சொல்கிறார்கள்

பதிவு செய்த நாள் : மார் 25, 2018
Advertisement

நந்தியாவட்டைகை கொடுக்கும்!

சென்னையை சேர்ந்த அழகுக்கலை நிபுணர், மோகனா: 18 ஆண்டுகளாக பியூட்டிஷியனாக இருந்து வருகிறேன். இத்துறையில் புதிது புதிதாக, 'அப்டேட்' செய்வது சிறப்பு. தற்போது, பூக்களில் செய்யும் நகை, வண்ணமயமான அலங்காரம் தான், 'லேட்டஸ்ட் ட்ரெண்ட்!' பூக்களிலேயே ஜடை, மாலை, நெற்றி சுட்டி என, அனைத்தும் செய்யலாம்.

உடுத்தும் புடவைக்கு ஏற்ப, பூக்களில், 'ஸ்பிரே' செய்து, வண்ணங்களை உருவாக்கலாம். திருமணம், வரவேற்பு நாட்களில் கூட, பூக்களை விரும்பாத சில பெண்கள், தவிர்ப்பதுடன், தலைமுடியை, லுாசாக விட விரும்புவர். அவர்களுக்காக, சாட்டின், பிளாஸ்டிக்கில் பெரிய பூக்கள் டிசைன் செய்து, அதில் கற்களை பதித்து, அரை முழம் அளவு தயார் செய்து, முடியோடு பொருத்தி விடுவோம்.

இதன் அடுத்த கட்டமாக, பூக்களை வைத்து நகை செய்வதும், லேட்டஸ்ட் பேஷனாகி இருக்கிறது. வளைகாப்பு, சீமந்தம் நிகழ்ச்சியின் போது, அந்த பெண்களால், அதிக எடையுள்ள நகைகளை சுமக்க முடியாது.அவர்களுக்கு மல்லிகை அல்லது நந்தியாவட்டை மொட்டு
களில் நெற்றி சுட்டி, கம்மல், ஹாரம், வளையல் என, டிசைன் செய்து கொடுக்கலாம்; புடவையின் வண்ணத்திற்கேற்பவும் செய்யலாம்.

ஸ்பிரே செய்வதால், பூக்கள் வாடாமலும், விசேஷம் முடியும் தினம் மாலை வரை, பூக்களில் செய்யும் நகைகள், புத்துணர்வாகவே இருக்கும்.பூக்களை வைத்து ஒட்டியாணம் கூட செய்யலாம். நடுப்பகுதியில் பெரிய பூவை வைத்தும், அடியில் செயின் தொங்கும் இடத்தில், மொட்டு
களை கோர்த்துக் கட்டியும் செய்வோம்.

இவற்றை செய்ய, மல்லிகை, விதம் விதமான ரோஜா, நந்தியாவட்டை, மரிக்கொழுந்து, சம்பங்கி, கலர் ஸ்பிரே, கோல்டன் பீட்ஸ், சமிக்கி தேவை. கலர் ஸ்பிரே தான், இதில் பெரிய முதலீடு. மற்றபடி பூக்களுக்கான முதலீடு தனி. அனைத்தும் சேர்த்து, 2,000 ரூபாய் தேவை.
கவரிங் நகை வாங்கினால், வாடகையே, 2,500 ரூபாய் கொடுக்க வேண்டும். பலரும் உபயோகித்தவை என்பதால், தனித்தன்மையை எதிர்பார்க்க முடியாது.

பூக்களில் செய்யும் போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டிசைனில் செய்ய முடியும். 3,000 ரூபாய்க்கு, மொத்த செட்டும் செய்து கொடுக்கலாம். பாதிக்கு பாதி லாபம் தரும் பிசினஸ் இது.
எல்லா பூக்களும் எப்போதும் கிடைக்கும் என, சொல்ல முடியாது; ஆனால், நந்தியாவட்டை எப்போதும் கை கொடுக்கும்.

சின்ன நந்தியாவட்டையை, கொண்டை, மாட்டல், நெற்றி சுட்டிக்கும், பெரிய பூக்களை, ஜடை பில்லைக்கும் பயன்படுத்தலாம்.பூக்கள் கட்டும் முறை, ஸ்பிரே செய்வது, நகை செய்முறை என, அனைத்தையும், ஒரே நாளில் கற்றுக் கொள்ளலாம்; பயிற்சி கட்டணமாக, 1,500 ரூபாய் வாங்குகிறேன்.

வண்டி நுழையும் அளவு இடைவெளி தேவை!

திருவண்ணாமலை மாவட்டம், அரும்பருத்தி கிராமத்தில் விவசாயம் செய்துவரும், வின்சென்ட்: எனக்கு சொந்த ஊர், திருச்சி. 1987ல், சென்னை வந்து டிரைவர் வேலை பார்த்தாலும், எனக்குள் இருந்த விவசாய ஆர்வம் குறையவில்லை.

வேலை பார்த்த வீடுகளில், மாடி, வீட்டுத்தோட்டம் அமைத்து பராமரித்தேன்.எட்டு ஆண்டுக்கு முன், என் விவசாய ஆர்வத்தை பார்த்து, அந்த வீட்டின் உரிமையாளர், நிலம் தேடி, மூன்றாண்டுக்கு முன், 3.5 ஏக்கர் வாங்கி கொடுத்து, விவசாயம் பார்க்க கூறினார்; கிணற்று பாசனம், இயற்கை விவசாயம் தான்.

வெங்காயம், கீரை, வாழை, நெல் சாகுபடி செய்து வருகிறேன். நிலத்தின் உரிமையாளர் அடிக்கடி வந்து, விளைவதில் கொஞ்சம் வாங்கி போவார். போன மாதம், மாப்பிள்ளை சம்பா நெல் அறுவடை முடித்தோம். இப்போது, 20 சென்ட் நிலத்தில் வெங்காயம் நட்டுள்ளேன்.மேலும், 20 சென்ட்டில், கீரை, காய்கறிகளும்; 40 சென்ட்டில், 70 பூவன் வாழை கன்றுகளையும் நட்டேன். அந்த அளவு நிலத்தில், 900 கன்றுகளுக்கு மேல் நடலாம்.

ஆனால், அந்த காலத்தில், 'வண்டியோட வாழை' அதாவது, வாழைத்தோப்பில் வண்டி நுழையும் அளவு இடைவெளி வேண்டும் என, பழமொழி சொல்வர்.இவ்வாறு இருந்தால், பக்கக் கன்றுகள் நிறைய உருவாகும். அதன் மூலமாக, ஒரே நடவில் கூடுதல் வருமானம் எடுக்க
முடியும்.

வாழை நடவு செய்ததும், ஊடுபயிராக மிளகாய், கத்தரி போட்டு அறுவடை செய்து விட்டேன். வாழை மரத்தை சுற்றி வரும் பக்கக் கன்றுகளை கழிக்காமல், அப்படியே விட்டு விடுவேன்.
அதேபோல், தார் அறுவடை செய்த மரங்களை வெட்டாததால், அது மட்கி, பக்கக் கன்றுகளுக்கு உரமாகவும், இலைகளை அறுக்காததால், வாழை மரங்கள் செழிப்பாகவும் வளர்கின்றன. பக்கக் கன்றுகளிலும் இப்போது தார் வருகிறது. ஒவ்வொரு வாழைத்தாரும், 12 - 18 கிலோ வரை உள்ளது.

பயிரில் நோய் அறிகுறி தெரிந்தால், நாட்டு மாட்டு சிறுநீரை தண்ணீரில் கலந்து தெளிப்பேன். ஊட்டத்துக்கு அமுத கரைசலும், அடியுரமாக நாட்டு மாட்டு எருவும் தான் போட்டு வருகிறேன்.
வாழை நட்டு, 15 மாதம் ஆகிறது. இதுவரை, 90 தார்களை அறுவடை செய்ததில், 1,350 கிலோ அளவுக்கு பழங்கள் கிடைத்தன.

ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு, காஞ்சிபுரத்தில் இருக்கும், ஆர்கானிக் கடைக்கு கொடுத்து வந்ததில், 54 ஆயிரம் ரூபாய் வருமானம் ஆனது. 15 ஆயிரம் ரூபாய் செலவு போக, 39 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. பக்கக் கன்றுகள் நிறைய உள்ளதால், ஆண்டுக்கு, 300 தார் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

தொடர்புக்கு: 88702 90501.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை