி: காவிரி டெல்டா மாவட்டங்களில், வரும், 25 முதல், 29 வரை, அ.தி.மு.க., பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

டவுட் தனபாலு: காவிரி விவகாரத்தில், எதிர்க்கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருது... ஆளும் அ.தி.மு.க., தரப்பும், தன் பங்குக்கு, அடுத்தகட்ட முயற்சியில் இறங்குது... 'கடந்த கால, காங்., - தி.மு.க., அரசுகளால் தான், இந்த நிலை'ன்னு, குற்றஞ்சாட்டுவதைத் தாண்டி, இந்தப் பொதுக் கூட்டம் வேறெதையும் பேசுறது, 'டவுட்' தான்...!

துணை ஜனாதிபதிவெங்கையா நாயுடு: நாட்டில், பெண்கள் மதிக்கப்படாததற்கு, கடந்த கால அன்னியர் ஆட்சியே காரணம். நமது பாரம்பரியப்படி, பெண்களை மதிப்போம்.

டவுட் தனபாலு: வழக்கமா, 'கடந்த கால காங்கிரஸ் அரசு'ன்னு தானே ஆரம்பிப்பீங்க... இப்போ என்ன, நுாற்றாண்டுக்கு முந்தைய காரணங்களை தேடுறீங்க... பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, கடுமையான தண்டனையை, உடனடியாக வழங்கினாலே, பாரம்பரியத்தை எளிதில் மீட்டுடலாம்... அதைப் பத்தியும் கொஞ்சம் பேசினால் என்னங்கறது தான்,என்னோட, 'டவுட்!'

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: தமிழகத்தில், போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், கவர்னரை ஒரு பக்கம் எதிர்த்துவிட்டு, மறுபுறம் ஆதரிக்கும், தி.மு.க.,வின் போராட்டம், வியப்பாக உள்ளது.

டவுட் தனபாலு: வியப்படைய இதுல என்னங்க இருக்கு... மத்திய அரசோடு இணக்கம்னு சொல்லி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதும், ஜனாதிபதி தேர்தல்களில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரிப்பதும், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை ஓட்டெடுப்பை தட்டிக் கழிப்பதுமாய் இருக்கும் நீங்க, இப்போ, பார்லிமென்டை முடக்குவதும், உண்ணாவிரதம் இருப்பதும், என்ன கணக்கோ, அதே தான் இதுவும்கறது, 'டவுட்'டேஇல்லாமல் விளங்கலியா!

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு:
மாநில நலன்களில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

டவுட் தனபாலு: எந்த ஒரு மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுப்பது இல்லை என்ற முடிவை, மத்திய அரசு அறிவித்து, ரெண்டு வருஷத்துக்கும் மேலாகுது... பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நீங்க, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி, போராட்டம் நடத்தியதும், திடீர்னு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து குறித்து பேசத் துவங்கியது, மாநில நலனுக்காகவா, கட்சியின் நலனுக்காகவா என்பதில், 'டவுட்' ஏற்படுதே!

Advertisement