Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

இது உங்கள் இடம்

பதிவு செய்த நாள் : நவ 23, 2017
Advertisement
  இது உங்கள் இடம்

போயஸ் கார்டனாக மாற்றி இருப்பார்!
அ.சேகர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: குற்றவாளிகள் சிலர், தங்கள் பண வலிமை, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, சிறைச்சாலைகளை சொர்க்க பூமியாக மாற்றுகின்றனர். சிறைக்கு செல்வதற்கும் அஞ்சுவதில்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஆளும் காங்கிரசின் முக்கிய பிரமுகர்களின் ஆதரவுடன், லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார், சசிகலா. அதை, சிறைத் துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா என்ற நேர்மையான அதிகாரி கண்டுபிடித்தார்.
தனியார், 'டிவி' சேனல்களிலும், சசிகலா சுதந்திரமாக சிறைக்கு வெளியே நடமாடுவதைப் போன்ற காட்சி ஒளிபரப்பானது. கைதிக்குரிய சீருடை இல்லாமல், வெளியில், 'ஷாப்பிங்' சென்று வருவது போன்ற ஒரு வீடியோவும் வெளியானது.கடுப்பான கர்நாடக அரசு, டி.ஐ.ஜி., ரூபாவை போக்குவரத்து துறைக்கு துாக்கிஅடித்தது. 'சிறைத் துறை, டி.ஜி.பி., சத்திய நாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி, சசிகலா வகையறாக்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கினார்' என, பகிரங்கமாக ரூபா குற்றம் சாட்டினார்.வேறு வழியின்றி, கர்நாடக அரசு ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. விசாரணையில், 'முறைகேடுகள் நடந்தது உண்மை' என, தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.சசிகலாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பு சலுகைகளும் அதிரடியாக ரத்து செய்து விட்டது, கர்நாடக அரசு. சிறைத் துறை அதிகாரிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தை, மேல் விசாரணை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது; இது
வரவேற்கத்தக்கது.ரூபா போன்ற ஒருசில நேர்மையான அதிகாரிகள் பணிபுரிவதால் தான், சசிகலா போன்ற செல்வாக்குமிக்க கிரிமினல் குற்றவாளிகள் சிறைவாசம் அனுபவிக்க அஞ்சுகின்றனர். இல்லையென்றால், சசிகலா பரப்பன அக்ரஹார சிறையையே, இந்நேரம் போயஸ் கார்டனமாக மாற்றி இருப்பார்!
புண்ணியவான்களேவழி விடுங்களேன் ப்ளீஸ்!
என்.நக்கீரன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: தமிழக அரசு பணியில், குரூப் - 4 பிரிவில், 9,351 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முதன்முறையாக, வி.ஏ.ஓ., பணிக்கும் சேர்த்து, ஒரே தேர்வை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர், குறைந்தபட்சம், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதற்கு முன், குரூப் - 4 பதவிக்கு, 12 லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு, 15 லட்சம் பேரும் என, 27 லட்சம் பேர் விண்ணப்பம் அனுப்பிஇருந்தனர்.இம்முறை, 9,351 பதவிகளுக்கு, 18 லட்சம் பேர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு படித்தோர் ஒரு லட்சம் பேர் தான் விண்ணப்பிப்பர். இளங்கலை, முதுகலை, இன்ஜினியரிங் படித்தோர் என, 17 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அனுப்புவர் என, கணக்கிடப்பட்டுள்ளது.குரூப் - 4 தேர்வில், 10ம் வகுப்பு படித்தோர், தம்மை விட அதிகம் படித்தவர்களோடு போட்டியிட்டு, நிச்சயம் வெற்றி பெற முடியாது.பத்தாம் வகுப்பு படித்தோர், குரூப் - 3, குரூப் - 2, குரூப் - 1 தேர்வுகளை எழுத முடியாது. இவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, குரூப் - 4 மட்டுமே!டி.என்.பி.எஸ்.சி.,க்கு விடுக்கும் வேண்டுகோள்...குரூப் - 4 பதவிக்கு, பட்டதாரிகள் விண்ணப்பிக்க தடை விதிக்க வேண்டும்.அவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., அளிக்கும் வேலைவாய்ப்புகளை விட, வங்கிகள், இன்சூரன்ஸ், ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் போன்ற மத்திய அரசு பணிகளில் சேர வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.பத்தாம் வகுப்பு மட்டும் படித்திருக்கும் பாவப்பட்டோருக்கு வேலை கிடைக்க, பட்டதாரி புண்ணியவான்கள் வழி விட வேண்டும். அப்படி செய்வது தான் நியாயம், தர்மமாக இருக்கும்!
பாசமிகு தொண்டனின் ஆசைகள்!
எம்.ஆர்.ஜி.பிரபாகரன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், கழகத்தின் உண்மையான தொண்டனின் அன்பான வேண்டுகோள்...எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்துவதற்கு நன்றி. 2018ல், நுாற்றாண்டு நிறைவு விழாவை கழகத்தின் சார்பாக, சென்னையில் மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும்.அதில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், வெளி மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், திரை உலக பிரமுகர்கள்...எம்.ஜி.ஆருடன் நடித் தோர், பழகியோர், பத்திரிகையாளர்கள் மற்றும், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது அவருடன் பணியாற்றிய, அரசு அதிகாரிகளை அழைக்க வேண்டும்.எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் வழங்கிய அவரின் அண்ணன், எம்.ஜி.சக்ரபாணியின் மகள், லீலாவதிக்கு கழகம் சார்பில், ஒரு கோடி ரூபாய் வழங்கி கவுரவிக்க வேண்டும்.லீலாவதியின் ஒரு சிறுநீரகம், எம்.ஜி.ஆரின் உடலுடன், மெரினா கடற்கரையில், அவரது நினைவிடத்தில் உள்ளது.ஒரு சிறுநீரகத்துடன் வாழ்ந்து வரும், லீலாவதிக்கு சிறப்பு செய்தால், எம்.ஜி.ஆரின் ஆன்மா மகிழ்ச்சி அடையும். பக்தர்கள் சந்தோஷம் அடைவர்.இரு அணிகளும் இணைந்து சிறப்பாக செயல்படுவதால், நிச்சயம் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும்.அது கிடைத்தவுடன், அம்மாவுக்கு துரோகம் செய்து, கட்சிக்கும் ஆட்சிக்கும் பழிச்சொல் ஏற்படுத்தி, மர்ம மரணத்துக்கு காரணமான, சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாக செயல்படும் துரோகிகளை களை எடுங்கள்.அது அமைச்சராக இருந்தாலும், துணிவுடன் துாக்கி எறியுங்கள்! ஒன்றரை கோடி தொண்டர்கள், என்றும் உங்களுடன் இருப்போம்.முதல்வர் மற்றும் துணை முதல்வர், தினமும் சந்திக்க வேண்டும். மக்களின் குறைகளை அறிந்து போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேரள முதல்வர், பினராயி விஜயனைப் போல எளிமையை கடைப்பிடித்து, மக்களோடு மக்களாக சகஜமாக பழக வேண்டும். 'இசட்' பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என, முதல்வர் பழனிசாமி கூற வேண்டும்!

Advertisement