சீனர்கள் போற்றும் நம்மூர் நாகூர் கனி.

பதிவு செய்த நாள் : மே 24, 2018
Advertisement

சின்னதாய் ஒரு சீனப்பயணம்

தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆங்கிலம் பேசமாட்டோம் என்று இன்னமும் பிடிவாதம் பிடிக்கும் தேசமிது.

தேமதுரத்தமிழோசை காதில் விழாதா? என்று ஏங்கத்தவித்த வேளையில் அங்குள்ள செங்காவ் நகரில் உள்ள யுடா என்ற ஐந்து நட்சத்திர ஒட்டலில் உணவருந்திக் கொண்டு இருக்கும் போது ஒரு தமிழ்க்குரல் கேட்டது.

குரலுக்கு சொந்தக்காரர் கனி என்கின்ற நாகூர் கனி.அந்த ஒட்டலின் முக்கிய சமையல் கலைஞராக இருக்கிறார் அவர் அங்கு தரும் தேதரா என்ற டீக்கு சீனர்கள் பலர் அடிமை.பீர் குடிக்க வந்துட்டு இவர் போட்டுதரும் டீயை குடித்துவிட்டு செல்வர்.

கனி ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் கல்லுாரி படிப்பு முடித்தவர் இவரது அப்பா பிரமாதமாக டீ போடுவார் அவரிடம் இருந்து கனி டீ போடக்கற்றுக் கொண்டார் டீ மட்டுமின்றி சமையல் செய்வதிலும் கெட்டிக்காரராக இருந்தார்.

இதன் காரணமாக படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை வௌிநாட்டில் சமையல் செய்யும் வேலைதான் கிடைத்தது. செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்று முடிவு செய்து மலேசியா சென்றார் அங்கு இருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது சீனாவின் நம்பர் ஒன் ஒட்டல்களில் ஒன்றான இந்த ஒட்டலில் பணியாற்றுகிறார்.

தமிழன் என்று தெரிந்ததும் அன்பு மழை பொழிந்துவிட்டார் அங்கு இருந்த வரை மசால் தோசையும் ஊற்றிக் கொள்ள சின்ன வெங்காயம் மிதக்கும் சாம்பார் தொட்டுக்கொள்ள காரசட்னி புதினா சட்னி என்று கனி விசேஷமாக கவனித்தில் நாக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நன்றி சொன்னது. ஒட்டலில் அன்று காலை 150 வகையான கான்டினல் உணவு ஆனால் இந்த தோசை சாம்பார் சட்னிதான் அனைத்திலும் உயர்வாக இருந்தது சுவைத்தது.

நாகூர் கனி தன் அன்பான அணுகுமுறை காரணமாக ஒட்டலில் செல்வாக்கு மிக்கவராக வலம் வருகிறார் இந்தியாவில் இருந்து குழுவாக வருபவர்கள் இந்த ஒட்டலுக்குதான் வழக்கமாக வருவர் காரணம் இவர் சமைத்துதரும் வகை வகையான இந்திய உணவுகள்தான்.

சீனர்கள் டீ விரும்பி சாப்பிடுபவர் ஆனால் அது பால் இல்லாமல் போடப்படும் கிரீன் டீ வகையறாவைச் சேர்ந்தவை, நான் ஒரு டீ போட்டுத்தர்ரேன் சாப்பிட்டு பாருங்கள் என்று நம்மூர் மசாலா டீ போல போட்டுத்தந்ததில் இப்போது இந்த டீகுடிக்கவே தனிக்கூட்டம் வருகிறது.

ஒரு சொட்டு சிந்தாமல் இவர் டீ ஆற்றும் அழகைப் பார்ப்பதில் அவர்களுக்கு இன்னும் ஆனந்தம்.

தமிழன் என்றதும் நம் மீது அப்படி ஒரு பாசம் பார்த்த வேலையை அப்படியே அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு வாங்க சீனாவை சுற்றிப்பார்க்க போகலாம் என்று கிளம்பிவிட்டார் பிரமாதமாக சீன மொழி பேசுகிறார்.

இவரது குடும்பம் எல்லாம் தேவகோட்டையில்தான் இருக்கிறது இவர் மட்டுமே தொழில் நிமித்தமாக சீனாவில் இருக்கிறார் வருடத்திற்கு இரண்டு முறை ஊருக்கு வந்து செல்வார்.

சீனர்கள் பொரித்த உணவை விட அவித்த உணவை சாப்பிடுவர் இங்கே சைவம் என்ற கான்செப்ட்டே கிடையாது வாத்து கறி இவர்களது விருப்பமான உணவு முன்பெல்லாம் இந்தியர்கள் தெருவில் சென்றால் ஒரு ஜந்துவைப் போல பார்ப்பர் இப்போது அப்படி இல்லை மருத்துவம் படிக்கவும்,சுற்றுலாவாகவும் இப்போது நிறைய பேர் வருகின்றனர்

சிங்கப்பூரை போல சீனாவி்ல் தங்கி பணிபுரிய பெரிய நாட்டம் நம்மவர்களிடம் இல்லை தமிழர்கள் அங்கும் இ்ங்குமாக மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கின்றனர்.

நான் இங்கு கடந்த எட்டு ஆண்டுகளாக இருக்கிறேன் ஆரம்பத்தில் சீன மொழி பேசுவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது ஆனால் இப்போது என்னால் சீன மொழியை படிக்கவும் முடியும்.

சீனர்கள் தங்கள் மொழியில் நிறைய அக்கறை கொண்டவர்கள் எந்த மொழியில் உள்ள புலமை என்றாலும் அதைச்சீன மொழிக்குள் கொண்டுவந்துவிடுவர் நாட்டுபற்று கொண்டவர்கள் குடும்பத்தை மிகவும் நேசிப்பவர்கள் நன்றாக சாப்பிடக்கூடியவர்கள் தெருவிற்கு தெரு நிறைய சீன உணவகங்கள் இருக்கும் அனைத்திலும் மாலை வேளைகளில் குடும்பத்தோடு உட்கார்ந்து சந்தோஷமாக சாப்பிடுவது அவர்களது பழக்கம் இதனால் ஒட்டல் தொழில் இங்கு நன்றாகவே இருக்கிறது சீனாவின் வளர்ச்சி அபாரமாகவும் அசுரத்தனமாகவும் இருக்கிறது இந்த வளர்ச்சி விரைவில் இந்தியாவில் ஏற்பட வேண்டும் அதுதான் என் ஆதங்கம் என்று சொன்ன நாகூர் கனியிடம் பேசுவதற்கான எண்:+86 135 9889 5806.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in
Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை