'டவுட்' தனபாலு

பதிவு செய்த நாள் : ஜூலை 22, 2018
Advertisement
'டவுட்' தனபாலு

பா.ஜ., - எம்.பி., சத்ருகன் சின்ஹா: நான், பல ஆண்டுகளாக, பா.ஜ.,வில் இருக்கிறேன். பா.ஜ., என்னை விட்டுவிடவில்லை; நானும் அதைவிட்டு விலகவில்லை.

டவுட் தனபாலு: தனிப்பட்ட செல்வாக்கால் வெற்றி பெற்றதாக, தம்பட்டம் அடித்தீங்க... பா.ஜ.,வின் மீதும், மத்திய அரசின் செயல்பாட்டின் மீதும், நேரடியாக விமர்சனம் வைத்து வந்தீங்க... முடிந்தால், கட்சியை விட்டு நீக்கட்டும்னு, சவால் விட்டீங்க... இப்போ, திடீர்னு, எப்படி இப்படி மாறினீங்க... அடுத்த தேர்தலிலும், எதிர்க்கட்சிகளால், பா.ஜ.,வின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதுன்னு மனசுல பட்சி சொல்லுதோன்னு, 'டவுட்' வருதே...!

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, கடந்த நான்கு ஆண்டுகளில், 29 முறை டில்லிக்கு சென்றுள்ளேன். ஆனால், ஆந்திராவிற்கு நீதி வழங்குவதற்கு பதிலாக அவர்கள், என் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

டவுட் தனபாலு:
'சிறப்பு அந்தஸ்து என்பது, இனி, எந்த மாநிலத்துக்கும் கிடையாது... அதற்கு பதிலாக, சிறப்பு நிதி வழங்கப்படும்'னு, ஆட்சிக்கு வந்த உடனேயே, மத்திய அரசு சொல்லிடுச்சு... அன்றிலிருந்து, மூன்றாண்டுகள் அமைதியா இருந்தீங்க... கூடுதல் நிதி ஒதுக்கியதையும், வரவேற்றீங்க... ஏதோ கணக்கில், திடீர்னு, சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்தால், 'டவுட்' வரத் தானே செய்யும்...!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: சி.பி.ஐ.,க்கு அளிக்கப்படும், அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே, என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு:
அழுத்தம் கொடுக்கப்படுவதாக, சி.பி.ஐ., புலம்பியதா... இல்லை, கடந்த காலத்தைப் போல, சி.பி.ஐ., கூண்டுக்கிளியா இருக்குன்னு நீதிமன்றம் சொன்னதா... யார் மீதும், எந்த வழக்கிலும், உரிய ஆதாரம் இல்லாமல், குற்றஞ்சாட்டை நிரூபிக்க முடியாதே... அப்புறம் எதற்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், இவ்வளவு தயங்குறீங்க என்பது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி: என் தீவிர அரசியல் செயல்பாட்டை, மூன்று அல்லது ஆறு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள்.

டவுட் தனபாலு:
உங்களை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, தி.மு.க., இரண்டு பொதுத்தேர்தலையும் சந்திச்சிடுச்சு... தேர்தல் நேரத்தில் மட்டும், ஏதாவது அரசியல் கருத்து சொல்லும் நீங்க, அதன்பின், அமைதியாகிடுறீங்க... நானும் அரசியல்ல இருக்கேன் என்பதற்காகத் தான், அடிக்கடி இதைச் சொல்லி வர்றீங்களா என்ற, 'டவுட்' ஏற்பட்டிடப் போகுது...!

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்: சென்னையில், சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் வேதனை அளிக்கிறது. பாலியல் குற்றங்கள் குறைய, கடுமையான சட்டம் இயற்ற
வேண்டும்.

டவுட் தனபாலு: 'சட்டங்களால் மட்டும், பாலியல் குற்றங்களை தடுத்திட முடியாது... ராமரே நினைத்தால் கூட, அதை தடுக்க முடியாது'ன்னு, உங்க கட்சியைச் சேர்ந்த, மக்கள் பிரதிநிதிகள் சொல்லி வர்றாங்க... நீங்க, 'சட்டத்தால் எல்லாம் சாத்தியம்'னு, எதை வைத்து நம்புறீங்க என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: வரும், 2030க்குள், பொருளாதாரத்தில் வளர்ந்த, முதல் மூன்று நாடுகளுக்குள், இந்தியா இருக்கும்; இதை, எதிர்க்கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை.

டவுட் தனபாலு: நாட்டின் பொருளாதாரம், இப்போ எந்த நிலையில் இருக்கு... நீங்க பொறுப்பேற்ற, இந்த, நான்கு ஆண்டுகளில், பொருளாதாரம் எவ்வளவு மேம்பட்டிருக்கு என்ற கணக்கை சொல்லுங்க... பொதுமக்களுக்கு, அதிலும் குறிப்பாக, வாக்காளர்களுக்கு, இது தான் முக்கியம்... 2019, 2024, 2029 என, மூன்று தேர்தலுக்குப் பிறகு நடப்பதை, இப்போது சொன்னால், சாமானியர்களிடம் எடுபடுமாங்கறது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை