Advertisement
டீ கடை பெஞ்ச்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஏப்
2015
00:00

தி.மு.க.,வில் ஜூன் மாதம் அழகிரி, 'ரிட்டர்ன்ஸ்!'

''எல்லாமே, வியாழக்கிழமை நடக்குது பாருங்க...'' என, புதிர் போட்டபடி, பெஞ்ச் விவாதத்தைத் துவக்கிய அந்தோணிசாமி, நாயரைப் பார்த்து, ''வணக்கம்...'' என்றார். அப்படியெனில், 'சூடான டீ, அவசரமாய் வேண்டும்' என அர்த்தம்!

''என்ன விவரம் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''சொல்றேன் கேளுங்க...'' என, அண்ணாச்சியைப் பார்த்து, விவரம் சொல்லத் துவங்கினார் அந்தோணிசாமி...

''தமிழகத்துல, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ம் தொடங்கி, 31ம் தேதி முடிவடைந்தது... 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 19ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதி முடிவடைந்தது. இந்த பொதுத் தேர்வுகளும் வியாழக்கிழமைகளில் தொடங்கிச்சு...

''தேர்வு முடிவுகள் வெளியாகப் போறதை, ஏப்ரல் 23ம் தேதி அறிவிச்சாங்க... அந்த நாளும், வியாழக்கிழமை தான்... பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7ம் தேதி வெளியாகுது... 10ம் வகுப்பு தேர்வு முடிவு, 21ம் தேதி வெளியாகுது... இந்த ரெண்டு நாளுமே, வியாழக்கிழமை தான்... எப்பூடி... பள்ளிக் கல்வித் துறையில, யாரு இப்படி வியாழக்கிழமை சென்டிமென்டுக்கு அடிமையாகி இருக்காங்கன்னு பார்க்கணும்ங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''லிப்ட்ல போறதுக்கு, அமைச்சர் பயப்படுதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''எந்த அமைச்சரு... லிப்ட்டுல அப்படி என்ன விசேஷம் இருக்கு, பயப்படுற அளவுக்கு...'' என்றார் அன்வர்பாய். இவர், 'எஸ்கலேட்டர்' நகர்ந்து கொண்டிருக்கும்போதே, அதிலேயே, ஏறுவார்; இறங்குவார். அவ்வளவு தைரியம்.தொடர்ந்தார் அண்ணாச்சி...

''சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆபீசு, தலைமை செயலகத்துல, மூணாவது மாடியில இருக்கு வே... இவர் ஒரு நாள், ஆபீசுக்குப் போக, லிப்ட்டுல ஏறி இருக்காரு... அவரை கண்டதும், உள்ளே இருந்த, லிப்ட் ஆபரேட்டரு, வேகமாக எழுந்து நின்னு, வணக்கம் போட்டாரு... இதைப் பார்த்து, அமைச்சர் திடுக்கிட்டுப் போயி திரும்ப, லிப்டு கதவு, இவர் மேலே வேகமா மோதிட்டு... அதுல பயந்தவரு தான்... சாமிக்கு நேர்ந்து விட்டா மாதிரி, 'இனி லிப்டு பக்கமே போக மாட்டேன்'னு படி ஏறிக்கிட்டிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''பெரிய லாபம் இல்லை... ஆனா, சின்ன நஷ்டத்துக்கு வாய்ப்பு இருக்கு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''சட்டசபை தேர்தலுக்கு முன், மாஜி மத்திய அமைச்சர் அழகிரியை, கட்சிக்குள்ள சேக்கிறதுக்கு, தி.மு.க., பொருளாளரு ஸ்டாலின் பச்சை கொடி காட்டிட்டாரு... ஸ்டாலின் தரப்புல செயல்படுற சர்வே டீம், அழகிரியை சேர்க்கிறதுனால, பெரிய லாபம் இல்லன்னாலும், சின்ன நஷ்டம் இருக்கும்னு சொல்லியிருக்கு...

''கடந்த 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல்ல, அழகிரியை நீக்கியதால, 50 தொகுதிகள்ல குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்துல, தி.மு.க., தோல்வியை தழுவிச்சு... தென் மாவட்டங்கள்ல, தலா நாலைந்து ஒன்றிய செயலர்கள், அழகிரி ஆதரவாளர்களா இருக்காங்க... அதனால, ஜூன் மாதம் கூடுகிற பொதுக்குழுவுல, அழகிரியை சேர்க்கிற தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இருக்கு பா...'' என்றார் அன்வர்பாய்.நண்பர்கள் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது!

நீண்ட நேரம் நடந்த மாநாட்டால் அமைச்சர் கடுப்பு!

''விசாரணை வளையத்திற்குள் இருக்கார் ஓய்,'' என்றபடி பெஞ்ச்சிற்கு வந்தார் குப்பண்ணா.

''யாரு வே...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

''திராவிட கட்சி யின் தலைவர் பெயரை கொண்ட அந்த காம்ரேட் எம்.எல்.ஏ., ஆளுங்கட்சி மேலே, அதீத பாசத்துடன் செயல்படுறதா, ஏற்கனவே சொந்த கட்சிகாராளே முணுமுணுக்கறா... இப்ப, அந்த கட்சிலேர்ந்து, ஒரு விதவைப் பெண், அவர் மேலே, மேலிடத்துக்கு ஒரு புகார் சொல்லி இருக்காங்க... இதனால, மூணு பேர், இவரைப் பத்தி தீவிரமா விசாரிச்சுண்டு இருக்கா ஓய்... இப்ப, எம்.எல்.ஏ.,க்கு கிலி...'' எனக் கூறி, வயிறு குலுங்கச் சிரித்தார் குப்பண்ணா.

''அமைச்சரின் உறவினரா இருந்தா, எல்லா வசதியும் கிடைக்குது வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''இப்ப யாருக்கு என்ன வசதி கிடைச்சுடுத்துன்னு, நீர் ஏங்கித் தவிக்கிறீர்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''எனக்கொரு ஏக்கமும் இல்லே... உங்களைப் போல, நண்பர்கள் இருக்குறப்ப, எனக்கென்ன குறைச்சல்... மகிழ்ச்சியாவும், பொழுதொரு சிரிப்புமா தான் இருக்கேன்... சென்னை பொதுப்பணி துறை அலுவலகத்தைப் பத்திச் சொல்ல வந்தேன்...

''அங்கே, இளநிலைப் பொறியாளராக உள்ள பெண், அரசு காரில் வேலைக்கு வந்துட்டு போறாங்க... அவங்களுக்கு துறை சார்பில், கார் குடுக்கலே... அவங்களோட அக்கா புருசன், அமைச்சரா இருக்காரு... அந்த அமைச்சர் கவனிக்கும் துறையில் இருந்து, கார் குடுத்திருக்காவ...

''இதை பார்க்கும் சக ஊழியர்கள், 'அமைச்சரோட சொந்தக்காரங்களுக்கு அடிக்கிற யோகத்தைப் பாருவே...'ன்னு பேசிக்காவ...'' என்றார் அண்ணாச்சி.

''மாநாடு நீண்ட நேரம் நடந்ததால், அமைச்சர் கடுப்பாயிட்டார் பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''மாநாடா... இப்போதைக்கு நடக்க இருந்த, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையும் ஒத்தி வச்சிட்டாங்க... வேற ஒரு மாநாடும் நடக்கலியேங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''அசாம் மாநிலம் கவுகாத்தியில், மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு நடந்துச்சு பா... இதுல, தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்துக்கிட்டாரு... காலை, 10:30 மணிக்கு துவங்கிய மாநாடு, இரவு, 8:00 மணி வரை நடந்துச்சு...

''மதியத்தோட மாநாடு முடிஞ்சிடும்ன்னு நினைச்சிட்டிருந்த அமைச்சருக்கு, செம்ம கடுப்பு... சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம, மாநாடு முழுக்க உட்கார்ந்துட்டு, முடிஞ்சதும், வேகமா வெளியே ஓடியாந்துட்டாரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''நம்ம ஊர்ல ஒப்புக்குன்னு நடத்துறா மாதிரி, அவங்க நடத்த மாட்டாங்களேங்க...'' எனக் கூறிச் சிரித்தார் அந்தோணிசாமி.நண்பர்கள் சிரிக்க, நாயரும் சிரிக்க, டீக்கடை களை கட்டியது!

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.