இது உங்கள் இடம்

பதிவு செய்த நாள் : டிச 16, 2017
Advertisement


லஞ்சத்தின் தலைமை உறைவிடம்!

ஆர்.பரமசிவன், துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'பத்திரப் பதிவு அலுவலகத்தில் பாகப் பிரிவினை செய்து, உரிய கட்டணம் செலுத்தி, ஓராண்டு ஆகியும், பத்திரப் பதிவு நடைபெறவில்லை' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தளவிற்கு, பத்திரப் பதிவு அலுவலகங்கள், லஞ்சத்தின் தலைமை உறைவிடமாக இருந்து வருவது வெட்கக்கேடு!எந்த பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றாலும், 'ஆலோசனை தெரிவிப்பது, கரன்சியை கறப்பது' என்ற ஒரே பாலிசியுடன், துறை செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதியிடம், தமிழக அரசு, '10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்ற, 77 அரசு அதிகாரிகள் மீது, வழக்கு தொடரப்பட்டுள்ளது' என, நகைச்சுவை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.லஞ்ச ஒழிப்புத் துறை ஒழுங்காக, முறையாக செயல்பட்டால், ஒவ்வொரு நாளுமே, குறைந்தபட்சம், 77 அதிகாரிகள் மீது, லஞ்சம் பெற்ற வழக்கை, தாக்கல் செய்ய வேண்டி இருக்கும்.அந்த அளவுக்கு, கரன்சி இல்லையேல் காரியம் இல்லை என்ற சித்தாந்தத்தை, பத்திரப் பதிவு துறை கச்சிதமாக செய்கிறது!ஆதார் எண் பதிவை, நில, சொத்து உரிமையாளரின் ஒவ்வொரு பத்திரத்துடனும் இணைப்பதை, மத்திய அரசு கட்டாயமாக்கினால், ஊழல் சில வினாடிகளில் வெளி வந்து விடும். அனைத்து பினாமி நடவடிக்கைகளும் மின்னலென வெளிப்பட்டு விடும்.நீதிபதி கிருபாகரன், 'லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது, ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என வினா எழுப்பியுள்ளார்; பொதுமக்கள் இந்த ஆலோசனையை நிச்சயம் ஏற்பர். சமூக ஆர்வலர்கள் மூலம், இது பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்!----------


சட்டம் படிக்க அனைவருக்கும் வாய்ப்பளியுங்கள்!

வி.தமிழ் ஆசை, மதுரையிலிருந்து எழுதுகிறார்: சட்டப் படிப்பு கல்வியை, அனைவரும் படிக்க வாய்ப்பு அளிக்கப்படாதது, மிகவும் வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் சட்டப் படிப்பு கல்வி, மற்ற மாநிலங்களை விட, மிகக் குறைவாகவே கற்பிக்கப்படுகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் சட்டப் படிப்பை கற்பிக்க, அதிக கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் சட்டக் கல்வியை கற்பிக்கும் நிறுவனங்கள், குறைவாகவே உள்ளன.தமிழகத்தில், சட்டப் படிப்பு கல்வி, கல்லுாரியில் சென்று படிக்கக்கூடிய படிப்பாக நடைமுறையில் உள்ளது. தகுதி தேர்வில் வெற்றி பெறாதோர், சட்டக் கல்வியை படிக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன், மாலை நேரக் கல்லுாரி கல்வி முறையில், சட்டக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.சட்டம் படிக்க விரும்பிய அனைவருக்கும் நுழைவுத் தேர்வு நடத்தி, தகுதியானோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு அதையும் தடை செய்து விட்டது.தமிழகத்தில் சட்டம் படிக்க விரும்பிய அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது; இதனால், பலர் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் படித்து வருகின்றனர்.சட்டக் கல்வியை எங்கு படித்தாலும், பார் கவுன்சில் வைக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வழக்கறிஞராக முடியும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை போல், ஒவ்வொரு மாவட்டத்திலும், சட்டக் கல்வி பயிற்சி நிறுவனங்களை அமைக்கலாம். மாணவர்களின் மதிப் பெண்களை கருத்தில் கொள்ளாது, விண்ணப்பித்த அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.இதேபோல், சட்டப் பல்கலைகள் மூலம், அனைத்து வயதினரும் கற்கும் வகையில், தொலைதுாரக் கல்வி முறை மற்றும் மாலை நேரக் கல்வி முறைகள் மூலம், சட்டக் கல்வி பயில வாய்ப்பு வழங்க வேண்டும்.சட்டக் கல்வியை அனைவரும் கற்கும் வகையில், அரசின் நடவடிக்கை மிக அவசியம்!----------


தோல்விகளே வெற்றிக்கு படிக்கட்டு!

எஸ்.அருள் துரை, பொன்னக்கனேரி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கக்கன்னியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேலு - உமா மகேஸ்வரி தம்பதியின் மகன் கார்த்திக். குடும்பச் சூழல் காரணமாக, நான்காம் வகுப்புடன் இவர் பள்ளிப் படிப்பை நிறுத்தி, கட்டுமான வேலைக்கு சென்று வந்தார். தேசிய குழந்தை தொழிலாளர் மீட்பு திட்ட அதிகாரிகள், 2007ல் அவரை மீட்டு படிக்க வைத்தனர்.மே 7ல் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், கார்த்திக், 1,156 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். கார்த்திக் என்ற குழந்தை தொழிலாளி, சாதனையாளராக மாற, மிகவும் துணையாக இருந்தது, நேர்மறையான கண்ணோட்டம் தான். தன் வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவித்த அவர், தோல்வியை கண்டு பயந்து பின்வாங்கியிருந்தால், சாதனையாளர் என்ற தளத்திற்கே வந்திருக்க மாட்டார்.ஒவ்வொரு ஆண்டும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, சந்தோஷமும், சோகமும், பல மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் காணப்படுகிறது. பலர், தங்கள் மதிப்பெண்ணை பார்த்தவுடன், சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்; சிலர், சோகத்தில் வீட்டின் மூலையில் முடங்கிக் கிடக்கின்றனர்.தேர்வு முடிவுகளை சிறிதும் எதிர்பார்க்காத மாணவர்கள், தவறான முடிவுகளை எடுத்து இறந்தும் போயிருக்கின்றனர்; பலர் இறக்க முயற்சித்து தடுக்கவும் பட்டுள்ளனர்; ஏன், இந்த அவசர கோலமான முடிவுகள்...இவற்றை ஆராய்ந்து பார்த்தோமெனில், தோல்வி பற்றிய எதிர்மறையான கண்ணோட்டங்கள் தான் காரணமாக அமைகிறது. தோல்வியை சந்திக்க தயக்கம் காட்டுதல், தோல்வியை ஏற்க மறுத்தல், என் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் தான் எதுவுமே நடக்க வேண்டும் என்ற அழுத்தமான நம்பிக்கைேயாடு நாட்களை கடத்துதல் ஆகியவையே காரணங்களாகத் தெரிகின்றன!

'தோல்வியை கண்டு, என் பெற்றோர், நண்பர், உறவினர் மற்றும் பக்கத்தில் வசிப்போர், என்னை பற்றி என்ன நினைப்பர்...' என்ற எண்ணத்தை, மனதில் மிகவும் ஆணித்தரமாக ஓட விடுகின்றனர். அதன் பலன், பல நேரங்களில் விபரீதமான முடிவுகளுக்குள் சிக்கி விடுகின்றனர். வாழ்க்கையில் முன்னேற, பல வழிகள் உண்டு. அதே போல், சந்திக்கும் தோல்விகளிலிருந்து வெளிவரவும், பல வழிகள் உண்டு. இதை முழுமையாக உணர்ந்து, வெற்றிப் பாதையை அடைய முயற்சிக்க வேண்டும்!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை