எல்லாப் பூக்களும் எனக்கே! (தொடர் கதை)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2010
00:00

- மதுனிகா ராணி
தொடர் - 30
முன்கதைச் சுருக்கம்!
தன்னுடன் பழகிய பெண்களுக்கெல்லாம் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தான் யாத்ரா. அனிதா ரெட்டியை, அவள் கணவனுடன் சேர்த்து வைத்தான்; ஒபிலியா - வீரசமர் திருமணத்தை நிச்சயித்தான். தனக்கு, நேசிகா மீது காதல் உண்டா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, மூன்று சந்திப்புகளை செய்ய விரும்புவதாக தன் தோழிகள் முன்னிலையில் அறிவித்தான் யாத்ரா.
இனி —
முதலாம் சந்திப்பு: கடலும், கடல் சார்ந்த இடமும்.
சென்னை கடற்கரையிலிருந்து ஐம்பத்தியேழாவது நாட்டிகல் மைலில், அந்த மீன்பிடி குறுங்கப்பல் நின்று கொண்டிருந்தது. கப்பலின் உச்சியில், இதயத்தில் அம்பு தைக்கும் காதல் கொடி பறந்து கொண்டிருந்தது. கப்பல் முழுக்க, மின் பழங்களாலும், சர பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த கடலிலிருந்து, முழு நிலா மேலெழும்பிக் கொண்டிருந்தது.
தங்க மஞ்சள் நிறத்தில், பவுர்ணமி. பவுர்ணமியைக் கண்டதும், கடலலைகள் வழக்கத்திற்கு மாறாக குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன.
சூரியனும், சந்திரனும் மாறி மாறி குளிக்க, இயற்கை கட்டி வைத்த நீச்சல் குளம் தான் கடல். திரவ சிங்கமே சமுத்திரம். யாருக்கும் அடங்காத பாவனைகளை தோற்றுவிக்கும், "காக்டெய்ல்' உற்சாகபானம் தான் கடல். ஆயிரம் மர்ம முடிச்சுகளை ஒளித்து வைத்திருக்கும் போக்கிரி எழுத்தாளன் கடல். அள்ள அள்ளக் குறையாத கடல் உணவுகளை, மனிதனுக்கு வாரி வழங்கும் அமுதசுரபியே கடல்.
கப்பலின் மேற்தளத்தில், ஒரு மேஜையும், இரு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. மெல்லிய இசை வழிந்து கொண்டிருந்தது. தள தரையில் உதிரிப்பூக்கள் கொட்டப்பட்டிருந்தன.
"பேசிக்ஸ்' வகை, "ஸ்லிம்பிட்' சட்டையும், "கார்கோ' பேன்ட்டும், "அடிடாஸ்' ஷூவும் அணிந்திருந்தான்.
""வானெங்கும் தங்க விண் மீன்கள் முளைக்கின்றன... உலகிற்கு காதலின் மகிமையை எடுத்தியம்ப, இதோ முழு நிலாவும் எழும்பி விட்டது... நாம் இப்போது எந்த நாட்டிலும் நிற்கவில்லை. சர்வதேச கடல் எல்லையில் நிற்கிறோம். ஆழக்கடலில் நிற்பதால், கடல் பறவைகள் அதிகம் பறக்கவில்லை. வா நேசி... சுற்றி வருவோம். வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போல, புது காதல் தீவு கண்டுபிடிப்போம்!''
பதில் பேசாமல் முறுவலித்தாள் நேசிகா.
மேஜையில் போர்ட் ஒயின், ஒயிட் ஒயின், ரெட் ஒயின் மற்றும் ஷாம்பெய்ன் பாட்டில்கள் நின்றிருந்தன. பாலாடைக் கட்டிகள், பழத்துண்டுகள், நண்டு, இறால் உணவு வகைகள் பரப்பப்பட்டிருந்தன. மேஜையில் ஒற்றை உயர மெழுகுவர்த்தி.
""உனக்கு பிடித்த மூன்று பூக்கள் சொல்லேன், யாத்ரா!''
அவள் எதிர்பாராத பதிலொன்றை சொன்னான்.
""ஏய்... நீ இவ்வளவு ஆபாசமா பேசுவியா?''
""நீ, நான், கடல்... இப்பக்கூட மனசில நினைக்கிறதெல்லாம் பேசாவிட்டால் எப்படி? எனக்கு தெரிந்த கோடீஸ்வரர், வயது எழுபதிருக்கும். எப்ப பாத்தாலும் கண்ணியமா, இலக்கணம் கூடிய மொழியா பேசுவார். வாரத்தில் சில நாட்கள் தனியாக எங்காவது போய், குளிர்பதன மூட்டப்பட்ட காருக்குள் அமர்ந்து, கெட்டகெட்ட வார்த்தைகளை உரக்க பேசி மகிழ்வாராம். அவருக்கு அது ஒரு வடிகால். ஆண்களுக்கு மிக மிக பிடித்த பூக்களை, இறைவன் பெண்ணுடலிலேயே படைத்துள்ளான். இதை சொல்வதில் என்ன ஆபாசம் ஒளிந்திருக்கிறது?''
""உனக்கு நீச்சல் தெரியுமா யாத்ரா?''
""போன பிறவியில் நான் டால்பின் மீனாக பிறந்திருப்பேன் போல. நீச்சலின் அனைத்து வகைகளும் எனக்கு அத்துப்படி. அத்துடன், "சீ சர்பிங்' என சொல்லப்படும் கடல் சறுக்கலில் நான் கில்லாடி. கடல் எனக்கு இரண்டாம் வீடு. எனக்கு ஒரு ஆசை. நவீன வசதிகள் எதுவுமே இல்லாத தீவு ஒன்றில், நானும், என் காதலியும் ஒதுங்க வேண்டும். ஒரு நூறு வருடம், ஆதி மனிதன் வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும்.''
""ஆயிரம் பெண்களை ரசித்து பழகிய உனக்கு, ஒற்றை பெண் சலித்து போய் விடும். பெண்களை பார்க்க நகரம் திரும்பி விடுவாய்!''
""உனக்கு நீச்சல் தெரியுமா நேசி?''
""தெரியாது!''
""கடலாவது பிடிக்குமா?''
""கடற்காற்று எனக்கு ஒத்துக் கொள்ளாது. கடல் பயணம் எனக்கு குமட்டலை வரவழைக்கும். கடல் உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள நான் விரும்புவதில்லை. இன்று வந்திருப்பது உனக்கே உனக்காக!''
""வருடத்திற்கு எட்டு மாதங்கள் கடல் பயணம் மேற்கொள்ளும் மாலுமியாக நான் இருந்தால், என்னை காதலித்திருப்பாயா?''
""இப்ஸ் அண்ட் பட்ஸ் நான் யோசிப்பதில்லை.''
இரு கோப்பைகளில் ரெட் ஒயின் ஊற்றி, தனக்கொன்று வைத்துக்கொண்டு அவளுக்கொன்று நீட்டினான்.
""வேண்டாம்... எனக்கு பழக்கமில்லை!''
""யாரும் பார்க்காத போது, ஆண்களின் பழக்க வழக்கங்களை, பெண்கள் திருட்டு ருசி பார்ப்பர்; நீயும் பார். சிகரெட் வேண்டுமானாலும் குடி. கரை திரும்பியதும், யாரிடமும் சொல்ல மாட்டேன்!''
""நான் ஒயின் குடித்து போதை ஆகி, உன்னிடம் முறை தவறி நடந்து கொண்டால் என்னாவது?''
""உனக்கும், எனக்கும் இடையே முறை தவறிய விஷயங்கள் எதுவுமில்லை. சிறிது ஒயின் குடித்து விட்டால், எவ்வித தயக்கமும் இல்லாமல் சரளமாய் பேச ஆரம்பித்து விடுவாய்!''
""அப்டின்ற? சரி.... கொண்டா!''
ஓர் உயரப்புள்ளியில், இரு கோப்பைகளும் ஜிலிங்ஜிட்டாடின.
சிறிதளவு சூப்பிவிட்டு, ""இனிக்கல... கொடுக்காப்புளி மாதிரி துவர்க்குது...''
ஒரு கோப்பையை குடித்து முடித்தவள், ""ஏய்... நல்லாத்தான்டா இருக்கு... ஆனா, காலடி தரையை காங்கல!''
""ஒரு கோப்பைக்கே தரை காணாம போச்சுன்னா, நாலு கோப்பைக்கு எது எது காணாம போகும்?''
""டேய்... நீ ஒரு திமிர் பிடிச்சவன்டா. பெரிய இவன்னு உனக்கு நினைப்பு.''
""எத வச்சு சொல்ற?''
""மூணு சந்திப்புகளுக்கு பிறகு நீ, என்னை காதலிக்கிறியா, இல்லையான்னு அறிவிப்பாயாம். நீ பிரிட்டீஷ் வைசிராய்; நான் அடிமை இந்தியச்சி. நீ அரபு பணக்காரன்; நான் அடிமை கறுப்பி. முதலாளித்துவத்தின் ஆண் வடிவம் நீ; ஆணாதிக்கத்தின் மாறுவேடம் நீ.''
சிரித்தான் யாத்ரா.
""ஒரு அடிமைக்கு, ஓர் எஜமானனை பிளந்து கட்டும் அதிகாரம் எங்கிருந்து வந்துச்சாம். மூணு சந்திப்புகளுக்கு பின், உனக்கு என்னை பிடிக்கலேன்னா, பிடிக்கலைன்னு அறிவிச்சிட்டு போய்ட்டே இருக்கலாம். நாம் எப்போதுமே, கூட்டத்துக்கு நடுவே தான் பார்த்துக் கொள்கிறோம்; பேசிக் கொள்கிறோம். தனித்து மனம்விட்டு பேசத்தான் இந்த ஏற்பாடு. என்னோடு மோதி பார் என்கிறது உன் மேல் அவயம். மோதி பார்த்தேனா? மல்யுத்தத்துக்கு கூப்பிடுகின்றன உன் உதடுகள். யுத்தத்திற்கு முயன்றேனா? சுவைநீர் உறிஞ்சினேனா?''
""ரொம்ப பேச வைக்ற? நீ பெண்களுக்கான இறைத் தூதனா? பிச்சுப்புடுவேன் பிச்சு. இப்படி எத்தனை பேருடா கிளம்பியிருக்கீங்க? எங்களுக்கு எதையும் கொடுக்க சிபாரிசு தேவையில்லை. எங்களுக்கு வேண்டியதை நாங்களே எடுத்துக் கொள்வோம்.''
""உனக்கு நான் தேவையில்லை; ஒரு கோடி பெண்களுக்கு நான் தேவையாய் இருக் கிறேன்!''
""கல்யாண மாகட்டும்... உன்னை தேவைப்படும் கட்டுப்பாட்டில் நிறுத்தி வைக்கிறேன்.''
சிரித்தான்.
""ஒயின் நன்கு வேலை செய்கிறது!''
""உன்னிடம் எனக்கு பிடித்தது உன் பேச்சு; பிடிக்காததும் அதே தான். தம்பியாக உன்னை பாவித்து டாமினேட் பண்ணலாம். காதலனாக பாவித்து உன்னை காதலும் பண்ணலாம். டூ இன் ஒன் நீ. நீ பெண்களிடம் கனிய கனிய, உருக உருக பழகுகிறாய். ஆனால், அடுத்த கட்டம் தாவி, அவர்களுடன் நீ செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை; காரணம், உன்னின் சக்தி மீது உனக்கு நம்பிக்கை இல்லையோ?''
""பக்கத்து வீட்டு குழந்தைக்கு தனி பலகாரமும், தன்னுடைய குழந்தைக்கு ஒரு பலகாரமும் வைத்திருப்பாள் ஒரு தாய். என் மனைவிக்கு வைத்திருக்கும் பலகாரம் தான் செக்ஸ். என்னிடம் தாழ்வு மனப்பான்மையும் இல்லை; உயர்வு மனப்பான்மையும் இல்லை. தங்கத்தை அளவீடு செய்யும் டிஜிட்டல் தராசு போல், என்னை கனகச்சிதமாய் மதிப்பீடு செய்து வைத்திருக்கிறேன். புல்வெளியில் சவாரிப்பேன்; அற்பமாய் மேய மாட்டேன்!''
""என்னிடம் உனக்கு என்னென்ன பிடிக்கும்?''
""குரூப் டான்சர்களுக்கிடையே திரிஷாவை கண்டுபிடிப்பதா கஷ்டம்? தீக்கோழி, வான்கோழிகளுக்கிடையே, தோகை மயிலை கண்டுபிடிப்பதா கஷ்டம்? எனக்கு முரட்டு குதிரை தான் பிடிக்கும். அயர்ந்தால் சவாரிக்கும் என்னை அது குப்புறத் தள்ளிவிட்டு, குழியும் பறிக்க வேண்டும்!''
""வேற வேற?''
""சவால்களை நீ எதிர்கொள்ளும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது. சகோதரிகளே இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை நீ எதிர்கொண்ட விதம், சிம்ப்ளி சூப்பர்ப்! ஊமை செண்பகராமன், உன் மாஸ்டர் பீஸ் செட்டப். உன் அழகான இரு தங்கச்சிகளும், உன்னின் கூடுதல் தகுதி. நானும், எங்கப்பா மாதிரி, மைத்துனிகளின் அழகில் மயங்கலாம். கேட்டால், நான் காரணமல்ல, "லைக் பாதர், லைக் சன் தியரி...' தான் காரணம் எனக்கூறி தப்பித்துக் கொள்ளலாம்!''
""என் தங்கச்சிகளை பிராக்கட் போடலாம்ன்னு பகல் கனவு கூட காணாத... அது நடக்காது!''
""அம்மா பத்திரக்காளி... உன் எதிர்காலத் திட்டம் என்ன?''
""மிகச்சிறந்த உளவியல் துறை விரிவுரையாளரா பேர் எடுக்கணும். பின் புரொபசர் ஆகணும். அதன் பின் டீன், அதன் பின் ஏதாவது யுனிவர்சிட்டிக்கு துணைவேந்தராகணும்!''
"வி.சி., ஆக நீ இவ்வளவு கஷ்டப்பட வேணாம். நீ ஏதாவது ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போட்டா போதும் அல்லது ஆளுங்கட்சிக்கு தொந்தரவு பண்ற கட்சியிலிருந்து ஆளுங்கட்சி சேர, துணைவேந்தர் போஸ்ட் தரியான்னு பேரம் பேசணும்!''
""அரசியல் பேசாத... உன் எதிர்காலத் திட்டம் என்ன?''
""உலக சினிமாவே போற்றி பாராட்டும் சினிமா டைரக்டராய் பரிமளிக்க வேண்டும். இரு அறிவான பெண் குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும். உலக நாடுகள் பூராவும் சுற்றி, அந்த பிரசித்தி பெற்ற நாடுகளின் சமையலை ருசி பார்க்க வேண்டும்.
""பெண்களை இன்னும் ஆழமாய் புரிந்து, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். டிக்ஷ்னரியில், "யாத்ரா'வுக்கு அர்த்தம், "பெண்களின் ஞானக்கண்' என குறிப்பிடப்பட வேண்டும்!''
""அட... நீ பெண்களின் ஞானக் கண்ணா?''
""இம்... உலகத்திலேயே அழகான பெண்கள் யாரார் தெரியுமா? பிரசவமான நாற்பது நாள் தாய். எல்.கே.ஜி., போகும் குழந்தைகள் உள்ள தாய். மகள் கர்ப்பமாகும் போது, தானும் கர்ப்பமான 44 வயது தாய். மெனோபாஸ் பீரியர்டு வராத 56 வயது யோகா பெண் அழகானவர்கள்!''
""சம்பாதிப்பும், அதிகாரமும் அதிகம் இருந்தும், நிலை பிறழாத ஆண்களே அழகானவர்கள். அழகு என்பது, "ரேடியன்ட்டா ப்ளேம்பாயன்ட்டா' இருக்கணும்.''
""கம்மிங் பேக் டு தி பாயின்ட்... நான் உனக்கு கிடைக்கலைன்னா என்ன பண்ணுவ?''
""நெகடிவ்வா ஏன் யோசிக்கணும். எனக்கு நீ கிடைக்காம எங்க போய்ட போற? என்னைக் கேட்டியே... நான் உனக்கு கிடைக்காம போனா என்ன பண்ணுவ?''
""நேசியை விட பெட்டரான பெண்ணை இறைவன் குடுக்கத்தான், நேசி எனக்கு கிடைக்கவில்லை என நம்புவேன். உன்னை, உன் கணவனை, உன் குழந்தைகளை பாக்க, நான், என் மனைவி, என் குழந்தைகளும், பரிசு பொதிகளுடன் வருவோம். இரண்டு குடும்பங்களும் பிக்னிக் போகும். நேசியின் உடல், மன மாற்றங்களை அவதானிப்பேன். நீ என்னை ஆராய்வாய்!''
""நல்ல கற்பனை!''
நேசிகாவுக்கு, ஆரஞ்சு நிற லைப் ஜாக்கட் அணிவித்தான், தனக்கும்.
""வா... இருவரும் கடலில் குதிப்போம்!''
""இந்த நள்ளிரவிலா... சுறா மீன், கிறா மீன் கடித்துவிடப் போகிறது!''
""மாட்டாது. நீச்சல் தெரியாவிட்டால் பரவாயில்லை. என்னுடன் மித!''
இருவரும் கடலில் குதித்தனர். கடல் நீர் ஜில்லித்தது. நிலா வெளிச்சம், கடல்நீரில் மஞ்சள் நிற வெளிச்ச கம்பளம் பின்னியிருந்தது. இடது, வலது தூரத்தே, டால்பின் மீன்கள் டைவ் அடித்தன.
""உனக்கு என்னை தொடணும் போல இல்ல?''
""இருக்கு... ஆனா இல்லை!''
""போடா போடா... பாசாங்குக்காரா!'' யாத்ராவின் மீது விழுந்து, உருண்டு, முட்டி, மோதி விளையாடினாள். பின் இருவரும், ஒரு மணிநேரம் மல்லாக்க மிதந்தனர்.
விடியும் நேரம். கிழக்கு வானில் கோட்டைக் கதவுகள் திறந்து, சூரியப் பேரரசன் வெளிப்பட்டான்.
""நம்மின் முதலாம் சந்திப்பு இத்துடன் முடிந்தது!'' யாத்ரா.
""என் மீது காதல் உணர்ந்தாயா?''
""லைட்டா!'' என்றான் யாத்ரா வடிவேலுத் தனமாய். ""லெட் அஸ் வெயிட் பார் டு மோர் அவுட்டிங்ஸ்!''
காதல் தேவதை, ""மீதி ரெண்டு சந்திப்புகளையும் சீக்கிரமா செஞ்சு, காதலை அறிவிங்கப்பா. சஸ்பென்ஸ் தாங்க முடியல...'' கூவினாள்!
— தொடர்ந்து பூக்கும்.
* * *


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.