உயிர் சங்கிலியை உடைத்து விட்டோம் | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

உயிர் சங்கிலியை உடைத்து விட்டோம்

பதிவு செய்த நாள் : டிச 12, 2018
Advertisement
உயிர் சங்கிலியை உடைத்து விட்டோம்

சூழலியலாளர், கோவை சதாசிவம்: கொசுக்களால் ஏற்படும், 'டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா' போன்ற நோய்கள், இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகள் அனைத்தையும், பதம் பார்த்து வருகின்றன. கொசுவின் முட்டையிலிருந்து ஒவ்வொரு படிநிலையிலும், அதை அழிக்க, சில உயிரினங்களை இயற்கை வைத்திருந்தது.மழைக்காலங்களில் அதிகமாக தென்படும் தட்டான் பூச்சிகள், நீர்நிலைகளில் இருக்கும் கொசு முட்டைகளை சாப்பிடும். ஒரு சிறிய தட்டானுக்கு, 30 ஆயிரம் கண்கள் இருக்கும். தட்டானிடமிருந்து கொசு முட்டைகள் தப்பவே முடியாது. ஆனால், இன்று தட்டான்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 25 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தட்டான் பூச்சிகளை, பூச்சிக்கொல்லி தெளித்து, அழித்து விட்டோம்.அன்றைய காலங்களில், நம் வீடுகளின் முற்றத்தில் பந்தல் போட்டிருப்பர். அதன் இண்டு இடுக்குகளில், சிறிய அளவிலான பழுப்பு நிற வவ்வால்கள் இருக்கும். மாலை, 6:00 - 7:00 மணி வரை உள்ள, ஒரு மணி நேரத்தில், ஒரு வவ்வால், 600 கொசுக்களை சாப்பிட்டுவிடும். ஒரு வீட்டுக்கு இரண்டு வவ்வால்கள் இருந்தால் போதும், கொசுத் தொல்லையின்றி நிம்மதியாக உறங்கலாம். அவையும் இப்போது குறைந்து விட்டன.பெண் கொசு மட்டும் தான் ரத்தத்தை குடிக்கும். ஆண் கொசுக்களின் உணவு, இலைகளின் சாறு மட்டுமே. இதை அறிந்த முன்னோர், வீடுகளைச் சுற்றி வேலி ஓரத்தில் நொச்சி, சோற்றுக் கற்றாழை, கற்பூரவல்லி தாவரங்களை வளர்த்தனர். ஆண் கொசுக்களுக்கு இவை அலர்ஜி என்பதால், பறந்து சென்று விடும். ஆண் கொசுக்களைப் பின் தொடர்ந்து, பெண் கொசுக்களும் சென்று விடும். இது இயற்கை உருவாக்கி வைத்திருந்த உயிர்ச் சங்கிலி; அதை உடைத்து விட்டோம்.கொசு முட்டை, பொரித்துப் புழுவாக மாற, 15 நாட்கள் ஆகும். புவியின் வெப்பம் அதிகரித்துள்ளதால், ஆறு நாட்களில் முட்டைகள் பொரித்து விடுகின்றன. நோய்க்கிருமிகளை பரப்பும் ஆற்றல், கொசுக்களுக்கு இல்லை. நாம் சாப்பிடும் உணவு வகைகளில், நிறைய கழிவுகள் உள்ளன. அவற்றில் பல, உடலை விட்டு வெளியேறாமல் தேங்கி இருக்கும். 1,000 பேரில், இரண்டு, மூன்று பேருக்கு, முறையாக கழிவு வெளியேறாது. இந்த கழிவுகள், புதிய நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்யும். இவைதான் புதிய நோய்களின் பிறப்பிடமும் கூட.நுண்ணுயிரிகளை உடைய மனிதர்களை, கொசு கடிக்கும்போது, அந்த நுண்ணுயிரி, கொசுவுக்கு கடத்தப்படுகிறது. கொசு மூலம் இவை, அடுத்தவர்களுக்கு பரவுகிறது. அதாவது மனிதர்கள், நோய்களை சமைத்து வைக்கின்றனர்; கொசுக்கள் பரிமாறுகின்றன. கொசு விரட்டி மருந்து நிறுவனங்களின் வர்த்தகம், ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய். ஆனால், கொசுவிரட்டி கலந்த காற்றை சுவாசிப்பதால், மனிதனுக்கு நுரையீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது. கொசு தப்பி விடுகிறது; நாம் சிக்கிக் கொள்கிறோம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X