Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

சிறப்பு பகுதிகள் செய்தி

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பதிவு செய்த நாள் : மார் 18, 2018
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போறீங்க... சோற்றுக்கே அதிகாரப் பிச்சை எடுக்கும் நிலைக்கு, தமிழக மக்களை மாற்றப் போறீங்களா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், ஆர்.கே.நகர், எம்.எல்.ஏ., தினகரன் பேட்டி:1967ல், அண்ணாதுரை, 1972ல், எம்.ஜி.ஆர்., 1991ல், ஜெயலலிதா எப்படி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினரோ, அதேபோல் மாற்றத்தை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, இதைத்தான் கூறினேன். பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், இதை நம்பவில்லை. இப்போதும், 'மாற்றத்தை ஏற்படுத்துவேன்' என, கூறுகிறேன். சட்டசபை தேர்தலில், அது நிகழ்வது உறுதி.


தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
கருத்து சொல்லும் விஷயத்தில், யாரையும் நான் போட்டியாகக் கருதவில்லை. 'டெக்னாலஜி' இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு விஷயத்திற்கும் உடனடியாக, 'ரியாக்ட்' செய்தாக வேண்டியுள்ளது. கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற வகையில், பல்வேறு விஷயங்களைப் பற்றி கருத்து சொல்ல வேண்டி உள்ளது; அவ்வளவு தான்.பா.ஜ., மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி:
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் எல்லா தலைவர்களும், தங்கள் பெயரில் என்னென்ன பதிவுகள் போடப்படுகின்றன என்பதை, எப்போதும் கண்காணிப்பது கடினம். தலைவர்கள் மட்டுமே அந்தப் பக்கங்களைக் கவனித்துக் கொள்கின்றனர் என்று சொல்ல முடியாது. அவர்கள் சார்பில், சிலர் செயல்படுவர். அப்படியிருக்கும் நிலையில், தவறுகள் ஏற்படுவது இயற்கையே.

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி
: வறட்சி மற்றும் 'வர்தா' புயல் பாதிப்புக்கு, ௬௨ ஆயிரம் கோடி ரூபாய் தேவை என, தமிழக அரசு அறிக்கை கொடுத்தது. ஆனால், மத்திய அரசோ, ௨,௦௦௦ கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது. தேசிய பேரிடர் நிதி என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. அதன்மூலம், நிவாரண நிதி தர வேண்டியது கடமை. ஆனால், மத்திய அரசு தன் கடமையைச் சரிவர செய்வது இல்லை; முதல்வர் பழனிசாமிக்கு, வற்புறுத்தும் துணிவுமில்லை.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜு பேட்டி:
சுதந்திரத்திற்கு பின், தி.மு.க.,வை அண்ணாதுரை துவங்கினார். அவரால், அக்கட்சி இன்றும் உள்ளது. அவரது மறைவுக்கு பின், எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவங்கினார். அவர் மறைந்து, 30 ஆண்டுகள் கழித்தும், அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளது. இந்த இரு தாய் கழகங்கள் தான், இங்கு வலுவாக உள்ளன; இவை தான் நிரந்தரமாக இருக்கும்.நினைப்பது நடக்காது என்பது தெரிந்தும், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை: மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், 'நீட்' தேர்வில், தமிழக சட்டசபை தீர்மானத்தை மதிக்காமலும் உள்ளது. எனவே, லோக்சபாவில், மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள, அ.தி.மு.க., மத்திய அரசுக்கு எதிராக, சந்திரபாபு நாயுடு கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.

தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர்,
கடும் விசனத்துடன் பேட்டி:காங்., ஆட்சியில் இருந்தபோது, 'பா.ஜ., இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என, சொன்னது இல்லை. 'அரசியல் கட்சிகளை ஒழிப்போம்' என, சொல்வது, குரோத எண்ணத்தையும், ஜனநாயக விரோத சிந்தனையையும் தான் காட்டுகிறது. 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்பது, அவர்களின் பகல் கனவு; காங்., இல்லாத இந்தியாவை, யாரும் கற்பனை செய்ய முடியாது.

'உண்மை விளம்பி நீங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு பேட்டி:
ஜெயலலிதாவால் உருவான ஆட்சி, எப்படியாவது நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆள்பவர்கள் அவ்வளவு துாரம் முயற்சிக்கின்றனர். ஆனால், ஜெயலலிதாவுக்குக் கிடைத்த ஓட்டு வங்கி, இவர்களில் யாருக்குக் கிடைக்கும் என்பதில், நிச்சயமில்லை. அது பல விதமாகப் பிரிந்தாலும், அ.தி.மு.க.,வில் தினகரனுக்கும் ஆதரவில்லாமல் இல்லை. 'பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மாட்டேன்' என, தினகரன் இன்று சொன்னாலும், நாளைக்கும் அதே நிலையில் இருப்பார் என, சொல்ல முடியாது.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு: உலக நாடுகளில் பலரும், தாய்மொழிக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இந்தியாவில், குழந்தைகளை ஆங்கிலத்தில் பேச வைக்கின்றனர் பெற்றோர். அந்த நிலை மாற வேண்டும். தாய் மொழியில் படித்தால் தான், நன்றாக புரியும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்த படிப்பையும், தாய் மொழியிலேயே படிக்க வேண்டும்.

நடிகர் பிரபு பேச்சு:
சினிமா கலைஞர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக, பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர், சினிமா மூலம் வந்தவர்கள் தானே... அவர்கள் சிறப்பாக ஆட்சி புரியவில்லையா... நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும், என் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவருக்காகவும், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வேன்.அ.தி.மு.க., லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி:
மத்திய அரசு மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போகின்றனர் என்ற தகவல், எங்களுக்கு தெரியாது. அப்படி கொண்டு வரும் பட்சத்தில், ஆதரவு அளிப்பதா என்பது குறித்து, கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, இன்னும் இரண்டு வாரம் கெடு உள்ளது. அதுவரை, பொறுத்து பார்ப்போம்.சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை:தமிழக அரசின் கடன் சுமை, நிதிப்பற்றாக்குறை அதிகரித்திருப்பது, கவலை அளிக்கிறது. இதற்குக் காரணம், மதுபானக் கடைகளை மூடியதே என, விளக்கமளித்திருப்பது, வேடிக்கையாக உள்ளது. மது விற்பனையால் வருவாயை நம்பியிருக்கும் அரசு, எப்படி படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும்?

Advertisement